குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
பிளவுபட்ட உலகில் அனைவரையும் உள்ளடக்கிய மாதிரியை இந்தியக் கலை வழங்குகிறது: குடியரசுத் துணைத் தலைவர்
Posted On:
21 OCT 2024 9:25PM by PIB Chennai
அதிகரித்து வரும் மோதல்கள் மற்றும் முரண்பாடுகளால் பிளவுபட்டுள்ள உலகில் உள்ளடக்கிய ஒரு மாதிரியை இந்தியக் கலை குறிப்பாக நடனக்கலை வழங்குகிறது என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். எல்லைகளைக் கடந்து மக்களை ஒன்றிணைக்கும் இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தின் சக்தியைச் சுட்டிக்காட்டிய அவர், "மோதல்கள், மீறல்கள் மற்றும் முரண்பாடுகள் நிறைந்த உலகில், இந்தியக் கலை ஒளிக்கதிரை வழங்குகிறது. சவால்கள் மற்றும் பிளவுகளுக்கு இடையே, கலாச்சாரம், நடனம், இசை ஆகியவை தடைகளைத் தாண்டி நம்மை ஒன்றிணைக்கின்றன. உலகம் எவ்வளவுதான் பிளவுபட்டதாக இருந்தாலும், நமது கலாச்சாரம் உருவாக்கித் தரும் ஒற்றுமை அசைக்க முடியாதது, இனிமையானது மற்றும் நீடித்து நிற்பது என்று அவர் கூறினார்."
கலாச்சார அமைச்சகம் மற்றும் கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் ஆகியவற்றுடன் இணைந்து சங்கீத நாடக அகாடமி ஏற்பாடு செய்திருந்த இந்திய நடனம் குறித்த சர்வதேச விழாவில் உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், " நிகழ்த்து கலைகளுக்கு ஒன்றிணைக்கவும், குணப்படுத்தவும், உந்துதல் அளிக்கவும் ஊக்குவிக்கவும் கூடிய சக்தி உள்ளது. நடனக் கலைஞர்கள் கலாச்சார மற்றும் அமைதிக்கான தூதுவர்களாக உள்ளனர். நடனம் என்பது கலாச்சார இராஜதந்திரத்தின் ஒரு சிறந்த அம்சமாகும், இது எல்லைகளைக் கடந்து புரிதலையும் இணைப்பையும் வளர்க்கிறது என்று கூறினார்.
இந்தியாவின் கலாச்சார செழுமையைப் பாராட்டிய திரு தன்கர், "பாரதம் நுண்கலைகளின் தங்கச் சுரங்கம். நமது கலாச்சார மறுமலர்ச்சி பண்டைய ஞானத்தை சமகால நடைமுறைகளுடன் ஒருங்கிணைத்து, கலாச்சார ஆற்றல் மையமாக இந்தியாவின் தோற்றத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது. நமது ஜி20 தலைமையின் போது உலகம் இதைக் கண்டது, அங்கு நமது கலாச்சாரம் புலன்களுக்கு விருந்தாக காட்சிப்படுத்தப்பட்டது. கலாச்சாரம், நடனம், இசை ஆகியவை மனிதகுலத்தின் உலகளாவிய மொழிகள், அவை உலகளவில் புரிந்து கொள்ளப்பட்டு பாராட்டப்படுகின்றன” எனக் குறிப்பிட்டார்.
உலக கலாச்சாரத்தில், குறிப்பாக அதன் இதிகாசங்கள் வாயிலாக இந்தியாவின் வரலாற்று தாக்கத்தை குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்தினார். "கலை ஆதிக்கத்தை வரையறுக்கவில்லை; மாறாக இது ஒருங்கிணைப்பை வரையறுக்கிறது. தென்கிழக்கு ஆசியாவின் அங்கோர்வாட்டில் ராமாயணம் பரவியது நமது கலாச்சார பெருமைக்கு ஒரு சான்றாக நிற்கிறது. நான் அங்கோர்வாட் சென்றபோது, நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளைக் கண்டு பிரமித்துப் போனேன் - கல் பேசுவது போல் இருந்தது. இது கலாச்சார ராஜதந்திரத்திற்கான இந்திய கலையின் திறனை வெளிப்படுத்துகிறது” என அவர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் அடக்குமுறை காலங்களில் இந்தியாவின் கலை பாரம்பரியம் சந்தித்த சவால்களைக் குடியரசுத் துணைத் தலைவர் நினைவு கூர்ந்தார். "நமது வரலாற்றில், சுமார் 400-500 ஆண்டுகளுக்கு முன்பு, அன்றைய ஆட்சியாளர்களால் இசைக்கலை புறக்கணிக்கப்பட்ட ஒரு காலம் இருந்தது. நமது பெருமை மிகுந்த கலாச்சார பொக்கிஷங்கள் அவர்களின் மதிப்புகளுக்கு எதிரானவையாகப் பார்க்கப்பட்டன. ஆனால் நடனத்தையும் இசையையும் வளர்த்தவர்கள் எப்போதும் உயர்ந்த மரியாதைக்குரியவர்களாகவே இருந்தனர்” என அவர் கூறினார்.
