சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் கலைக் கண்காட்சியின் இரண்டாவது பதிப்பை புதுதில்லியில் தொடங்கி வைத்தார்

Posted On: 18 OCT 2024 1:49PM by PIB Chennai

வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் 2024 அக்டோபர் 17 அன்று புதுதில்லியில் "அமைதியான உரையாடல்: விளிம்புகளிலிருந்து மையத்திற்கு" என்ற கலைக் கண்காட்சியின் இரண்டாவது பதிப்பை தொடங்கிவைத்தார். இந்த நான்கு நாள் கண்காட்சி, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், சங்கலா அறக்கட்டளை, தேசிய மனித உரிமை ஆணையம், சர்வதேச பெரும் பூனை கூட்டணி ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

 

கண்காட்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய டாக்டர் எஸ் ஜெய்சங்கர், இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் வலுவாக இணைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். பல்வேறு முன்முயற்சிகள் மூலம் பழங்குடியினரின் நலனுக்கான அரசின் உறுதிப்பாட்டை  தெரிவித்த அவர், விளிம்புநிலை சமூகங்களை மேம்படுத்தும் கொள்கையில் அந்த்யோதயா திட்டம் வேரூன்றி உள்ளது  என்றும், இது யாரும் பின்தங்கிவிடக்கூடாது என்பதை உறுதி செய்கிறது என்றும் கூறினார்.

 

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் கூறினார். வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தில்  செய்யப்பட்ட 2022 திருத்தங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், வளர்ச்சித் தேவைகளையும் சமநிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று அவர் கூறினார். தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வெற்றிக்கு பழங்குடியின சமூகங்கள் மற்றும் வனவாசிகளே காரணம் எனக் கூறிய அவர், இந்தப் பாதுகாவலர்கள், காடுகள் செழிக்க உதவியதுடன், வேட்டையாடுதலை தீவிரமாக எதிர்த்துப் போராடுகின்றனர் என்று தெரிவித்தார். கொள்கைகள் அனைத்து குடிமக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படும்போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறிய அவர், மக்கள் பங்கேற்பு என்ற கோட்பாட்டை சுட்டிக்காட்டினார்

 

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்திர யாதவ், சமூகங்கள் எவ்வாறு இயற்கையுடன் இணக்கமாக வாழ்கின்றன என்பதை சகவாழ்வு உணர்வு பிரதிபலிக்கிறது என்று  தெரிவித்தார். பருவநிலை மாற்றம், பல்லுயிர் இழப்பு, நிலம் பாலைவனமாதல் போன்ற முக்கியமான சவால்களை உலகம் எதிர்கொண்டுள்ள நிலையில், இந்த அணுகுமுறையை அவர் பாராட்டினார்.

 

இந்த நிகழ்ச்சியில், "மறைக்கப்பட்ட பொக்கிஷங்கள்: புலிகள் காப்பகங்களில் இந்தியாவின் பாரம்பரியம்" என்ற புத்தகமும், "பெரும் பூனைகள்" என்ற பத்திரிகையும் வெளியிடப்பட்டன.

 

மாலையில் ஒரு கலை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டது, இதில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் கஜேந்திர சிங் ஷெகாவத் கலந்து கொண்டார்.

 

பின்னணி

 

பழங்குடி சமூகங்களின் பாதுகாப்பு நெறிமுறைகளை அங்கீகரிப்பதையும், இந்த சமூகங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான இணக்கமான உறவை முன்னிலைப்படுத்துவதையும் இந்தக் கண்காட்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

இந்தக் கண்காட்சியில் இந்தியா முழுவதும் உள்ள 22 புலிகள் காப்பகங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஓவியங்கள் மற்றும் 100 கலை வடிவங்கள் இடம்பெற்றுள்ளன. கோண்ட், வார்லி, படா சித்ரா, பில் மற்றும் சோஹ்ராய் போன்ற பழங்குடியினர் கலை வடிவங்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனைக்கு கிடைக்கின்றன, இதன் வருமானம் கைவினைஞர்களுக்கு நேரடியாகப் பயனளிக்கிறது. அனைத்து கலைப்படைப்புகளும் நிலையான பொருட்களைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளன, இது பழங்குடி சமூகங்களின் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறையைப் பிரதிபலிக்கிறது.

 

பங்கேற்கும் 49 கலைஞர்களில், 10 பேர் மத்தியப் பிரதேசத்தில் உள்ள புலிகள் காப்பகங்களைச் சேர்ந்தவர்கள், மற்றவர்கள் மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஒடிசா, தெலுங்கானா, ராஜஸ்தான், அருணாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

 

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 1,70,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வனப்பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ளன என்றும், இந்திய வன அறிக்கை-2021, 300 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக காடுகளை நம்பியுள்ளனர் என்பதையும் குறிக்கிறது. புலிகள் பாதுகாப்பில் இந்தியா முன்னணியில் உள்ளது. உலகளாவிய புலிகளின் எண்ணிக்கையில் 75% இந்தியாவில் உள்ளன, 2023 -ம் ஆண்டு நிலவரப்படி, 55 புலிகள் காப்பகங்களில் 3,682 பெரும் பூனைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

 

***

(Release ID: 2066018)

PKV/AG/KR


(Release ID: 2066032) Visitor Counter : 35