குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

லோக்மந்தன்-2024 தொடக்க அமர்வில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு

Posted On: 22 NOV 2024 12:25PM by PIB Chennai

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இன்று (நவம்பர் 22, 2024) லோக்மந்தன்-2024 தொடக்க விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், லோக் மந்தன் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த அனைத்து தரப்பினரையும் பாராட்டினார். இந்தியாவின் வளமான கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் மரபுகளில் ஒற்றுமையின் இழைகளை வலுப்படுத்த இது பாராட்டத்தக்க முயற்சி என்று அவர் கூறினார். அனைத்து மக்களும்  இந்தியாவின் கலாச்சார மற்றும் அறிவுசார் பாரம்பரியத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்றும், நமது விலைமதிப்பற்ற மரபுகளை வலுப்படுத்த வேண்டும்  என்றும் அவர் வலியுறுத்தினார் .

பன்முகத்தன்மை  நமது அடிப்படை ஒற்றுமைக்கு அழகின் வானவில்லை வழங்குகிறது  என்று குடியரசுத் தலைவர் கூறினார். நாம் வனவாசிகளாக இருந்தாலும், கிராமவாசிகளாக இருந்தாலும் அல்லது நகரவாசிகளாக இருந்தாலும், நாம் அனைவரும் இந்தியர்கள். இந்தத் தேசிய ஒற்றுமை உணர்வு அனைத்து சவால்களையும் மீறி நம்மை ஒற்றுமையாக வைத்திருக்கிறது. நமது சமூகத்தைப் பிளவுபடுத்தவும் பலவீனப்படுத்தவும் பல நூற்றாண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார். நமது இயற்கையான ஒற்றுமையை குலைக்க செயற்கையான வேறுபாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், நமது குடிமக்கள் இந்தியத்தன்மையின் உணர்வால் தேசிய ஒற்றுமை தீபத்தை ஏற்றி வைத்திருக்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.

பண்டைய காலம் முதலே இந்திய சித்தாந்தத்தின் தாக்கம் உலகில் பரவியுள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறினார். இந்தியாவின் மத நம்பிக்கைகள், கலை, இசை, தொழில்நுட்பம், மருத்துவ முறைகள், மொழி, இலக்கியம் ஆகியவை உலகம் முழுவதும் பாராட்டப்பட்டுள்ளன. லட்சிய வாழ்க்கைக்கான விழுமியங்களை உலக சமுதாயத்திற்கு முதன்முதலில் பரிசளித்தவர்கள் இந்தியத் தத்துவ ஞானிகள் ஆவர் .  நமது முன்னோர்களின் அந்தப் பெருமைமிகு பாரம்பரியத்தை வலுப்படுத்த வேண்டியது நமது பொறுப்பு என அவர் கேட்டுக் கொண்டார்.

பல நூற்றாண்டுகளாக ஏகாதிபத்தியமும், காலனித்துவ சக்திகளும் இந்தியாவைப் பொருளாதார ரீதியாக சுரண்டியதுடன் மட்டுமின்றி, நமது சமூக கட்டமைப்பையும் அழிக்க முயன்றன என்று குடியரசுத் தலைவர் கூறினார். நமது வளமான அறிவார்ந்த பாரம்பரியத்தை இழிவாகப் பார்த்த ஆட்சியாளர்கள் மக்களிடையே கலாச்சாரத் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தினர். நமது ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் இத்தகைய மரபுகள் நம் மீது திணிக்கப்பட்டன. பல நூற்றாண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்டதால், நமது  மக்கள்  அடிமைத்தனத்தின் மனநிலைக்கு பலியாகினர். இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற மக்களிடையே  'தேசம் முதலில்' என்ற உணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும். இந்த உணர்வை லோக்மந்தன் பரப்பி வருவது குறித்து குடியரசுத் தலைவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

***

(Release ID: 2075851)
TS/PKV/RR/KR


(Release ID: 2075935) Visitor Counter : 17