நிதி அமைச்சகம்
பொதுமக்கள் குறைகளை விரைந்து தீர்ப்பதற்கான கூட்டம் நிதிச்சேவைகள் துறை செயலாளர் எம்.நாகராஜு தலைமையில் நடைபெற்றது
Posted On:
01 JAN 2025 5:11PM by PIB Chennai
நிதிச் சேவைகள் துறை செயலாளர் திரு எம். நாகராஜு தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களால் தீர்வு காணப்பட்ட 20 பொதுமக்கள் குறைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் தங்களது குறைகள் குறித்து புகார் அளித்தவர்கள், பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், ஒழுங்குமுறை அமைப்புகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
2024-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி நடைபெற்ற பிரகதி கூட்டத்தில் பிரதமர் அளித்த உத்தரவுகளை நிதிச்சேவைகள் துறை செயலாளர் மீண்டும் வலியுறுத்தினார். மாதந்தோறும் தீர்வு காணப்பட்ட குறைகளின் தன்மை குறித்து கண்காணிக்க பொதுத்துறை வங்கிகள் / பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்கள், மேலாண்மை இயக்குநர்கள், செயல் இயக்குநர்கள் நிலையில் உள்ள அனைத்து மூத்த அதிகாரிகளும் குறைந்தது 20 குறைகளை மதிப்பாய்வு செய்ய வேண்டும்.
மறுஆய்வுக் கூட்டத்தின் போது, பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் ஒரு நிறுவனத்திற்கு எதிரான உண்மையான குறைகள் காரணமாக புகார்களை எழுப்பியதை நிதி சேவைகள் துறை செயலாளர் கண்காணித்து வாடிக்கையாளர்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் குறை தீர்க்கும் நடைமுறைகள் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
குறைகளுக்கு தீர்வு காண்பதில் ஏதேனும் தளர்வு அல்லது அலட்சியம் இருந்தால் அவை வாடிக்கையாளர் சேவையின் நெறிமுறைகளுக்கு எதிரானது என்றும், நிறுவனத்தின் நற்பெயர் / வர்த்தக முத்திரையின் மதிப்பைக் குறைக்கிறது என்றும் கூறிய திரு நாகராஜு, பொதுமக்களின் குறைகள் நேர்மையாகவும், குறித்த காலக்கெடுவுக்குள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இதேபோன்ற புகார்கள் மீண்டும் வருவதை தடுக்க பொருத்தமான தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளை உருவாக்க வேண்டும் என்றும் நிதிச்சேவைகள் துறை செயலாளர் வலியுறுத்தினார். இது குறைகளுக்கு தீர்வு காண்பதற்கான நேரத்தை மிச்சப்படுத்துவதுடன் தீர்வு நடைமுறையின் செயல்திறனை அதிகரிக்கும்.
***
TS/SV/AG/DL
(Release ID: 2089419)
Visitor Counter : 28