பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான இந்திய - ரஷ்ய அரசுகளுக்கு இடையிலான ஆணையத்தின் 21-வது கூட்டத்தில் பங்கேற்க பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் நாளை ரஷ்யா செல்கிறார்

Posted On: 07 DEC 2024 10:03AM by PIB Chennai

பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், 2024 டிசம்பர் 08 முதல் 10ம் தேதி வரை ரஷ்யாவில் அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது, பாதுகாப்பு அமைச்சரும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் திரு ஆண்ட்ரே பெலோசோவ்-வும் டிசம்பர் 10-ம் தேதி மாஸ்கோவில் நடைபெறும் ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான இந்திய-ரஷ்ய அரசுகளுக்கு இடையிலான ஆணையத்தின் (IRIGC-M&MTC) 21- வது கூட்டத்திற்கு இணைத் தலைமை வகிப்பார்கள்.

இரு நாட்டு ராணுவத்திற்கு இடையேயான ஒத்துழைப்பு, பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக உறவுகள் போன்றவற்றை இரு அமைச்சர்களும் ஆய்வு செய்து அதை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துவார்கள். பரஸ்பர அக்கறை கொண்ட தற்கால பிராந்திய, உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் கருத்துக்களை பரிமாறிக் கொள்வார்கள்.

இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, டிசம்பர் 09 அன்று கலினின்கிராட்டில் உள்ள யந்திரா கப்பல் கட்டும் தளத்தில் இந்திய கடற்படையின் சமீபத்திய பல்நோக்கு வழிகாட்டி ஏவுகணை போர்க்கப்பலான 'ஐஎன்எஸ் துஷில்'-ஐ பாதுகாப்புத் துறை அமைச்சர் இயக்கி வைக்கிறார். ராஜ்நாத் சிங்குடன் கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதியும் இந்த விழாவில் பங்கேற்கிறார்.

மேலும், இரண்டாம் உலகப் போரில் கொல்லப்பட்ட சோவியத் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மாஸ்கோவில் உள்ள 'அறியப்படாத வீரர்களின் கல்லறையில்' பாதுகாப்புத் துறை அமைச்சர் அஞ்சலி செலுத்துவார். இந்திய சமூகத்தினருடனும் திரு ராஜ்நாத் சிங் கலந்துரையாடவுள்ளார்.

***

 

PLM /DL


(Release ID: 2081861) Visitor Counter : 37