குடியரசுத் தலைவர் செயலகம்
செகந்திராபாத்தில் உள்ள பாதுகாப்பு மேலாண்மை கல்லூரிக்கு கௌரவம் மிக்க கொடியை குடியரசுத் தலைவர் வழங்கினார்
Posted On:
20 DEC 2024 1:54PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு (டிசம்பர் 20, 2024) செகந்திராபாத்தில் உள்ள பாதுகாப்பு மேலாண்மை கல்லூரிக்கு கௌரவம் மிக்க கொடிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், நாட்டின் மேம்பட்ட பாதுகாப்பு மேலாண்மைத் திறனானது தூதரக ரீதியில் ராணுவ கூட்டாண்மையை வலுப்படுத்தவும், பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதியை அதிகரிக்கவும் உதவிடும் என்று கூறினார். உலகளவிலான பாதுகாப்பு மன்றங்களில் ஆக்கப்பூர்வமான நிலைப்பாட்டை பராமரிக்கவும் இது இந்தியாவுக்கு உதவிடும்.
தொழில்நுட்ப முன்னேற்றங்கள் தேசிய பாதுகாப்பில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துவதாக குடியரசுத் தலைவர் கூறினார். பாரம்பரிய வரையறைகள், போர் முறைகள் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், புதிய உத்திசார் கூட்டாண்மை போன்றவை சவாலாக உள்ளன என்றும் குறிப்பிட்டார். செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு இந்தியா உயர் முன்னுரிமை அளித்து வருவதாகவும் அவர் கூறினார். இத்தகைய தொழில்நுட்பங்களை பாதுகாப்புப் படைகளில் பயன்படுத்துவது என்பது சர்வதேச அளவில் போட்டியிடும் திறனை மேம்படுத்தும் என்று கூறினார். செயற்கை நுண்ணறிவு, ஆளில்லா விமானங்கள், இணைய போர் திறன்கள், விண்வெளி பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய முழுமையான அணுகுமுறையில் இந்தியா கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
நாட்டின் ஆயுதப்படையானது தொழில்நுட்ப முன்னேற்றங்கள், மாறிவரும் செயல்பாட்டு நடைமுறைகள். ஆகியவற்றுடன் தங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்று குடியரசுத் தலைவர் வலியுறுத்தினார். வேகமாக மாறிவரும் பாதுகாப்பு அம்சங்களில் சிறந்து விளங்க அனைவரும் பாடுபட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
பொருளாதார, ராணுவ கட்டமைப்புகள், பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பு தொடர்பான விவாதங்களில் இந்தியாவின் செல்வாக்கு குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி கண்டுள்ளதாக குடியரசுத் தலைவர் கூறினார். உலக அளவில் இந்தியாவின் பாதுகாப்புத் திறன்கள், அதன் வலிமையையும், தொலைநோக்குப் பார்வையையும் பிரதிபலிப்பதாக உள்ளது என்று கூறினார். தற்சார்பு, தொழில்நுட்ப முன்னேற்றம், உத்திசார் ஒத்துழைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், இந்தியா தனது எல்லைகளைப் பாதுகாப்பதுடன், உலகளவிலான அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கும் பங்களித்து வருகிறது.
***
(Release ID: 2086412)
TS/SV/RR/KR
(Release ID: 2086467)
Visitor Counter : 31