கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
இந்தியாவின் சரக்குப் பெட்டகங்கள் கையாளும் திறன் ஐந்து ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகரிக்கும்: மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால்
Posted On:
25 SEP 2024 4:28PM by PIB Chennai
மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால், புதுதில்லியில் இன்று நடைபெற்ற விரிவான செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றினார். இந்த அமைச்சகம் முதல் 100 நாட்களில் எட்டிய குறிப்பிடத்தக்க மைல்கற்கள் குறித்த விரிவான கண்ணோட்டத்தை அவர் வழங்கினார். இந்தியாவின் கடல்சார் துறையை மாற்றியமைப்பது, கடல்சார் இந்தியா தொலைநோக்கு 2030 மற்றும் அமிர்தகாலத்தின் கடல்சார் பார்வை 2047 ஆகியவை குறித்து அவர் எடுத்துரைத்தார்.
துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் செயலாளர் திரு டி.கே.ராமச்சந்திரனின் விரிவான உரையுடன் நிகழ்ச்சி தொடங்கியது, அதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையால் இந்தியாவின் கடல்சார் செயல்பாடுகள் சிறந்த மாற்றத்தின் அடித்தளமாக மாறியுள்ளது என்றார். இத் துறையில் நாடு முழுவதும் குறிப்பிடத்தக்க வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது என்று அவர் கூறினார்.
அமைச்சகம் மேற்கொண்ட முக்கிய முன்முயற்சிகள் குறித்து அவர் மேலும் விரிவாக எடுத்துரைத்தார். இவை துறைமுக உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், வணிகம் செய்வதை எளிதாக்குதல், நிலைத்தன்மையை ஊக்குவித்தல் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கி செயல்படுகின்றன என்பதை அவர் எடுத்துரைத்தார்.
வாத்வான் துறைமுகத்தைச் சேர்ப்பது இந்தியாவின் கடல் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது என அவர் கூறினார். அடுத்த ஐந்து ஆண்டுகளில், சரக்குப் பெட்டக கையாளுதல் 40 மில்லியன் டிஇயூ அளவை எட்டவும், நாடு முழுவதும் 20 மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது என்று அவர் கூறினார்.
"கப்பல் கட்டுதல் மற்றும் கப்பல் பழுதுபார்ப்பு நடைமுறைகள் குறித்து பேசிய அவர், மகாராஷ்டிரா, கேரளா, ஆந்திரா, ஒடிசா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் பிரத்யேக இடங்களை அமைச்சகம் உருவாக்கி வருகிறது என்றார். ஹைட்ரஜன் உற்பத்தி மையங்களை உருவாக்குவதற்காக கண்ட்லா மற்றும் வ.உ.சி துறைமுகத்தில் 3,900 ஏக்கருக்கும் அதிகமான நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
21-ம் நூற்றாண்டின் இந்தியாவின் முதலாவது பெரிய துறைமுகத் திட்டமான வாத்வான் துறைமுகம் குறித்து பேசிய அவர், அனைத்து பருவநிலைகளுக்கும் ஏற்ற மிகப்பெரிய ஆழ்கடல் துறைமுகங்களில் ஒன்றாக இது மாற உள்ளது என்றார்.
இந்த மெகா துறைமுகம் 1.2 மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் உலக அளவில் முதல் 10 கொள்கலன் துறைமுகங்களில் ஒன்றாக இது அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கிழக்கு கடற்கரையில் உள்ள தூத்துக்குடி சர்வதேச கொள்கலன் முனையம் மற்றொரு முக்கிய திட்டமாகும் என்று கூறிய அவர், இது ஒரு பெரிய கப்பல் பரிமாற்ற மையமாக செயல்படும் என்றார். இது ஒரு கொள்கலனுக்கு 200 அமெரிக்க டாலர் வரை சேமிக்கும் என்றும் ஆண்டுக்கு 4 மில்லியன் அமெரிக்க டாலர் அந்நிய செலாவணி சேமிப்பை வழங்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
கொச்சின் கப்பல் கட்டும் தளத்தின் சர்வதேச கப்பல் பழுதுபார்க்கும் வசதி (ஐ.எஸ்.ஆர்.எஃப்) செயல்பாடுகளைத் தொடங்குவது, அதிநவீன கப்பல் லிஃப்ட் மற்றும் பணிநிலையங்களுடன் அமைக்கப்பட்டிருப்பது, கப்பல் பழுதுபார்க்கும் சந்தையில் இந்தியாவை உலகளாவிய தலைமைத்துவ நாடாக நிலைநிறுத்தும் என்று அவர் கூறினார்.
இந்தியாவின் கடல்சார் துறையை மேலும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அமைச்சகத்தின் முக்கிய முன்முயற்சிகளை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் விரிவாக எடுத்துரைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2058632
***
PLM/RR/KR/DL
(Release ID: 2058710)
Visitor Counter : 37