தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
ஸ்பேம் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை தடுக்க டிராய் எடுத்துவரும் நடவடிக்கைகள்
Posted On:
20 NOV 2024 4:41PM by PIB Chennai
ஸ்பேம் அழைப்புகள், குறுஞ்செய்திகள் ஆகியவற்றின் தொடர்ச்சியான பிரச்சனையை எதிர்த்துப் போராட இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
ஸ்பேம் அழைப்புகளுக்கு எதிரான புகார்கள் மீதான கடுமையான நடவடிக்கைகள் காரணமாக அவை வெகுவாகக் குறைந்துவருகின்றன.2024, ஆகஸ்ட் 13 அன்று டிராய் வெளியிட்ட வழிகாட்டுதல்படி, விதிமுறைகளை மீறி விளம்பரக் குரல் அழைப்புகளைச் செய்யும் எந்தவொரு நிறுவனமும் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும். அனைத்து தொலைத்தொடர்பு வளங்களையும் துண்டித்தல், இரண்டு ஆண்டுகள் வரை தடுப்புப்பட்டியலில் சேர்ப்பது, தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்படும் காலத்தில் புதிய வள ஒதுக்கீட்டிற்கு தடை ஆகியவை இதில் அடங்கும். இந்த வழிகாட்டுதலின் விளைவாக, 2024, ஆகஸ்ட் மாதம் 1.89 லட்சமாக இருந்த புகார்களின் எண்ணிக்கை, 2024, செப்டம்பரில் 1.63 லட்சமாகவும் (ஆகஸ்ட் 2024-க்குப் பின் 13% குறைவு) 2024 அக்டோபரில் 1.51 லட்சமாகவும் குறைந்துள்ளது (ஆகஸ்ட் 2024-க்குப் பின் 20% குறைவு).
மேம்படுத்தப்பட்ட தகவல் தடமறிதலை செயல்படுத்துவதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தகவல் தடமறிதலை மேம்படுத்த, டிராய் 2024, ஆகஸ்ட் 20 அன்று வழிகாட்டுதலை வெளியிட்டது. இந்த நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, டிராய் அமைப்பின் கீழ் இணையவழி கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டன. முதல் இணையவழி கருத்தரங்கு 2024, நவம்பர் 12 அன்று ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட்உடன் இணைந்து நடத்தப்பட்டது. இதில் 1000-க்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இரண்டாவது இணையவழி கருத்தரங்கு வோடபோன் ஐடியா லிமிடெட்உடன் இணைந்து 2024, நவம்பர் 19 அன்று நடத்தப்பட்டது. இதில் 800 க்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்தத் தொடரில், மற்றொரு இணையவழி கருத்தரங்கு 2024, நவம்பர் 25 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது டாடா டெலிசர்விசஸ் உடன் இணைந்து நடத்தப்படும். நுகர்வோர் நல அமைச்சகம், பிற மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகள், ரிசர்வ் வங்கி, செபி, பிஎஃப்ஆர்டிஏ, ஐஆர்டிஏஐ ஆகிய அமைப்புகளால் கட்டுப்படுத்தப்படும் நிறுவனங்களுக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2075083
***
TS/SMB/KPG/DL
(Release ID: 2075228)
Visitor Counter : 17