தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
சினிமாவின் கொண்டாட்டம் தொடரும் என்ற உறுதிமொழியுடன் 55வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நிறைவடைந்தது
ஒரு புதிய தொடக்கத்திற்கான முடிவைக் குறிக்கும் வகையில் கோவாவில் உள்ள டாக்டர். ஷியாமா பிரசாத் முகர்ஜி உள்விளையாட்டு அரங்கில் 55வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நிறைவுக்கு வந்தது. சினிமாவின் மாயாஜாலத்தையும் கதை சொல்லும் உணர்வையும் கொண்டாடும் ஒரு கண்கவர் நிறைவு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வு உலக மற்றும் இந்திய சினிமாவின் ஒன்பது நாள் கொண்டாட்டத்திற்கு பொருத்தமான முடிவாக இருந்தது. திரைப்பட தயாரிப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் பிற திறத்துறையினரை ஒன்றிணைத்தது.
சிகப்பு கம்பள தருணங்கள் முதல் மனதைக் கவரும் நிகழ்ச்சிகள் மற்றும் தலைசிறந்த கதைசொல்லல் வரை, நிறைவு விழாவானது, திரையுலகின் சிறந்த படைப்புகள் மற்றும் அழியாத முத்திரையைப் பதித்த கலைஞர்களை கௌரவிக்கும் நட்சத்திரங்கள் நிறைந்த நிகழ்வாக இருந்தது.
மனிதநேயம், நிலைத்தன்மை மற்றும் தலைமுறைப் பிணைப்புகளின் கதையை உள்ளடக்கிய, செக் திரைப்பட இயக்குனரான போஹ்டன் ஸ்லாமா இயக்கிய "டிரை சீசன்" என்ற திரைப்படத்துடன் விழா நிறைவடைந்தது.
இந்த ஆண்டு சிறந்த திரைப்படத்திற்கான தங்க மயில் விருதை டாக்ஸிக் திரைப்படம் பெற்றது. கோவா முதலமைச்சர் திரு பிரமோத் சாவந்த், சர்வதேச போட்டியின் ஜூரி தலைவர் திரு அசுதோஷ் கோவாரிகர் ஆகியோர் விருதை வழங்கினர். லிதுவேனியன் திரைப்படத் தயாரிப்பாளரும் திரைக்கதை எழுத்தாளருமான சாவ்லே பிலுவைத்தேயின் முதல் திரைப்படம் இதுவாகும்.
சிறந்த இயக்கம், திரையில் நேர்த்தியான கதைசொல்லல் ஆகியவற்றை அங்கீகரித்து, சிறந்த இயக்குநருக்கான வெள்ளி மயில் விருதை ரோமானிய எழுத்தாளரும் இயக்குநருமான போக்டன் முரேசானு ‘தி நியூ இயர் தட் நெவர் கேம்’ படத்திற்காக பெற்றார்.
ப்ரெஞ்ச் திரைப்படமான ஹோலி கவ்வில் அபாரமான மற்றும் அழுத்தமான நடிப்பிற்காக சிறந்த நடிகருக்கான (ஆண்) வெள்ளி மயில் விருதை நடிகர் கிளெமென்ட் ஃபேவ் பெற்றார்.
வெஸ்ட்டா மட்டுலிட்டே, லேவா ருபேகைடே ஆகியோருக்கு ‘டாக்ஸிக்’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான வெள்ளி மயில் விருது வழங்கப்பட்டது.
திரைப்படத் தயாரிப்பில் படைப்புத் திறனைப் பாராட்டி, ‘ஹோலி கெள’ படத்துக்காக, பிரெஞ்சு திரைப்படத் தயாரிப்பாளர் லூயிஸ் கர்வாசியருக்கு சிறப்பு ஜூரி விருது வழங்கப்பட்டது.
சிறந்த அறிமுக திரைப்படத்திற்கான விருதினை அமெரிக்க அறிமுக இயக்குநர் சாரா ஃபிரைட்லேண்டின் ஃபேமிலியர் டச் என்ற திரைப்படம் வென்றது.
