தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

ஹைதராபாத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறி பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது குறித்த ஊடக அறிக்கையை தேசிய மனித உரிமை ஆணையம், தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது

Posted On: 29 NOV 2024 1:18PM by PIB Chennai

நவம்பர் 27 அன்று தெலங்கானாவில் உள்ள ஹைதராபாத்தின் ராய்துர்கம் பகுதியில் பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டதாக வெளியான ஊடக அறிக்கையை, தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆர்சி), தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

ஊடக அறிக்கையின் உள்ளடக்கம் உண்மையாக இருந்தால், பாதிக்கப்பட்ட பெண்ணின் மனித உரிமை மீறப்பட்டது தொடர்பான கடுமையான பிரச்சினை எழுகிறது என ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரின் நிலை உள்ளிட்ட விரிவான அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு தெலங்கானா மாநில தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாநிலத்தில் வாடகைத் தாய் என்ற பெயரில் பெண்கள் துன்புறுத்தப்படுவது குறித்து மக்களிடம் இருந்து ஏதேனும் புகார்கள் இருந்தால், அதுபற்றி காவல்துறை அதிகாரிகளிடமிருந்தும் ஆணையம் அறிய விரும்புகிறது.

ஒடிசாவைச் சேர்ந்த 25 வயதான பெண், ரூ.10 லட்சம்  தருவதாக கூறி, வாடகைத் தாயாக இருப்பதற்காக இடைத்தரகர்கள் மூலம் ஹைதராபாத் அழைத்து வரப்பட்டார். அங்கு கணவனை விட்டு தனியாக பிரிக்கப்பட்டு, தனி பிளாட்டில் தங்க வைக்கப்பட்டார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் நான்கு வயது மகனுடன் வேறு வீட்டில் தங்கியிருந்தார். நவம்பர் 26-ம் தேதி, அந்தப் பெண் தனது கணவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அங்கு தங்க விரும்பவில்லை என்றும், அந்த நபர் தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவதால் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்வதாகவும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதன் பின்பு ஒரு ஆணின் பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

***

(Release ID:2078925)

TS/PKV/AG/KR

 


(Release ID: 2078977) Visitor Counter : 20


Read this release in: English , Urdu , Hindi , Bengali-TR