தேசிய மனித உரிமைகள் ஆணையம்
ஆந்திராவின் பெண்கள் கல்லூரியின் கழிவறைகளிலும், கர்நாடகாவின் பிரபலமான உணவகத்திலும் மறைத்து வைக்கப்பட்ட கேமராக்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவங்கள்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை
Posted On:
02 SEP 2024 5:45PM by PIB Chennai
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பெண்கள் விடுதியின் கழிவறையில் இருந்து 300 க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொலிகள் மறைத்து வைக்கப்பட்ட கேமராவின் உதவியுடன் எடுக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்.ஹெச்.ஆர்.சி) தாமாக முன்வந்து விசாரணையை மேற்கொண்டுள்ளது. மாணவியர் குழு ஒன்று கேமராவைக் கண்டுபிடித்து குரல் எழுப்பியபோது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த காணொலிகளை மாணவர் விடுதியில் உள்ள சில மாணவர்கள் வாங்கியதாகவும், அதற்காக ஒரு மாணவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில், பெங்களூருவில் உள்ள ஒரு பிரபல உணவகத்தின் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்ட கேமரா கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஊடக செய்திகள் உண்மையாக இருந்தால், மனித உரிமை மீறல் என்ற கடுமையான பிரச்சினையை எழுப்புவதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை வழங்க முடியவில்லை என்பதைக் குறிக்கிறது, இது கவலைக்குரிய விஷயமாகும்.
காவல்துறையினர் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் நிலை உள்ளிட்ட இந்த விவகாரத்தின் விரிவான அறிக்கையை அளிக்குமாறு ஆந்திரா மற்றும் கர்நாடகாவின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர்களுக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகள் எடுத்த / முன்மொழிந்த நடவடிக்கைகளையும் அறிக்கையில் குறிப்பிட வேண்டும். அதிகாரிகளிடமிருந்து இரண்டு வாரங்களுக்குள் பதில் எதிர்பார்க்கப்படுகிறது.
BR/KR
***
(Release ID: 2051171)
Visitor Counter : 45