ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கங்கை ஆற்றின் குறுக்கே புதிய ரயில் மற்றும் சாலைப் பாலம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 16 OCT 2024 3:21PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், சுமார் ரூ.2,642 கோடி  மதிப்பீட்டிலான ரயில்வே அமைச்சகத்தின் ஒரு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. முன்மொழியப்பட்ட இந்தத் திட்டம் போக்குவரத்தை  எளிதாக்குவதுடன்நெரிசலைக் குறைக்கும், இது இந்திய ரயில்வேயின் பரபரப்பான பிரிவுகளில் மிகவும் தேவையான உள்கட்டமைப்பு வளர்ச்சியை வழங்கும். இந்தத் திட்டம் உத்தரபிரதேசத்தின் வாரணாசி மற்றும் சந்தெளலி மாவட்டங்கள் வழியாக செல்கிறது.

இந்திய ரயில்வேயின் முக்கிய மையமான வாரணாசி ரயில் நிலையம், முக்கிய மண்டலங்களை இணைக்கிறது. யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு நுழைவாயிலாக செயல்படுகிறது.   பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு இன்றியமையாத தீன் தயாள் உபாத்யாயா  சந்திப்பு பாதை, நிலக்கரி, சிமென்ட் மற்றும் உணவு தானியங்கள் போன்ற பொருட்களை கொண்டு செல்வதிலும், வளர்ந்து வரும் சுற்றுலா மற்றும் தொழில்துறை தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் முக்கியப் பங்கு விகிக்கிறது. போக்குவரத்து அதிகமான இந்தச் சந்திப்பு  கடுமையான நெரிசலை எதிர்கொள்கிறது.  இந்தச் சிக்கலைத் தீர்க்க, கங்கை ஆற்றின் மீது ஒரு புதிய ரயில் மற்றும் சாலைப் பாலம் தேவையாகும். இது செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் பிராந்தியத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  இந்தச் சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும் வகையில், ஆண்டுக்கு 27.83 மில்லியன் டன் சரக்கு போக்குவரத்து எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டம் பிரதமர் திரு நரேந்திர மோடியின் புதிய இந்தியா என்ற தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப உள்ளது, இது பிராந்தியத்தில் விரிவான வளர்ச்சியின் மூலம் பிராந்திய மக்களை தற்சார்பு கொண்டவர்களாக மாற்றும், இது அவர்களின் வேலைவாய்ப்புகளையும்  சுய வேலை வாய்ப்புகளையும் அதிகரிக்கும்.

இந்தத் திட்டம் பிரதமர் விரைவு சக்தி தேசிய பன்முக இணைப்புக்கான பெருந்திட்டத்தின் விளைவாகும், இது ஒருங்கிணைந்த திட்டமிடல் மூலம் சாத்தியமானது. மக்கள், சரக்குகள் மற்றும் சேவைகளின் இயக்கத்திற்கு தடையற்ற இணைப்பை இது வழங்கும்.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள 2 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்தத் திட்டம், தற்போதுள்ள இந்திய ரயில்வேயின் கட்டமைப்பை சுமார் 30 கிலோமீட்டர் அளவுக்கு அதிகரிக்கும்.

ரயில்வே சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், எரிசக்தித் திறன்மிக்க போக்குவரத்து முறையாகவும் இருப்பதால், பருவநிலை இலக்குகளை அடைவதற்கும், கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும்,  (149 கோடி கிலோ) உதவும். இது 6 கோடி மரங்களை நடவு செய்வதற்கு சமமான நடவடிக்கையாகும்.

----

PKV/KR/DL


(Release ID: 2065447) Visitor Counter : 40