இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
2025 ஏப்ரலில் பீகாரில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள் மற்றும் பாரா விளையாட்டுகள் நடைபெறும்: டாக்டர் மாண்டவியா
Posted On:
21 NOV 2024 5:20PM by PIB Chennai
பீகாரில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு நடைபெறும். பீகாரில் நடைபெறும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் முன்னோடி நிகழ்ச்சி, நாட்டின் கேலோ இந்தியா வரைபடத்தில் புதிதாக சேர்க்கப்படும்.
முதல் முறையாக, கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளைப் போலவே, கேலோ இந்தியா பாரா விளையாட்டுகளும் பீகாரில் நடத்தப்பட உள்ளன. இளைஞர் விளையாட்டுப் போட்டிகளைத் தொடர்ந்து பாரா விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறும். இரண்டு விளையாட்டுக்களுக்கும் இடையே 10 முதல் 15 நாட்கள் இடைவெளி இருக்கும். முதல் பாரா விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஆண்டு தில்லியில் நடைபெற்றன.
"கேலோ இந்தியா விளையாட்டுகளை நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு செல்ல வேண்டும் என்பது பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையாகும். இந்த தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப, பீகாரில் விளையாட்டுப் போட்டிகளின் இரண்டு பதிப்புகள் நடைபெறும். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் விளையாட்டு முக்கியப் பங்கு வகிக்கும். பீகார் சமீபத்தில் முக்கிய விளையாட்டு நிகழ்வுகளை நடத்துவதற்கான திறனை வெளிப்படுத்தியுள்ளது" என்று மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா கூறினார்.
பீகார் மாநிலம் ராஜ்கீரில் பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. அதே சாம்பியன்ஷிப்பில், பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சீனாவை வீழ்த்தி இந்தியா கான்டினென்டல் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது.
முன்னதாக கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு 2023 இந்த ஆண்டு ஜனவரியில் தமிழ்நாட்டில் நடைபெற்றது. "நாடு முழுவதும் கிடைக்கும் வசதிகளை அதிகம் பயன்படுத்த விளையாட்டு வீரர்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம். பீகாரின் வளமான கலாச்சார பன்முகத்தன்மையும் அனைவருக்கும் குறிப்பிடத்தக்க ஈர்ப்பாக உள்ளது. ஒரு மாநிலத்தின் பாரம்பரியத்தைத் தழுவி கொண்டாடுவது ஒரு வலுவான தேசத்தை உருவாக்க அவசியமாகும்" என்று டாக்டர் மாண்டவியா கூறினார்.
உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் அடிமட்டத்தில் இருந்து விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவை வழங்குவதற்கும் அமைச்சகத்தின் திட்டங்களில் பீகார் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும்.
கேலோ இந்தியா திட்டத்தின் இதயத்தில் திறமை மேம்பாடு உள்ளது. விளையாட்டுத் துறையின் மேம்பாட்டுத் திட்டங்களின் முக்கிய பயனாளியாகவும் பீகார் உள்ளது. பீகாரில் 38 கேலோ இந்தியா மையங்களும் அனைத்து மட்டங்களிலும் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு ஒரு கேலோ இந்தியா மாநில சிறப்பு மையம் உள்ளது. இது தவிர, இந்திய விளையாட்டு ஆணையத்தின் மூன்று பயிற்சி மையங்கள் உள்ளன.
பீகாரில் நடைபெறவுள்ள கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் குறித்த கூடுதல் விவரங்கள் வரும் வாரங்களில் பகிரப்படும்.
****
TS/PKV/RR/DL
(Release ID: 2075588)
Visitor Counter : 18