வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
பிரதமர் விரைவுசக்தியின் கீழ் கட்டமைப்புத் திட்டமிடல் குழுவின் 78 வது கூட்டம் 18 சாலை திட்டங்களை மதிப்பீடு செய்தது
Posted On:
06 SEP 2024 5:05PM by PIB Chennai
பிரதமர் விரைவுசக்தி முன்முயற்சியின் கீழ் கட்டமைப்புத் திட்டமிடல் குழுவின் 78-வது கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது. இதற்கு தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் கூடுதல் செயலாளர் திரு ராஜீவ் சிங் தாக்கூர் தலைமை தாங்கினார். சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் முன்மொழியப்பட்ட பதினெட்டு முக்கியமான சாலை உள்கட்டமைப்பு திட்டங்களை மதிப்பீடு செய்வதில் இந்தக் கூட்டம் கவனம் செலுத்தியது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா, ஒடிசா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள இந்தத் திட்டங்கள், பிரதமர் விரைவுசக்தி தேசிய பெருந்திட்டத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த திட்டமிடல் கொள்கைகளுடன் ஒத்துப்போகின்றன.
தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள திட்டங்கள்
மதுரை-கொல்லம் ஐ.சி.ஆர் (இரண்டு திட்டங்கள்): இந்தச் சாலை வழித்தடம் தமிழ்நாடு, கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களின் வழியாகச் செல்வதால் இந்த வழித்தடம் இரண்டு தனித்துவமான திட்டங்களாக உருவாக்கப்படுகிறது. இந்த நான்கு வழி சாலை 129.92 கிமீ (தமிழ்நாட்டில் 68.30 கிமீ மற்றும் கேரளாவில் 61.62 கிமீ) பரவியுள்ளது. இந்த இரண்டு திட்டங்களும் பயண தூரத்தைக் குறைப்பது மற்றும் முக்கிய பொருளாதார மையங்களுக்கிடையேயான இணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இது தொழில்களுக்கும் உள்ளூர் பொருளாதாரங்களுக்கும் நேரடியாக பயனளிக்கும்.
இந்தச்சாலை பயண தூரத்தை 10 கி.மீ குறைப்பதுடன், சராசரி வேகத்தையும் இரட்டிப்பாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது சரக்கு இயக்கத்தை கணிசமாக அதிகரிப்பதுடன், பயண நேரத்தையும் குறைக்கும்.
மதுரை-தனுஷ்கோடி நெடுஞ்சாலை: இந்த 46.67 கிமீ நீள 4-வழிச்சாலை முக்கிய மத மற்றும் சுற்றுலா தலங்களுக்கான இணைப்பை மேம்படுத்துவதிலும், இப்பகுதியில் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது.
சென்னை-மகாபலிபுரம்-பாண்டிச்சேரி வழித்தடம்: இந்த 46.05 கி.மீ 4-வழிச்சாலைத் திட்டம் கடலோரப் பகுதிகளை பொருளாதார வழித்தடங்களுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது சுற்றுலா மற்றும் உள்ளூர் தொழில்களை மேம்படுத்துவதற்கு முக்கியமானது.
தொப்பூர் மலைப்பகுதியின் சீரமைப்பை மேம்படுத்துதல்: தமிழ்நாட்டின் மலைப்பாங்கான நிலப்பரப்பில் 6.60 கி.மீ உயர திறன் கொண்ட 8 வழி சாலை திட்டம் போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் பெற்ற ஒரு முக்கியமான பிரிவின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
கர்நாடகா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் திட்டங்கள்
பெலகாவி உள்வட்டச் சாலை (NH848R): 75.39 கிமீ பரப்பளவில் உள்ள இந்த 4-வழிச் சாலை, நகர்ப்புற போக்குவரத்தைக் குறைப்பது, பயண நேரங்களைக் குறைப்பதுடன் கர்நாடகாவில் உள்ள தொழில்துறை மையங்களின் இணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தும்கூர் புறவழிச்சாலை: 44.10 கிமீ 4-வழி புறவழி நெடுஞ்சாலை தும்கூர் நகரத்தைச் சுற்றியுள்ள போக்குவரத்தைச் சீராக்குதல், நெரிசலைக் குறைத்தல் மற்றும் தளவாட செயல்திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
போபால்-சாகர் பொருளாதார வழித்தடம்: மத்தியப் பிரதேசம் முழுவதும் தடையற்ற இணைப்பை எளிதாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட 4-வழிச்சாலை 138.00 கிமீ வழித்தடமாகும். இது பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்கிறது.
குவாலியர் நகரத்தின் மேற்கு புறவழிச்சாலை: இந்த 4-வழிச்சாலை 56.90 கிமீ புறவழி நகர்ப்புற இயக்கத்தை மேம்படுத்துவதையும், குவாலியரில் நெரிசலைக் குறைப்பதையும், பிராந்தியத்தின் பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அயோத்தி நகர் புறவழிச்சாலை: மத்திய பிரதேசத்தின் போபாலில் இணைப்பை மேம்படுத்தவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் 6-வழி 16.44 கிமீ புறவழிச்சாலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் விரைவு சக்தியின் கொள்கைகளின் அடிப்படையில் அனைத்து பதினெட்டு திட்டங்களையும் கட்டமைப்பு திட்டமிடல் குழு மதிப்பீடு செய்தது. பல்வகை உள்கட்டமைப்பின் ஒருங்கிணைந்த வளர்ச்சி, பொருளாதார மற்றும் சமூக முனைகளுடன் கடைசி மைல் இணைப்பு, இடைநிலை இணைப்பு மற்றும் ஒத்திசைக்கப்பட்ட செயல்படுத்தல் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன. இத்திட்டங்கள் பல்வேறு போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைப்பதன் மூலமும், கணிசமான சமூக-பொருளாதார நன்மைகளை வழங்குவதன் மூலமும், பிராந்தியங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பங்களிப்பதன் மூலமும் தேச கட்டமைப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2052562
***
PKV/RR/DL
(Release ID: 2052606)