சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மற்றும் கல்வி அமைச்சகத்துடன், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது

Posted On: 22 NOV 2024 5:00PM by PIB Chennai

பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மற்றும் மத்திய கல்வி அமைச்சகத்துடன், மத்திய சுகாதார அமைச்சகம் இன்று முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜெ பி நட்டா மற்றும் மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இன்று கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, பிரதம மந்திரி ஸ்வஸ்த்ய சுரக்ஷா திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் புதிய அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்திற்கு (எய்ம்ஸ்) வழங்கப்படுவது போல, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரிக்கு நிதியுதவி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திற்கு மானியம் வழங்குவதன் மூலம், இந்த பிராந்திய மக்களுக்கு குறைந்த செலவில் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சுகாதார சேவைகள் கிடைப்பதை மேம்படுத்தும். மருத்துவ பராமரிப்பு சேவைகள்  வழங்குவதை மேம்படுத்துவதன் மூலம், மேல் சிகிச்சைக்காக பிற மருத்துவமனைகளுக்கு பரிந்துரைப்பதை குறைப்பதில் இது குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கும். இது நோயாளியின் அனுபவம் மற்றும் மனநிறைவை அதிகரிப்பது மட்டுமல்லாமல், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான செலவை கணிசமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய சுகாதார அமைச்சகம் அவ்வப்போதுபனாரஸ் இந்து பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிக்கு புதிய வசதிகளை ஏற்படுத்தவும், தற்போதுள்ளவற்றை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது. ஐ.எம்.எஸ். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் சிறப்பான நிலையையும், சுகாதார சேவைகளின் தரத்தை மேலும் மேம்படுத்துவதற்கான அதன் திறனையும் கருத்தில் கொண்டு, மிக உயர்ந்த தரத்திலான சுகாதார சேவைகளை வழங்குவதற்கு மேம்பட்ட ஆதரவை வழங்க வேண்டிய அவசியம் உணரப்பட்டது.

இன்றைய தினம் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று குறிப்பிட்ட திரு. ஜெ. பி. நட்டா, இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், மத்திய அரசின் "ஒட்டுமொத்த அரசு" அணுகுமுறையின் விளைவாகும் என்றும், இது மக்கள் நலனை நோக்கமாகக் கொண்ட இலக்குகளை அடைய பல்வேறு அரசுத் துறைகளிடையே ஒத்துழைப்பை அதிகரிக்கிறது என்றும் கூறினார்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இடையே நெருங்கிய ஒத்துழைப்பை ஏற்படுத்தி, கற்பித்தல் தரத்தை உயர்த்தவும், ஆராய்ச்சியில் சிறந்து விளங்கவும் வழிவகுக்கும் என்று திரு. நட்டா வலியுறுத்தினார். பனாரஸ் இந்து பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மற்றும் எய்ம்ஸ் இடையே வழக்கமான மாணவர் மற்றும் ஆசிரியர்கள் பரிமாற்றம் குறித்து அவர் முன்மொழிந்தார்.

நிகழ்ச்சியில் பேசிய திரு. தர்மேந்திர பிரதான், எய்ம்ஸ் மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் இடையேயான கல்வி மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்பை வலுப்படுத்தி, அறிவு மற்றும் நிபுணத்துவத்தை, குறிப்பாக மருத்துவ மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துதல், ரோபோட்டிக்ஸ் அறுவை சிகிச்சை, மருத்துவமனை நிர்வாகம் மற்றும் ஆளுமை ஆகிய துறைகளில் பகிர்ந்து கொள்ள வழிவகுக்கும் என்று கூறினார். பனாரஸ் இந்து பல்கலைக்கழக மருத்துவ கல்லூரியை உலகத் தரம் வாய்ந்த நிறுவனமாக உருவாக்க இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவும் என்றும் அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2076022

***

TS/MM/AG/DL


(Release ID: 2076108) Visitor Counter : 28


Read this release in: English , Urdu , Hindi