பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் முதல் நீண்ட தூர ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனையை ஒடிசா கடற்கரையில் வெற்றிகரமாக மேற்கொண்டது டிஆர்டிஓ

Posted On: 17 NOV 2024 9:45AM by PIB Chennai

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) நவம்பர் 16, 2024 அன்று ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து, இந்தியாவின் முதல் நீண்ட தூர ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் வெற்றிகரமான சோதனையை நடத்தியது. இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை 1,500 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு, பல்வேறு வகையான ஆயுதங்களைச் சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

ஏவுகணை பல களங்களில்  உள்ள   அமைப்புகளால் கண்காணிக்கப்பட்டது. ஏவுகணையின் செயல்திறன்  மிகத் துல்லியமாக இருந்ததாக, பெறப்பட்ட தரவுகள் உறுதிப்படுத்தின.

இந்த ஏவுகணை,  ஐதராபாத்தில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஏவுகணை வளாகத்தின் பல்வேறு டிஆர்டிஓ ஆய்வகங்கள் மற்றும் தொழில்துறை கூட்டாளர்களுடன் இணைந்து உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. டிஆர்டிஓவின் மூத்த விஞ்ஞானிகள் மற்றும் ஆயுதப்படை அதிகாரிகள் முன்னிலையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

பாதுகாப்புத் துறை  அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் ,  இந்த ஏவுகணை சோதனை ஒரு வரலாற்றுச் சாதனை என்றும், இது போன்ற முக்கியமான மற்றும் மேம்பட்ட ராணுவ தொழில்நுட்பங்களின் திறன்களைக் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளின் குழுவில் இந்தியாவை இது சேர்த்துள்ளது என்றும் விவரித்துள்ளார். இந்த வெற்றிகரமான  சோதனைக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், ஆயுதப்படைகள் மற்றும் தொழில்துறையினருக்கு அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்த வெற்றிகரமான பணிக்கு தீவிரமாக பங்களித்த டிஆர்டிஓ குழுவிற்கு பாதுகாப்பு துறையின் செயலாளர் மற்றும் டிஆர்டிஓ தலைவர்  டாக்டர் சமீர் வி காமத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

***

PKV/DL


(Release ID: 2074035) Visitor Counter : 24