தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
கதையம்ச மையமாக உருவாகிறது இந்தியா: தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் வேவ் மாநாட்டை நடத்துகிறது- கதையம்சத்தை உருவாக்குபவர்களுக்கான 27 போட்டிகளுக்கு ஏற்பாடு
Posted On:
17 OCT 2024 4:56PM by PIB Chennai
ஒலிபரப்புத் துறையில் வளர்ந்து வரும் போக்குகள் மற்றும் தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் ட்ராய் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கை, மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் தொடங்கி வைத்தார். இந்தியா மொபைல் காங்கிரஸ் (IMC-2024) மாநாட்டின் இடையே நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் ட்ராய் தலைவர் திரு அனில் குமார் லஹோட்டி, தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சய் ஜாஜு, ட்ராய் அமைப்பின் செயலாளர் திரு அதுல் குமார் சவுத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் தொடக்க உரையாற்றிய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன், கதையம்சம், பார்வையாளர்களுக்கு முதன்மை அம்சமாக மாறியுள்ள நிலையில், இந்தியாவின் ஒலிபரப்புத் துறையில் தொழில்நுட்ப முன்னேற்றங்களின் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய தாக்கத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார். சமூக, பொருளாதார மற்றும் அரசியல் துறைகளில் சாமானிய மக்கள் உள்ளடக்கப்படுவதை உறுதி செய்வதற்காக அவர்களுக்கு ஒளிபரப்பு சேவைகள் எளிதில் கிடைப்பதை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
கதையம்சம் சார்ந்த பொருளாதாரத்தில் நாம் வாழ்கிறோம். இந்தியா கதையம்ச மையமாக மாறி வருகிறது. சமூக ஊடகங்களின் எழுச்சியுடன், ஒலிபரப்புச் சேவை அதன் எல்லைகளை விரிவுபடுத்தியுள்ளதுடன், கதையம்சத்தை உருவாக்குபவர்களுக்கு பயனளிக்கும் வகையில், மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், 2025 பிப்ரவரி 5-9 முதல் வேவ் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த உச்சிமாநாட்டில், கதையம்ச படைப்பாளர்களுக்கு 27 போட்டிகள் நடத்தப்படுகிறது. இது தேசிய மற்றும் சர்வதேச தளங்களில் தங்கள் திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்குவதுடன், இறுதியில் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு வழிவகுக்கும்.
ஏவிஜிசி (அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ்) துறையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும்,எளிதாக வர்த்தகம் செய்வதை மேம்படுத்த, நெறிப்படுத்தப்பட்ட ஒற்றைச் சாளர முறைமூலம் இந்தியாவில் கதையம்சம் தயாரிப்பை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
234 புதிய நகரங்களில் பண்பலை வானொலி அலைவரிசைகளை ஏலம் விட மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்திருப்பது, உள்ளூர் உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதோடு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். பொருளாதார வளர்ச்சி மற்றும் கலாச்சார பரவலில் ஒலிபரப்புத் துறையின் பங்கை வலுப்படுத்தவும், அனைவருக்கும் உயர்தர ஊடக உள்ளடக்கத்திற்கான அணுகலை உறுதி செய்யவும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை மேம்படுத்துவதற்கான அரசின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். 2047-ம் ஆண்டுக்குள் 'வளர்ச்சியடைந்த இந்தியா' என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையுடன் இந்த முயற்சி ஒத்துப்போகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2065820
----
MM/KPG/DL
(Release ID: 2065930)
Visitor Counter : 43