பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு ஏற்பாடு செய்துள்ள கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்பு

Posted On: 23 DEC 2024 9:11PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள சி.பி.சி.ஐ. மைய வளாகத்தில் இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு ஏற்பாடு செய்திருந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பிரதமர் திரு. நரேந்திர மோடி  பங்கேற்றார். இந்தியாவில் உள்ள கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகத்தில் நடைபெறும் இதுபோன்ற நிகழ்ச்சியில் பிரதமர் ஒருவர் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும். கர்தினால்கள், பிஷப்கள் மற்றும் திருச்சபையின் முக்கிய தலைவர்கள் உட்பட கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

நாட்டு மக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ சமுதாயத்தினருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர், சில நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் திரு ஜார்ஜ் குரியன் இல்லத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் தாம் கலந்து கொண்டதாகவும், தற்போது, இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சியில் அனைவருடனும் கலந்துகொள்வதில் பெருமை அடைவதாகவும்  கூறினார்.

அண்மையில் புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் கர்தினால் பட்டம் வழங்கப்பட்ட மேதகு கர்தினால் ஜார்ஜ் கூவாகாட்டை சந்தித்ததை பிரதமர் நினைவு கூர்ந்தார். “ஒரு இந்தியர் இத்தகைய வெற்றியைப் பெறும்போது, ​​ஒட்டுமொத்த நாடும் பெருமை கொள்கிறது. இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்காக நான் மீண்டும் ஒருமுறை கர்தினால் ஜார்ஜ் கூவாகாட்டை வாழ்த்துகிறேன்” என்று திரு மோடி மேலும் கூறினார்.

 

கோவிட்-19 பெருந்தொற்றின் போது நிரூபிக்கப்பட்டதைப் போல, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தேசிய நலன்களுடன் மனித நலன்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறது என்று பிரதமர் வலியுறுத்தினார். பல நாடுகள் தங்கள் சொந்த நலன்களில் கவனம் செலுத்தியபோது, இந்தியா தன்னலமின்றி 150 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு உதவியது, மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை அனுப்பியது, என்றார் அவர்.

இந்தியா 10-வது பெரிய பொருளாதாரத்திலிருந்து 5-வது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளது. இது நமது தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சிக்கு சான்றாகும். இந்த வளர்ச்சிக் காலகட்டம் எதிர்காலத்திற்கான புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதுடன், புதிய தொழில்கள், அறிவியல், விளையாட்டு மற்றும் தொழில்முனைவு போன்ற பல்வேறு துறைகளில் இளைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்துள்ளன. "இந்தியாவின் தன்னம்பிக்கை கொண்ட இளைஞர்கள் நாட்டை முன்னேற்றத்தை நோக்கி செலுத்தி வருவதுடன், வளர்ந்த இந்தியா என்ற கனவு நனவாகும் என்ற நம்பிக்கையை எங்களுக்கு அளித்துள்ளனர்" என்று பிரதமர் மேலும் கூறினார்.

கூட்டு முயற்சிகள் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லும் என்று தாம் நம்புவதாக பிரதமர் கூறினார். "வளர்ந்த இந்தியா என்பது நமது பகிரப்பட்ட இலக்கு, ஒன்றிணைந்து, நாம் அதை அடைவோம். எதிர்கால சந்ததியினருக்கு ஒளிமயமான இந்தியாவை ஏற்படுத்தித்தர உறுதி செய்வது நமது பொறுப்பாகும். மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறி திரு மோடி தனது உரையை நிறைவு செய்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2087456

***

TS/BR/RR


(Release ID: 2087518) Visitor Counter : 11