புதுதில்லியில் ஆறாவது இந்தியா-சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர்கள் உரையாடலுக்கு, பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மற்றும் சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென் ஆகியோர் இன்று கூட்டாகத் தலைமை தாங்கினர். பிராந்திய அமைதி, நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பு குறித்து பகிரப்பட்ட கண்ணோட்டத்தின் அடிப்படையில் ஆழ்ந்த, நீண்டகால இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை இரு அமைச்சர்களும் ஒப்புக் கொண்டனர்.
இந்தியாவின் கிழக்கு நோக்கி செயல்படுதல் கொள்கையின் பத்தாண்டுகளை குறிக்கும் பின்னணியில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வளர்ந்து வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இரு அமைச்சர்களும் திருப்தி தெரிவித்தனர். சமீப ஆண்டுகளில், இரு நாடுகளின் ஆயுதப்படைகளுக்கு இடையே வழக்கமான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
2025-ம் ஆண்டு இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே தூதரக உறவுகள் நிறுவப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி இரு அமைச்சர்களும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க ஒப்புக் கொண்டனர். ராணுவ கூட்டு பயிற்சி குறித்த இருதரப்பு ஒப்பந்தத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கவும் அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
இணைய பாதுகாப்பு போன்ற வளர்ந்து வரும் துறைகளில் ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்லவும் இரு அமைச்சர்களும் முடிவு செய்தனர்.
2021-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை நடைபெற்ற ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தியாவின் ஒருங்கிணைப்பாளராக சிங்கப்பூர் அளித்த ஆதரவுக்கு டாக்டர் இங் எங் ஹென்னுக்கு திரு ராஜ்நாத் சிங் நன்றி தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, வருகை தந்த பிரமுகருக்கு பாரம்பரிய வரவேற்பும், முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
முன்னதாக, சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
டாக்டர் இங் எங் ஹென் 2024 அக்டோபர் 21 முதல் 23 வரை இந்தியாவில் பயணம் மேற்கொள்கிறார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2067046
----
TS/IR/KPG/KVDL