வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
அபுதாபி முதலீட்டு ஆணையம் (ADIA) கிஃப்ட் நகரத்தில் செயல்பாடுகளைத் தொடங்கியது
Posted On:
07 OCT 2024 4:02PM by PIB Chennai
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மிகப்பெரிய இறையாண்மை செல்வ நிதியம் மற்றும் உலகின் மிகப்பெரிய நிதியங்களில் ஒன்றான அபுதாபி முதலீட்டு ஆணையம் (ADIA), தேவையான ஒழுங்குமுறை ஒப்புதல்களைப் பெற்று கிஃப்ட் நகரத்தில் தனது அலுவலகத்தைத் திறந்த பின்னர், அதன் இந்திய நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. இந்த அலுவலகம், இந்தியாவில் அபுதாபி முதலீட்டு ஆணையத்தின் முதலீட்டு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பையில் இன்று (அக்டோபர் 7, 2024) நடைபெற்ற முதலீடுகளுக்கான இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உயர்மட்ட கூட்டு பணிக்குழுவின் 12-வது கூட்டத்தின் போது, இந்தியாவில் அபுதாபி முதலீட்டு ஆணையத்தின் முதலீட்டு சுயவிவரத்தை மேலும் வலுப்படுத்த, இந்தியாவில் அதன் இருப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு, மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் மற்றும் அபுதாபி முதலீட்டு ஆணையத்தின் நிர்வாக இயக்குனர் ஷேக் ஹமீத் பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோர் கூட்டாகத் தலைமை தாங்கினர்.
நிறுவப்பட்டதிலிருந்து, அகமதாபாத்தில் உள்ள குஜராத் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் டெக்-சிட்டி (GIFT சிட்டி) ஒரு முன்னணி உலகளாவிய நிதி மற்றும் தொழில்நுட்ப மையமாக வேகமாக வளர்ந்து வருகிறது, இது வணிகங்களை ஆதரிப்பதற்கும், விரிவுபடுத்துவதற்கும் ஒரு வெற்றிகரமான நிதி சுற்றுச்சூழல் அமைப்பை வழங்குகிறது.
ஜூலை 2023-ல் பிரதமர் நரேந்திர மோடியின் அபுதாபி வருகையின் போது, கிஃப்ட் சிட்டியில் அபுதாபி முதலீட்டு ஆணையம் ஒரு இருப்பை நிறுவும் என்று அறிவிக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஜனவரி 2024-ல் அகமதாபாத்திற்கு விஜயம் செய்தபோது வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் இது மீண்டும் வலியுறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்தியா தொடர்பான அனைத்து முதலீடுகளையும் வைத்திருக்க கிஃப்ட் நகரில் ஒரு மாற்று முதலீட்டு நிதியை அமைப்பதாக அபுதாபி முதலீட்டு ஆணையம் அறிவித்தது.
கிஃப்ட் சிட்டியில் அபுதாபி முதலீட்டு ஆணையத்தின் இருப்பு, இந்தியாவின் வளர்ந்து வரும் மற்றும் மாறும் பொருளாதாரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் நிறுவன முதலீட்டாளர்களின் வலுவான ஆர்வத்தை எடுத்துக்காட்டுகிறது. இது ஒரு வலுவான ஒழுங்குமுறை மற்றும் சட்ட கட்டமைப்பின் கீழ் செயல்படும், உலகத் தரம் வாய்ந்த நிதிச் சேவை மையமாக கிஃப்ட் நகரின் நற்பெயரை உறுதிப்படுத்துகிறது.
ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவில் மிகப்பெரிய அரபு முதலீட்டாளராக தொடர்வதோடு, 2023-24 நிதியாண்டில் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. ஐக்கிய அரபு அமீரகம் 2023-24 நிதியாண்டில் ஆறாவது பெரிய அந்நிய நேரடி முதலீட்டு ஆதாரமாகவும், 2000 முதல், ஒட்டுமொத்தமாக ஏழாவது பெரிய ஆதாரமாகவும் இருந்தது. அனைத்து GCC முதலீடுகளிலும் 70%-க்கும் அதிகமானவை ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்தவை. ஆகஸ்ட் 31, 2024 அன்று நடைமுறைக்கு வந்த புதிய இந்தியா-ஐக்கிய அரபு அமீரக இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம், இருவழி முதலீட்டு வேகத்தை மேலும் வலுப்படுத்தும்.
***
MM/AG/DL
(Release ID: 2062906)