இயக்குநர் நவ்ஜோத் பண்டிவடேகர் (மராத்தி திரைப்படமான 'கரத் கணபதி'க்காக) தனது விதிவிலக்கான கதைசொல்லலுக்காக இந்திய திரைப்படத்தின் சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருதைப் பெற்றார்.
அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் உரையாடலை ஊக்குவிக்கும் சினிமாப் பணிகளைக் கொண்டாடும் மதிப்புமிக்க ஐசிஎஃப்டி-யுனெஸ்கோ காந்தி பதக்கம், லெவன் அகினின் 'கிராசிங்' திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.
ஆஸ்திரேலிய திரைப்பட இயக்குநர் பிலிப் நொய்ஸுக்கு சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி, சினிமா கலைக்கு அவர் ஆற்றிய விலைமதிப்பற்ற பங்களிப்பை கௌரவித்தது விழாவின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.
விருதினைப் பெற்றுக்கொண்ட திரைப்படத் தயாரிப்பாளருமான பிலிப் நொய்ஸே, “இந்தியப் பார்வையாளர்கள் திரைப்படங்களை முழுவதுமாகப் பார்ப்பது போல் எதுவும் இல்லை. நான் இந்தியாவுக்கு முதலில் வந்தபோது அதை அனுபவித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். பார்வையாளர்களுடன் சேர்ந்து நான் முதல் முறையாக திரைப்படங்களைப் பார்ப்பது போல் இருந்தது" என்றார்
சத்யஜித் ரேயின் மகத்துவம் பற்றி அவர் பேசுகையில், “எங்களைப் பொறுத்தவரை, சத்யஜித் ரே ஓர் உத்வேக சக்தி.குறிப்பாக அவரது படங்கள் அளவில் சிறியதாக இருந்தாலும், படங்களின் பெரிய தன்மையால் நான் ஈர்க்கப்பட்டேன். திரைப்படத் தயாரிப்பின் எதிர்காலத்தைப் பொறுத்தவரை திரைப்படங்கள் சிறியதாக இருக்கும், ஆனால் யோசனைகள் பெரியதாக இருக்கும் என்பதை சத்யஜித் ரே திரைப்படங்கள் குறிக்கிறது" என்றார்.
கதைசொல்லலில் ஏற்பட்ட மாற்றத்தை அங்கீகரித்து, டிஜிட்டல் துறையில் புதுமை மற்றும் கலைத் தகுதியைக் கொண்டாடும் வகையில், சிறந்த வலைத் தொடர் (ஓடிடி) விருது ‘லம்பன்’ படைத்துக்கு வழங்கப்பட்டது. ‘லம்பன்’ படத்தை நிபுன் தர்மாதிகாரி இயக்கியிருந்தார்.
நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி இந்த ஆண்டின் சிறந்த இந்திய திரைப்பட ஆளுமை விருதைப் பெற்றார். இவருக்கு
கோவா முதலமைச்சர் திரு பிரமோத் சாவந்த், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சக செயலாளர் திரு சஞ்சய் ஜாஜு ஆகியோர் விருதை வழங்கினர்.
விருதினைப் பெற்றுக்கொண்ட விக்ராந்த் மாஸ்ஸி, “இது எனக்கு மிகவும் சிறப்பான தருணம்; இந்த விருது கிடைக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும். ஆனால் படத்தில் எனது கதாபாத்திரம் செய்தது போல் மீண்டும் தொடங்க நாம் தயாராக இருக்க வேண்டும்" என்றார்.
இந்த விழாவில் இந்திய திரையுலகின் பிரபல இயக்குனர் ரமேஷ் சிப்பி, பிரபல நடிகை ஜெயபிரதா ஆகியோர் இந்திய சினிமாவிற்கு அவர்களின் பங்களிப்பிற்காக கோவா முதலமைச்சர் திரு பிரமோத் சாவந்த், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சக செயலாளர் திரு சஞ்சய் ஜாஜு ஆகியோரால் சிறப்பாக பாராட்டப்பட்டனர்.
தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் , தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் ஆகியவற்றின் முயற்சிகளைப் பாராட்டிய கோவா முதலமைச்சர் திரு பிரமோத் சாவந்த், “திரைப்பட சந்தை போன்ற பல புதிய முயற்சிகளின் அடிப்படையில் இந்தத் திரைப்பட விழா தனித்துவமானது. இது மிகவும் புரட்சிகரமான முறையில் அனைவருக்கும் பயனளித்துள்ளது . இந்த முறை, திரைப்பட ஆர்வலர்கள் திரைப்படங்களை ரசிப்பதற்காக நாங்கள் கோவா நகரம் முழுவதும் திரைப்படங்களை திரையிட்டோம். இந்த ஆண்டு 195-க்கும் அதிகமான படங்கள் திரையிடப்பட்டுள்ளன" என்றார்.
தகவல், ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர், திரு சஞ்சய் ஜாஜு கூறுகையில், “இந்த ஆண்டு இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவை விவரிக்கும் ஒரு வார்த்தை, முன்னெப்போதும் கண்டிராதது. ஏனென்றால், பிரதமர் திரு நரேந்திர மோடி எப்போதும் நமது இளம் படைப்பாளிகளைப் பற்றியும், உள்ளடக்கத்தின் அடுத்த ஏற்றுமதியாளராக இந்தியா இருக்க வேண்டும் என்பது பற்றியும் பேசுகிறார். இந்த ஆண்டு திரைப்பட விழாவை அனைத்து இளம் படைப்பாளிகளுக்கும், நாளைய படைப்பு மனங்களுக்கும், வளரும் திறமைகளுக்கும், நாடு முழுவதிலுமிருந்து வரும் கதைசொல்லிகளுக்கும் அர்ப்பணிக்கிறோம். இந்தவிழா இதுவரை தரத்திலும் அளவிலும் சிறந்ததாக இருந்து வருகிறது. இதை சாத்தியமாக்கிய கோவா மக்களுக்கும், நாட்டு மக்களுக்கும், அனைத்து கலைஞர்கள் மற்றும் கலைஞர்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன்" என்றார்.
விழாவில் பார்வையாளர்களிடம் உரையாற்றிய விழா இயக்குநர் சேகர் கபூர் மகிழ்ச்சியையும் திருப்தியையும் வெளிப்படுத்தினார்: “உலகின் மிகப்பெரிய திரைப்பட விழாவை நாங்கள் வழங்கியுள்ளோம். ஃபிலிம் பஜார், மாஸ்டர் வகுப்புகள் போன்ற முயற்சிகள் இந்த விழாவை மாபெரும் வெற்றியடையச் செய்துள்ளன" என்று அவர் கூறினார்.. விழாவில் உற்சாகமாக பங்கேற்ற கோவா மக்களை அவர் பாராட்டினார்.
சமீர் கோச்சார் தொகுத்து வழங்கிய விழா, திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள், அரசு அதிகாரிகள் சர்வதேச விருந்தினர்கள் உட்பட பார்வையாளர்களால் நிரம்பியிருந்தது. மாலை அன்பான வரவேற்பு, அதைத் தொடர்ந்து தேசிய கீதத்தின் ஒலிபரப்பு என கொண்டாட்டத்திற்கான சாயலை ஏற்படுத்தியது. .
இந்தியப் பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற மரபுகளின் செழுமையை வெளிப்படுத்தும் "ரிதம்ஸ் ஆஃப் இந்தியா" என்ற தலைப்பில் நடிகையும் நடனக் கலைஞருமான ஷ்ரியா சரண் வழங்கிய நிறைவு நிகழ்ச்சியுடன் மாலை நேரம் அதன் உச்சத்தை எட்டியது.
55வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழா முடிவடையும் போது, 55 ஆண்டுகால சினிமா சாதனைகள், அர்த்தமுள்ள உரையாடல் மற்றும் கலாச்சார பரிமாற்றத்தின் பாரம்பரியத்தை அது விட்டுச்சென்றது. இந்த ஆண்டின் விழா திரைப்படம் எடுக்கும் கலையைக் கொண்டாடியது மட்டுமின்றி, வாழ்க்கையை ஊக்குவிக்கவும், இணைக்கவும், மாற்றவும் சினிமாவின் ஆற்றலை அடிக்கோடிட்டுக் காட்டியது.
***
TS/SMB/RR/KR/DL
(Release ID: 2079108)
Visitor Counter : 27