இந்தியாவின் ஒவ்வொரு பிராந்தியத்தின் தனித்துவமான கலாச்சார அடையாளத்தை எடுத்துரைத்த திரு தன்கர், "இந்த மாபெரும் நிலத்தின் ஒவ்வொரு பகுதியிலும், நீங்கள் ஒரு தனித்துவமான கலாச்சார அடையாளத்தைக் காண்பீர்கள். 'ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு' என்பது போல, நடனம், இசை, கலை ஆகியவற்றின் உள்ளூர் பாரம்பரியங்களை வலியுறுத்தும் 'ஒரு மாவட்டம், ஒரு கலாச்சார நிகழ்வு' என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
நிகழ்த்துக் கலைகள் இந்தியாவின் உலக அந்தஸ்துக்கு பங்களிப்பது மட்டுமல்லாமல், நாட்டின் இளைஞர்களை வளர்ப்பதிலும் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கின்றன என்று அவர் கூறினார். "நடனம், இசை, கலைகளில் நமது இளைஞர்களை ஈடுபடுத்துவது போதைப்பொருள் பயன்பாடு போன்ற தீங்கு விளைவிக்கும் பழக்கங்களிலிருந்து அவர்களை விலக்கி வைக்கவும், நேர்மறையான, ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் அவர்களை ஈடுபட வைக்கவும் உதவும். கலைகள் மூலம் வளர்க்கப்படும் மனிதகுலத்தின் நேர்மறை எண்ணம் மற்றும் நலன் நமது சமூகத்தின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு பங்களிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் துடிப்பான மற்றும் மாறுபட்ட கலாச்சார பாரம்பரியத்தை சுட்டிக்காட்டிப் பேசிய குடியரசுத் துணைத் தலைவர், கல்பேலியா, கர்பா மற்றும் சௌ உள்ளிட்ட எட்டு இந்திய நடன வடிவங்களை யுனெஸ்கோ விவரிப்புக்கு அப்பாலான கலாச்சார பாரம்பரியமாக அங்கீகரித்துள்ள நிலையில், "இது ஒரு தொடக்கம் தான். இந்தியாவின் கலை பாரம்பரியம் இந்த எட்டு வடிவங்களுக்கும் அப்பாற்பட்டது. அதிகம் அறியப்படாத நமது நடன வடிவங்களும் பாதுகாக்கப்பட்டு கொண்டாடப்படுவதை உறுதி செய்ய நாம் பணியாற்ற வேண்டும், அவை அழிவதைத் தடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
கடந்த பத்தாண்டுகளில் நடனம் மற்றும் இசைத் துறையில் தகுதியான ஆளுமைகளுக்கு சமீபத்தில் வழங்கப்பட்ட அங்கீகாரத்தைப் பாராட்டி திரு தன்கர் தமது உரையை நிறைவு செய்தார். "கடந்த 10 ஆண்டுகளில், இந்திய கலைத்துறையில் புகழ்பெற்ற மற்றும் தகுதியான ஆளுமைகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் பாராட்டத்தக்கது மற்றும் இனிமையானது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது அன்றாட வாழ்க்கையின் சவால்களை சமாளிக்கவும், நமது வெல்ல முடியாத உணர்வை வளர்க்கவும் உதவும்” என்றார் அவர்.
சங்கீத நாடக அகாடமியின் முயற்சிகளைப் பாராட்டிய அவர், "நமது கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதிலும் ஊக்குவிப்பதிலும் அகாடமியின் தொடர்ச்சியான பணி இந்த மரபுகளை முன்னணியில் கொண்டு வருவதில் விலைமதிப்பற்றது" எனக் கூறினார்.
இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை, குறிப்பாக அதிகம் அறியப்படாத அதன் நடன வடிவங்களை பாதுகாத்து வளர்ப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்தினார்.
மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், மக்களவை உறுப்பினர் திருமதி ஹேமமாலினி, கலாச்சார அமைச்சகத்தின் செயலாளர் திரு அருணீஷ் சாவ்லா, சங்கீத நாடக அகாடமியின் தலைவர் டாக்டர் சந்தியா புரேச்சா, பத்ம விபூஷண் டாக்டர் பத்மா சுப்ரமணியம், மற்றும் பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
****
PKV/KV/KR
(Release ID: 2066979)
Visitor Counter : 25