சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் ஐடியாஸ் 4 லைஃப் இல் யோசனை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை அக்டோபர் 15, 2024 வரை நீட்டித்துள்ளார்
Posted On:
01 SEP 2024 6:00AM by PIB Chennai
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், ஐடியாஸ் 4 லைஃப் இல் யோசனை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை செப்டம்பர் 15, 2024 முதல் அக்டோபர் 15, 2024 வரை நீட்டித்துள்ளார். “வளர்ந்த பொருளாதாரங்களும் வளர்ந்த சுற்றுச்சூழலைத்தழுவ வேண்டும். பொறுப்புள்ள குடிமக்களாக நாம் அனைவரும் வலுவான சுற்றுச்சூழல் உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்", என்று மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் மும்பை ஐ.ஐ.டியில் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் முன்னணிகளின் அவசியத்தை வலியுறுத்தினார்.
புதுமையான சுற்றுச்சூழல் தீர்வுகளை ஊக்குவிப்பதற்காக மகாராஷ்டிரா சுற்றுச்சூழல் துறையுடன் இணைந்து, அமைச்சகம், மும்பை ஐ.ஐ.டியில் 'ஐடியாஸ் 4 லைஃப்' க்கு ஏற்பாடு செய்தது. சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கைமுறையை ஊக்குவிக்கும் யோசனைகளை உருவாக்குவதில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை ஈடுபடுத்துவதற்கான ஒரு முயற்சியாக இந்த நிகழ்வு உள்ளது. இந்த நிகழ்வு மும்பை மற்றும் அதற்கு அப்பால் உள்ள கல்வி சமூகத்தை ஈடுபடுத்த முயல்கிறது, யு.ஜி.சி, ஏ.ஐ.சி.டி.இ, ஐ.ஐ.டி மற்றும் இந்தியா முழுவதும் உள்ள பிற கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து பங்கேற்பை கோருகிறது. மும்பையில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 1200 மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
ஜூன் 05, 2024 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கிய 'தாயின் பெயரில் ஒரு மரம்' பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் மும்பை ஐ.ஐ.டியில் மரக்கன்று ஒன்றை நட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர், அரசின் நோக்கத்தை கோடிட்டுக் காட்டியதோடு, வாழ்க்கையின் அனைத்து அம்சங்களும் ஒன்றோடொன்று இணைந்திருப்பதை வலியுறுத்தும் "ஐடியாஸ் ஃபார் லைஃப்" என்ற கருப்பொருளை விளக்கினார். 'வாழ்க்கை' என்பது மனிதத் தேவைகளுக்கு அப்பாற்பட்டது என்பதை வலியுறுத்திய அவர், அனைத்து உயிரினங்கள் மற்றும் சுற்றுச்சூழலின் இணக்கமான சகவாழ்வுக்கு குரல் கொடுத்தார்.
வளர்ச்சிக்கு மனிதர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறை போதுமானதல்ல என்று வலியுறுத்திய மத்திய அமைச்சர், அதற்கு பதிலாக சுற்றுச்சூழல் உணர்வுள்ள மாதிரியை ஆதரித்தார். அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் பல்லுயிர் இழப்பு போன்ற வளர்ச்சியின் பாதகமான விளைவுகளை எடுத்துரைத்து, உணவு, ஆற்றல், மருந்து மற்றும் பிற வளங்களை வழங்குவதில் இயற்கையின் முக்கிய பங்கை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2050537.
*****
BR / KV
(Release ID: 2050573)
Visitor Counter : 64