பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் 3.0 க்கான நாடு தழுவிய பிரச்சாரம் குறித்த PIB அறிக்கை
Posted On:
07 NOV 2024 2:35PM by PIB Chennai
முகச் சரிபார்ப்பு தொழில்நுட்பத்தின் மூலம் ஓய்வூதியதாரர்களுக்கான ஆயுள் சான்றிதழ் சமர்ப்பித்தலை நெறிப்படுத்துவதற்காக ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை, நவம்பர் 2024 மாதத்தில் நாடு தழுவிய டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பிரச்சாரம் 3.0-ஐ நடத்துகிறது. இந்த முறை ஓய்வூதியதாரர்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களில் ஆதார் அடிப்படையிலான அங்கீகாரம் மூலம் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்கலாம்.
முன்பு, ஓய்வூதியதாரர்கள், ஓய்வூதியம் வழங்கும் அதிகாரிகளை இதற்காகச் சந்திக்க வேண்டியிருந்தது, இது பெரும்பாலும் வயதான நபர்களுக்கு சவாலாக இருந்தது. 2014-ம் ஆண்டில், ஓய்வூதியதாரர்கள் நலத்துறை, டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்களை (ஜீவன் பிரமான்) அறிமுகப்படுத்தியது. 2021-ல், முக அங்கீகார தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது.
2022-ம் ஆண்டில், 37 இடங்களில் ஒரு பிரச்சாரத்தை ஏற்பாடு செய்து, 1.41 கோடி டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்களை உருவாக்கியது. 2023-ல் பிரச்சாரம் 100 இடங்களுக்கு விரிவடைந்தது. 1.47 கோடிக்கும் அதிகமான சான்றிதழ்கள் உருவாக்கப்பட்டன.
பிரச்சாரம் 3.0 (நவம்பர் 1-30, 2024 வரை திட்டமிடப்பட்டுள்ளது), நாடு முழுவதும் 800 இடங்களை இது உள்ளடக்கும். வங்கிகள், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, ஓய்வூதியதாரர்கள் சங்கங்கள், இந்திய தனித்துவ அடையாள ஆணையம், மின்னணு தொழில்முறை, பாதுகாப்பு அமைச்சகம், ரயில்வே அமைச்சகம் மற்றும் தொலைத் தொடர்புத் துறை ஆகியவை இதில் முக்கிய பங்குதாரர்கள் ஆகும். டிஜிட்டல் சமர்ப்பிப்புகளுடன் ஓய்வூதியதாரர்களுக்கு உதவ நகரங்கள் முழுவதும் முகாம்கள் அமைக்கப்படும், மேலும் மிகவும் மூப்படைந்த முதியவர்கள் அல்லது மாற்றுத்திறனாளி ஓய்வூதியதாரர்களுக்கு வீட்டு வருகைகள் உட்பட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
நாடு தழுவிய டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பிரச்சாரம் 3.0-ன் போது, நவம்பர் 8, 2024 அன்று பெங்களூரு, கேஜி சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் நிர்வாக அலுவலகத்தில் ஒரு மெகா முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஆயுள் சான்றிதழ்களை சமர்ப்பிக்க பல்வேறு டிஜிட்டல் முறைகளைப் பயன்படுத்த உதவுவதற்காக நடத்தப்படும் இந்த மெகா முகாமில் துறைச் செயலாளர் மற்றும் துறையின் மூத்த அதிகாரிகள் வருகை தருவார்கள். ஓய்வூதியதாரர்கள் தங்களது ஆதார் பதிவேடுகளை தேவைப்படும் இடங்களில் புதுப்பித்துக் கொள்ளவும், தொழில்நுட்ப சிக்கல்களைச் சமாளிக்கவும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் உதவி செய்யும்.
***
PKV/KPG/DL
(Release ID: 2071525)