குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

மகாராஷ்டிர அரசின் 'இல்லம் தேடிவரும் அரசு' மற்றும் 'முதலமைச்சரின் மூத்த பெண் சகோதரி’ திட்ட பயனாளிகளிடையே குடியரசுத் தலைவர் உரை

Posted On: 04 SEP 2024 5:30PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (செப்டம்பர் 4, 2024) உத்கிரில் உள்ள மகாராஷ்டிரா அரசின் 'இல்லம் தேடிவரும் அரசு' மற்றும் 'முதலமைச்சரின் மூத்த பெண் சகோதரி திட்டங்களின் பயனாளிகள் கூட்டத்தில் உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், 'ஷாசன் அப்லியா தாரி' மற்றும் 'முதலமைச்சரின் மூத்த பெண் சகோதரி திட்டம் ஆகியவை அனைவரையும் உள்ளடக்கிய வளமான சமூகத்தையும், நாட்டையும் உருவாக்குவதற்கான முக்கியமான நடவடிக்கைகள் என்று கூறினார். மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களின் உதவியுடன், மகாராஷ்டிராவில் உள்ள பெண்கள் தன்னம்பிக்கை அடைந்து வருவதை சுட்டிக்காட்டி அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். பெண்களுக்கு நிதி, கல்வியறிவு மற்றும் திறன்களை வழங்குவதற்கும், அவர்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குவதற்காகவும் மாநில அரசை அவர் பாராட்டினார். வெளிப்படையான மற்றும் பொறுப்பான நிர்வாகத்திற்காக மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார். குடிமக்களின் வீட்டு வாசலில் அடிப்படை சேவைகளை அரசாங்கம் வழங்கி வருகிறது, இதனால் அந்த சேவைகளுக்காக அவர்கள் அரசு அலுவலகங்களைத்தேடி ஓட வேண்டியதில்லை.

பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்கான முன்முயற்சிகள் தங்களுக்கு மிகுந்த மனநிறைவை அளிப்பதாக குடியரசுத் தலைவர் கூறினார். இதேபோன்ற சூழ்நிலைகளில், குடும்பத்தின் பொருளாதார வளங்களை பொது நன்மைக்காக பயன்படுத்துவதில், ஆண்களை விட பெண்களுக்கு அதிக உணர்வும் புரிதலும் இருப்பதாக கூறப்படுகிறது. நாம் ஒரு ஆணுக்கு மட்டுமே கல்வி அளித்தால் ஒருவருக்கு மட்டுமே கல்வி அளிக்கிறோம் என்றும், ஆனால் ஒரு பெண்ணுக்கு கல்வி அளித்தால் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் வருங்கால சந்ததியினருக்கும் கல்வி அளிக்கிறோம் என்றும் நம்பப்படுகிறது. பொருளாதார அதிகாரமளித்தலுக்கும் இது பொருந்தும். பெண்கள் பொருளாதார ரீதியாக அதிகாரம் பெற்றால், ஒட்டுமொத்த குடும்பமும், எதிர்கால தலைமுறையினரும் கூட அதிகாரம் பெறுவார்கள்.

மத்திய அரசின் 'லட்சாதிபதி சகோதரி' திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் சுமார் ஒரு கோடி பெண்கள் லட்சாதிபதி சகோதரிகளாக மாறியிருப்பது குறித்து குடியரசுத் தலைவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த முயற்சி பெண்களிடையே தன்னம்பிக்கை, விழிப்புணர்வு மற்றும் புதிய விழிப்புணர்வை அதிகரிக்கிறது என்று அவர் கூறினார்.

பெண்களின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்தை உறுதி செய்ய, மகாராஷ்டிர அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதை குடியரசுத் தலைவர் பாராட்டினார். பெரும்பாலும் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள், குடும்பத்தின் உணவு மற்றும் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்கிறார்கள். ஆனால், தங்கள் சொந்த உணவு மற்றும் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வதில்லை என்று அவர் கூறினார். அவர்களின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துமாறு அவர் அறிவுறுத்தினார். தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் ஒரு சிறந்த எதிர்காலத்திற்காக, அவர்கள் தங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

கடந்த சில ஆண்டுகளில், தொழிலாளர் படையில் பெண்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது குறித்து குடியரசுத் தலைவர் மகிழ்ச்சி தெரிவித்தார். பெண்கள் இப்போது ஒவ்வொரு துறையிலும் பங்களிப்பை வழங்குவதாக அவர் கூறினார். ஆனால், பெண்களின் பங்களிப்பை மேலும் அதிகரிக்க இன்னும் அதிக முயற்சிகள் தேவை. அனைத்து ஆண்களும் பெண்களின் திறனை அங்கீகரித்து, அவர்களின் கனவுகளை நனவாக்க, அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். பெண்களின் முன்னேற்றத்தில் ஏற்படும் எந்தவொரு தடையும், சமூகம் மற்றும் நாட்டின் வளர்ச்சி வேகத்தை குறைப்பதாக அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பு, உத்கிரில் தியான மையத்துடன் கூடிய புத்த விஹார் கட்டிடத்தை திறந்து வைத்த குடியரசுத் தலைவர், பகவான் புத்தர் சிலைக்கு முன்பாக மரியாதை செலுத்தினார்.

***

MM/AG/DL


(Release ID: 2051868) Visitor Counter : 51