தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் - உலகத் தொலைத்தொடர்பு தரப்படுத்தல் மன்றம் ஆகியவை இணைந்து நடத்திய 2024-ன் புதிய கண்டுபிடிப்பு பரிமாற்றத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

Posted On: 24 OCT 2024 9:19AM by PIB Chennai

2024-ன் புதிய கண்டுபிடிப்பு பரிமாற்றம் என்ற முக்கிய நிகழ்வு சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் - உலகத் தொலைத்தொடர்பு தரப்படுத்தல் மன்றம் ஆகியவற்றால் புதுதில்லி பாரத் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. உலகளாவிய தொழில்நுட்ப ஒத்துழைப்பில் இது ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லாகும்.

வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் முக்கியமான மையப்பொருள் பகுதிகளில் சர்வதேச ஒத்துழைப்பையும் புதிய கண்டுபிடிப்பையும் வளர்த்தெடுப்பது  இந்நிகழ்வின் நோக்கமாக இருந்தது. பலதரப்பட்ட சிந்தனைகளும் உலகளாவிய நிபுணத்துவமும் இதில் பரவலாக இடம்பெற்றிருந்தன. அடுத்த தலைமுறை நெட்வொர்க் (5ஜி/6ஜி), செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், பாதுகாப்பான தகவல் நெட்வொர்க், க்வாண்டம் தகவல்கள் குறித்த மையப்பொருள் விவாதங்களும் இந்நிகழ்வில் இடம் பெற்றன.

ஒவ்வொரு மையப்பொருள் குறித்த விவாதங்களில் இந்திய அணிகளும், சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் இதர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர் ஆகியவற்றின் அணிகளும் தீவிரமாக பங்கேற்றன. இந்த அணிகளில் பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், இதே மையப்பொருளில் பணியாற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனப் பிரதிநிதிகள் இடம்பெற்றிருந்தனர்.

நிகழ்வின் தொடக்க அமர்வுக்கு மத்திய தகவல் தொடர்பு, ஊரக வளர்ச்சித்துறை இணையமைச்சர் டாக்டர் பெம்மசானி சந்திரசேகர் தலைமைதாங்கினார். நிகழ்வில் பேசிய அமைச்சர், கடந்த பத்தாண்டுகளில் வணிகங்களின் வளர்ச்சிக்கும், குறிப்பிட்ட ஸ்டார்ட் அப்-களுக்கும் உகந்த சூழலை உருவாக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இந்தியா அயராது பாடுபட்டு வருகிறது என்றார். 2015-ம் ஆண்டில் "ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா" தொடங்கப்பட்டதற்குப் பின், அரசு அங்கீகாரம் பெற்ற 1.12 லட்சம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் இந்தியா இதில் 3-வது பெரிய உலகளாவிய சூழல் அமைப்பாக உருவாகியுள்ளது என்று அவர் கூறினார். கல்வி சார்ந்த ஆய்வும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் பல்வேறுபட்ட துறைகளின் பிரச்சனைகளுக்கு தீர்வுகண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். " இந்தியாவுக்காகவும் உலகத்துக்காகவும் இந்தியாவில் புதிய கண்டுபிடிப்புகள்" என்ற தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்படும் 6ஜி புதிய கண்டுபிடிப்புக்கு தொழில்துறை தலைவர்கள், கல்வியாளர்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், அரசு ஆகியவற்றை ஒருங்கிணைப்பதற்கு முக்கிய தளமாக பாரத் 6ஜி கூட்டணி இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

உங்கள் பணி ஓர் அர்த்தமுள்ள நோக்கத்துடன் இணைந்தால், அனைத்தும் சரியாக நடக்கும். வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிகளுக்குள் ஈர்க்கப்படுவார்கள் என்று அமைச்சர் திரு சந்திரசேகர் கூறினார். உங்கள் அணியிடம் நீங்கள் நம்பிக்கை வையுங்கள். உங்கள் அணியினர் செயல் இயக்கத்தில் ஈடுபட்டுள்ளோம் என்பதை உணர்ந்தால் ஒவ்வொரு நாளும் அவர்கள் சிறந்தவற்றைத் தருவார்கள் என்று கூறி அவர் உரையை நிறைவு செய்தார்.

 மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பபைக் காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2067550

***

 TS/SMB/AG/KR


(Release ID: 2067679) Visitor Counter : 31