நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
Posted On:
20 DEC 2024 3:56PM by PIB Chennai
2024 நவம்பர் 25 திங்கட்கிழமை தொடங்கிய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர், 2024 டிசம்பர் 20, வெள்ளிக்கிழமையன்று மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த 26 நாள் கூட்டத்தொடரில் மக்களவையில் 20 அமர்வுகளும், மாநிலங்களவையில்19 அமர்வுகளும் நடைபெற்றன.
இந்தக் கூட்டத்தொடரின் போது, 05 மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன. 04 மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன. 03 மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன. "பாரதிய வாயான் விதேயக், 2024" எனப்படும் இந்திய விமான மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. 1934-ம் ஆண்டு விமானச் சட்டத்தில் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் திருத்தங்களால், இடைச்செருகல்கள்/விடுபடல்கள்/நீக்கங்கள் ஆகியவற்றால் ஏற்படும் தெளிவின்மையை சரி செய்யும் வகையில் விமானச் சட்டத்தை மீண்டும் இயற்றுவதற்கு இந்த மசோதா கொண்டுவரப்பட்டது.
நமது நாடு அதன் அரசியலமைப்பை ஏற்றுக்கொண்ட 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் 2024 நவம்பர் 26 அன்று ஒரு வரலாற்று நிகழ்வை நினைவு கூர்ந்தது. முன்னுரை, உங்கள் அரசியலமைப்பை அறிந்து கொள்ளுங்கள், அரசியலமைப்பை உருவாக்குதல், அந்த நாளில் அதன் மகத்துவத்தைக் கொண்டாடுதல் ஆகிய நான்கு கருப்பொருள்களின் கீழ் ஆண்டு முழுவதற்குமான கொண்டாட்டங்கள் தொடங்கப்பட்டன. இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் 2024 நவம்பர் 26 அன்று நாடாளுமன்ற மைய மண்டபத்தில் ஒரு சிறப்பு விழா நடைபெற்றது. அதில் ஒரு நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் வெளியீட்டு விழாவைத் தவிர, "இந்திய அரசியலமைப்பின் உருவாக்கம் மற்றும் அதன் புகழ்பெற்ற பயணம்", "இந்திய அரசியலமைப்பை உருவாக்குதல்: ஒரு பார்வை" ஆகிய இரண்டு நூல்களை குடியரசு துணைத்தலைவர், பிரதமர், மக்களவைத் தலைவர், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், இரு அவைகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரமுகர்கள் முன்னிலையில் குடியரசுத்தலைவர் வெளியிட்டார். முன்னுரை வாசிப்பில் குடியரசுத் தலைவருடன் உலகெங்கிலும் உள்ள இந்தியர்கள் இணைந்தனர்.
அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டதன் 75-வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, "இந்திய அரசியலமைப்பின் 75 ஆண்டுகளின் புகழ்பெற்ற பயணம்" குறித்த சிறப்பு விவாதம் மக்களவையில் டிசம்பர் 13, 14 ஆகிய தேதிகளிலும், மாநிலங்களவையில் டிசம்பர் 16, 17 ஆகிய தேதிகளிலும் நடைபெற்றது. மக்களவையில் 15 மணி நேரம் 43 நிமிடங்கள் நடைபெற்ற இந்த விவாதத்தில் 62 உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதற்கு பிரதமர் பதிலளித்தார். மாநிலங்களவையில், மொத்தம் 17 மணி நேரம் 41 நிமிடங்கள் விவாதம் நடைபெற்றது. இதில் 80 உறுப்பினர்கள் பங்கேற்றனர். உள்துறை அமைச்சர் பதிலளித்தார்.
2024-25 ஆம் ஆண்டிற்கான துணைமானியக் கோரிக்கைகளின் முதல் தொகுப்பு விவாதிக்கப்பட்டு முழுமையாக வாக்களிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பான நிதி ஒதுக்கீட்டு மசோதா 17.12.2024 அன்று மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டு, 7 மணி 21 நிமிட விவாதத்திற்குப் பின் நிறைவேற்றப்பட்டது.
"ஒரே நாடு, ஒரே தேர்தல்" என்ற தொலைநோக்குப் பார்வையின் கீழ் மக்களவைக்கும் மாநிலங்கள் / யூனியன் பிரதேச சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான நடைமுறையை செயல்படுத்த (i) அரசியலமைப்புச் சட்ட (நூற்று இருபத்தொன்பதாவது) திருத்த மசோதா, 2024, (ii) யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா, 2024 ஆகியவை மக்களவையில் 2024, டிசம்பர் 17 அன்று அறிமுகம் செய்யப்பட்டு, டிசம்பர் 20 அன்று கூட்டு நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்பப்பட்டன.
மக்களவையின் செயல்திறன் சுமார் 54.5% ஆகவும், மாநிலங்களவையின் செயல்திறன் சுமார் 40% ஆகவும் இருந்தது.
மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்ட மசோதாக்கள், மக்களவை / மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள், இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் விவரம் வருமாறு:
18 வது மக்களவையின் 3 வது அமர்வு மற்றும் மாநிலங்களவையின் 266 வது அமர்வில் சட்டமியற்றும் அலுவல்கள்
மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்ட மசோதாக்கள்
கடலோரக் கப்பல் போக்குவரத்து மசோதா, 2024.
வணிகக் கப்பல் போக்குவரத்து மசோதா, 2024.
அரசியலமைப்புச் சட்ட (நூற்று இருபத்தொன்பதாவது திருத்த) மசோதா, 2024.
யூனியன் பிரதேசங்கள் சட்ட (திருத்த) மசோதா, 2024
நிதி ஒதுக்கீடு (எண்.3) மசோதா, 2024
நாடாளுமன்ற அவைகளின் கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்ட மசோதாக்கள்
1. அரசியலமைப்புச் சட்ட (நூற்று இருபத்தொன்பதாவது திருத்தம்) மசோதா, 2024.
2. யூனியன் பிரதேசங்கள் சட்ட (திருத்த) மசோதா, 2024
மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள்
வங்கி சட்டங்கள் (திருத்த) மசோதா, 2024
ரயில்வே (திருத்த) மசோதா, 2024
பேரிடர் மேலாண்மை (திருத்த) மசோதா, 2024.
நிதி ஒதுக்கீடு (எண் 3) மசோதா, 2024.
மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள்
எண்ணெய் வயல்கள் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) திருத்த மசோதா, 2024.
இந்திய விமான மசோதா , 2024.
கொதிகலன்கள் மசோதா, 2024.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மசோதா
இந்திய விமான மசோதா, 2024.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2086475
***
TS/SMB/RJ/DL
(Release ID: 2086608)
Visitor Counter : 42