இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுடன் மெய்நிகர் கலந்துரையாடலை நடத்தினார்

Posted On: 11 SEP 2024 6:06PM by PIB Chennai

பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர் துறைகளின் அமைச்சர்களுடன் மத்திய இளைஞர் நலன், விளையாட்டு, தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா காணொலிக் காட்சி மூலம் இன்று கலந்துரையாடினார். "வளர்ச்சியடைந்த இந்தியாவைஉருவாக்கும் பணியில் இளைஞர்களை ஈடுபடுத்த ஒரே இடத் தீர்வாக மை பாரத் தளத்தை மாற்றுவது குறித்து விவாதிப்பது இக்கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலாக இருந்தது.

"நமது இளைஞர்களின் விருப்பங்களை உணர, அவர்களின் கனவுகள் மற்றும் லட்சியங்களுடன் ஒத்துப்போகும் வாய்ப்புகளையும் திட்டங்களையும் நாம் அவர்களுக்கு வழங்க வேண்டும். மை பாரத் இயங்குதளம் தற்போது சிவி பில்டர், அனுபவ கற்றல் வாய்ப்புகள், தன்னார்வ விருப்பங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்குகிறது. முன்னோக்கிச் செல்லும்போது, திறன் முயற்சிகள், இணையவழி கற்றல் தொகுப்புகள், வேலை போர்ட்டல்களுக்கான அணுகல் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த சலுகைகளை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்று இந்த சந்திப்பின் போது டாக்டர் மாண்டவியா கூறினார்.

மேலும் பல புதிய திட்டங்கள் விரைவில் தொடங்கப்படும் என்றும், அவை இளைஞர்களை வழிநடத்தும் என்றும் அவர் அறிவித்தார். முதல் முயற்சி, 'மை பாரத் மக்கள் தொடர்புத் திட்டம்', நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு தளம் பற்றிய அதன் தனித்துவமான சலுகைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தும். இந்த திட்டம் இளைஞர்களின் பங்களிப்பு அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு, தளத்தின் நன்மைகளை முன்னிலைப்படுத்தும்.

இரண்டாவது முயற்சியான ' சேவையிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்' இளைஞர்களிடையே சேவை மனப்பான்மையை வளர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இளைஞர்கள் தன்னார்வலர்களாக பணியாற்ற மருத்துவமனைகள் அடையாளம் காணப்பட்டு, அங்கு அவர்களுக்கு முதன்மை சுகாதார திட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். மேலும் மருத்துவமனை செயல்திறன் மற்றும் நோயாளி உதவியை மேம்படுத்த பல்வேறு பணிகள் ஒப்படைக்கப்படும்.

மூன்றாவது முயற்சி, 'தூய்மை இந்தியா: புதிய தீர்மானம்', நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலிருந்து ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் சேகரிப்பை மையமாகக் கொண்ட ஒரு பெரிய துப்புரவு இயக்கத்தில் இளைஞர்களை ஈடுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் தூய்மையில் இளைஞர்களை ஈடுபடுத்துவதற்கான அரசின் நோக்கத்திற்கு ஏற்ப இந்த முயற்சி உள்ளது.

2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை அடைய, நமது இளைஞர்களை ஒவ்வொரு சாத்தியமான வழியிலும் இணைத்து ஈடுபடுத்துவது கட்டாயமாகும் என்று கூறிய டாக்டர் மாண்டவியா இந்த தொலைநோக்கு பார்வையை நனவாக்க அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

***

SMB/AG/DL


(Release ID: 2053868) Visitor Counter : 26