பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அஷ்டலட்சுமி மகா திருவிழாவை டிசம்பர் 6 அன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார்

பாரம்பரிய கலைகள், கைவினைப்பொருட்கள் மற்றும் கலாச்சார நடைமுறைகளை ஒன்றிணைத்து, வடகிழக்கு இந்தியாவின் பரந்த கலாச்சார அம்சங்களை இத்திருவிழா முன்னிலைப்படுத்தும்

இந்த விழா பாரம்பரிய கைவினைப்பொருட்கள், கைத்தறி, வேளாண் பொருட்கள் மற்றும் சுற்றுலா ஆகியவற்றில் பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்தும்

Posted On: 05 DEC 2024 6:07PM by PIB Chennai

வடகிழக்கு இந்தியாவின் கலாச்சார துடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்ற தனது உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, பிரதமர் திரு நரேந்திர மோடி டிசம்பர் 6 அன்று பிற்பகல் 3 மணியளவில் புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் அஷ்டலட்சுமி மகா திருவிழாவைத் தொடங்கி வைக்கிறார்.

முதன்முறையாக கொண்டாடப்படும் இந்த மூன்று நாள் கலாச்சார விழா டிசம்பர் 6 முதல் 8 வரை நடைபெறும். இது வடகிழக்கு இந்தியாவின் பரந்த கலாச்சார அம்சங்களை முன்னிலைப்படுத்துவதுடன், பாரம்பரிய கலைகள், கைவினைப்பொருட்கள் மற்றும் கலாச்சார நடைமுறைகளை ஒன்றிணைக்கும்.

பாரம்பரிய கைவினைப் பொருட்கள், கைத்தறி, வேளாண் பொருட்கள் சுற்றுலா போன்ற துறைகளில் பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக, திருவிழாவில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறும். இந்த விழாவில் கைவினைஞர் கண்காட்சிகள், கிராமிய சந்தைகள், மாநில அரங்குகள் மற்றும் வடகிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு  தேவையான பகுதிகளில் தொழில்நுட்ப அமர்வுகள் ஆகியவை இடம்பெறும். முக்கிய நிகழ்வுகளில் முதலீட்டாளர்கள் வட்டமேசை சந்திப்பு, வாங்குபவர்-விற்பவர் சந்திப்புகள் ஆகியவை அடங்கும். இது கட்டமைப்புகள், கூட்டாண்மைகள் மற்றும் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் கூட்டு முயற்சிகளை உருவாக்குவதற்கும், வலுப்படுத்துவதற்கும் ஒரு தனித்துவமான வாய்ப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த திருவிழாவில் தேசிய அளவில் வடகிழக்கு இந்தியாவின் வளமான கைத்தறி மற்றும் கைவினைப் பாரம்பரியங்களை வெளிப்படுத்தும் வடிவமைப்பு மாநாடு மற்றும் ஆடை அலங்கார காட்சிகள் இடம்பெறும். பிராந்தியத்தின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுகின்ற இந்த திருவிழாவில் துடிப்பான இசை நிகழ்ச்சிகள் மற்றும் வடகிழக்கு இந்தியாவின் உள்நாட்டு உணவு வகைகளும் காட்சிப்படுத்தப்படும்.

***

TS/IR/AG/DL


(Release ID: 2081338) Visitor Counter : 36