தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
iffi banner
0 4

'சஃபர்நாமா' துவக்கத்துடன் இஃப்பியெஸ்டா(IFIESTA) 'பயணம்' தொடங்கியது

55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவையொட்டி  பனாஜியில் உள்ள கலா அகாடமியில் இன்று 'சஃபர்நாமா: இந்திய சினிமாவின் பரிணாமம்' கண்காட்சியை தகவல், ஒலிபரப்பு அமைச்சக செயலாளர் திரு சஞ்சய் ஜாஜுவும் பிரபல திரைப்பட நடிகரும் தயாரிப்பாளருமான திரு அக்கினேனி நாகார்ஜுன ராவும்  திறந்து வைத்தனர்.

தொடக்க விழாவில் பேசிய திரு ஜாஜு, இந்திய சினிமாவின் வரலாறு இந்தியா காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தபோது தயாரிக்கப்பட்ட ராஜா ஹரிச்சந்திரா திரைப்படத்திலிருந்து தொடங்குகிறது என்றார். அதை வைத்து  ஒரு சினிமா மனதை இந்தியா உருவாக்க முடிந்தது. அந்தப் பாரம்பரியம் இன்று வரை தொடர்கிறது என்று அவர் கூறினார்.

பிரபல நடிகர் திரு நாகார்ஜுனா செய்தியாளர்களுடன் உரையாடும் போது, தன்னைப் பொறுத்தவரை சினிமா என்பது இந்தியன் என்றும் மொழி அதற்குத் தடை இல்லை என்றும் மகிழ்ச்சியுடன் எடுத்துரைத்தார். தனது தந்தை அக்கினேனி நாகேஸ்வர ராவ் மற்றும்  ராஜ் கபூர், முகமது ரஃபி, தபன் சின்ஹா போன்ற பிற நூற்றாண்டு ஜாம்பவான்களால் நிறுவப்பட்ட மரபு உண்மையிலேயே முன்னோடியில்லாதது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய சினிமாவை வடிவமைத்த இந்த ஆளுமைகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இந்த நான்கு சினிமா ஜாம்பவான்களையும் கௌரவிக்கும் வகையில், நான்கு காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டு அவற்றில் சுவரொட்டிகள், வீடியோக்கள், நினைவுப் பொருட்கள் உள்ளிட்ட அரிய ஆவணங்கள்  இடம் பெற்றுள்ளன.

நவம்பர் 20 முதல் 28, 2024 வரை பொதுமக்களுக்கு திறந்திருக்கும், இந்த கண்காட்சி இந்திய சினிமாவின் ஆரம்ப நாட்களில் இருந்து சமகால கண்டுபிடிப்புகள் வரையிலான பயணத்தின் ஆற்றல்மிக்க ஆய்வை வழங்குகிறது. இது கணிசமான எண்ணிக்கையிலான பள்ளி மாணவர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது இளைய தலைமுறையினருக்கு ஒரு கல்வி அனுபவமாக மாறும்.

இந்த நிகழ்ச்சியில் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சக செயலாளர் திரு சஞ்சய் ஜாஜு கேடிபி – பாரத் ஹைன் ஹம், அனிமேஷன் தொடர் சீசன் 2-ஐ தொடங்கி வைத்தார். சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த இந்த அனிமேஷன் தொடர் 2024, டிசம்பர் 1 முதல் தூர்தர்ஷன், நெட்ஃப்ளிக்ஸ், பிரைம் வீடியோ, வேவ்ஸ் ஆகியவற்றில் ஒளிபரப்பாகும். இந்த த்தொடர் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, மராத்தி, குஜராத்தி, பெங்காலி, அசாமி, ஒடியா உள்ளிட்ட 12 இந்திய மொழிகளிலும், பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், ரஷ்யன், கொரியன், சீனம், அரபு ஆகிய ஏழு சர்வதேச மொழிகளிலும் ஒளிபரப்பு ஆகும்.

*****

(Release ID: 2075669)

TS/SMB/RS/KR

iffi reel

(Release ID: 2075952) Visitor Counter : 6