நிதி அமைச்சகம்
மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில் அரசு முறைப்பயணமாக மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்றிரவு புறப்பட்டுச் செல்கிறார்
Posted On:
15 OCT 2024 5:38PM by PIB Chennai
மத்திய நிதி மற்றும் பெருநிறுவனங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் 2024 அக்டோபர் 16 முதல் மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
தமது பயணத்தின் முதல் கட்டமாக அக்டோபர் 17-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை மெக்சிகோ செல்லும் நிதியமைச்சருடன், நிதியமைச்சகத்தின் அதிகாரிகள் குழு ஒன்றும் செல்கிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள் அதிகரித்து வருவதை இந்தப் பயணம் எடுத்துக்காட்டுவதாக அமைகிறது.
மெக்சிகோவின் சிலிகான் பள்ளத்தாக்கு என்றழைக்கப்படும் குவாடலஜாராவில், இந்தியாவைச் சேர்ந்த முக்கிய தகவல் தொழில்நுட்ப முன்னோடிகள் உட்பட, உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்கும் வட்டமேஜை மாநாட்டுக்கு நிதியமைச்சர் தலைமையேற்கிறார்.
பின்னர் மெக்சிகோவின் நிதியமைச்சர் திரு ரொஜிலியோ ராமிரேஸூடன் அவர் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். மேலும் இரு நாடுகளுக்கு இடையேயான நாடாளுமன்ற ஒத்துழைப்பை வலுப்படுத்தி பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாக மெக்சிகோ நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நிதியமைச்சர் சந்திக்கவுள்ளார்.
மெக்சிகோ நகரில், இருநாட்டு தொழிலதிபர்கள் பங்கேற்கும், இந்தியா – மெக்சிகோ வர்த்தகம் மற்றும் முதலீட்டு உச்சிமாநாட்டில் அவர் சிறப்புரையாற்ற உள்ளார்.
மெக்சிகோவில் தமது பயணத்தின் நிறைவாக இந்திய வம்சாவளியினரின் சமுதாய நிகழ்ச்சியிலும் நிதியமைச்சர் பங்கேற்கிறார்.
அக்டோபர் 20 முதல் 26-ம் தேதி வரை அமெரிக்காவில் அரசு முறைப்பயணம் மேற்கொள்ளும் திருமதி நிர்மலா சீதாராமன், சர்வதேச நாணய நிதியமான ஐஎம்எஃப் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டம், ஜி-20 அமைப்பின் 4-வது நிதியமைச்சர்கள் கூட்டம் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார். இது தவிர, ஜி7 ஆப்பிரிக்க அமைச்சர்களின் வட்டமேஜை நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்க உள்ளார். அதனைத் தொடர்ந்து நியூயார்க் பங்குச் சந்தையில் நடைபெறும் ஓய்வூதிய நிதிய வட்டமேஜை நிகழ்ச்சியில், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் பள்ளி மற்றும் கொலம்பியா பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்களுடனும் கலந்துரையாட உள்ளார். மேலும், பேரிடல் மறுசீரமைப்பு கட்டமைப்புக்கான கூட்டணியின் விவாத நிகழ்ச்சி, நீடித்த உத்தி மற்றும் சர்வதேச கல்வி மைய நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கிறார்.
இது தவிர,இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, ஜெரமனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதோடு, உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான ஐரோப்பிய வங்கியின் தலைவர்கள் மற்றும் பல்வேறு வங்கி மற்றும் நிதி நிறுவன தலைமைச் செயல் அதிகாரிகளுடனும் அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
மேலும், உலக வங்கியின் குழு விவாதம் ஒன்றிலும் அவர் பங்கேற்கிறார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2065036
***
MM/KPG/DL
(Release ID: 2065096)
Visitor Counter : 50