தேசிய மனித உரிமைகள் ஆணையம்
தேசிய மனித உரிமைகள் ஆணையம் நாளை புதுதில்லியில் சுகாதார சேவைகள் தொடர்பான தேசிய மாநாட்டை நடத்துகிறது
Posted On:
05 SEP 2024 5:54PM by PIB Chennai
தேசிய மனித உரிமைகள் ஆணையம், நித்தி ஆயோக்குடனும் சுகாதார அமைச்சகத்தின் ஆதரவுடனும், சங்கலா அறக்கட்டளையுடன் இணைந்து நாளை (2024 செப்டம்பர் 06) புதுதில்லியில் 'சுகாதாரத்திற்கான உலகளாவிய அணுகல்: டிஜிட்டல் தீர்வுகள்' என்ற தலைப்பில் தேசிய மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாடு மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், முன்னணி வல்லுநர்கள், சுகாதார நிபுணர்கள், டிஜிட்டல் சுகாதார தொழில்நுட்பத் துறை வல்லுநர்கள் போன்றவர்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக கிராமப்புற, தொலைதூர, மலைப்பாங்கான பகுதிகளில் வாழும் மக்களுக்கு குறைந்த செலவில் தரமான சுகாதார சேவைகளுக்கான உலகளாவிய அணுகலுக்கான வழியை இது ஆராயும்.
நித்தி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார். மத்திய சுகாதாரம் குடும்பநல அமைச்சகத்தின் செயலாளர் திரு அபூர்வா சந்திரா சிறப்புரையாற்றுவார். இவர்கள் தொழில்நுட்ப அமர்வுகளுக்கும் தலைமை தாங்குவார்கள். தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளர் திரு பாரத் லால், இந்த மாநாடு குறித்து விளக்குவார்.
இந்த மாநாட்டில் 'சுகாதாரப் பராமரிப்பில் மாற்றத்தின் மாதிரிகள்', 'டிஜிட்டல் ஆரோக்கியத்தில் எதிர்கால எல்லைகள்', 'தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு' ஆகிய மூன்று தொழில்நுட்ப அமர்வுகள் நடைபெறும். தொழில்நுட்ப அமர்வுகள் தவிர, சங்கலா அறக்கட்டளை மேற்கொண்ட ஆராய்ச்சி, கள ஆய்வின் அடிப்படையில் 'உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்புக்கான டிஜிட்டல் தீர்வுகளை மேம்படுத்துதல்' என்ற அறிக்கையும் வெளியிடப்படும்.
2030-ம் ஆண்டுக்குள் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு (UHC) திட்டத்தின் கீழ் எளிதான, மலிவான, தரமான சுகாதார சேவையை வழங்க இந்தியா உறுதிபூண்டுள்ளது. உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு என்ற இலக்கை அடைய, மனித வளத்திற்கு பயிற்சி அளிப்பது உட்பட ஆரம்ப நிலையில் பொது சுகாதார உள்கட்டமைப்பை அரசு வலுப்படுத்தியுள்ளது. கடினமான புவியியல் பகுதிகளில் பின்தங்கிய நிலையில் வாழ்பவர்களைச் சென்றடைய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இது சுகாதார சேவை வழங்கலில் ஒரு சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.
***
PLM/RS/DL
(Release ID: 2052371)
Visitor Counter : 50