இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
அவனி லெகாரா
பாரா துப்பாக்கி சுடுதலில் ஒரு உத்வேகத்தின் அடையாளம்
Posted On:
31 AUG 2024 5:25PM by PIB Chennai
அவனி லெகாரா, 30 ஆகஸ்ட் 2024 அன்று, பாரிஸ் 2024 பாராலிம்பிக்கில் பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் எஸ்.எச் 1 பட்டத்தை வெற்றிகரமாக கைப்பற்றினார். பாரா விளையாட்டு வரலாற்றில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 2001-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பிறந்த அவனி லெகாரா, இந்தியாவின் மிகவும் உத்வேகம் அளிக்கும் விளையாட்டு வீராங்கனைகளில் ஒருவராக உருவெடுத்துள்ளார். உறுதியான அவரது பயணம், 2012 இல் வாழ்க்கையை மாற்றிய சாலை விபத்துக்குப் பிறகு தொடங்கியது. இது அவரை சக்கர நாற்காலியில் தள்ளியது. குறிப்பிடத்தக்க உடல் மற்றும் உணர்ச்சி சவால்கள் இருந்தபோதிலும், அவனியின் தந்தை அவர் குணமடைவதில் முக்கிய பங்கு வகித்தார். உடல் மற்றும் மன மறுவாழ்வுக்கான வழிமுறையாக விளையாட்டை ஆராய ஊக்குவித்தார். பாராலிம்பிக் 2024-ல், 3 பாராலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் தடகள வீரர் என்ற வரலாற்றை அவனி உருவாக்கியுள்ளார். அவரது அர்ப்பணிப்பு இந்தியாவுக்கு தொடர்ந்து பெருமை சேர்க்கிறது.
ஆரம்பத்தில் வில்வித்தையால் ஈர்க்கப்பட்ட அவர், விரைவில் துப்பாக்கி சுடுதலுக்கு மாறினார். புகழ்பெற்ற இந்திய துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ராவால் ஈர்க்கப்பட்ட அவர், 2015- ல் துப்பாக்கி சுடுதலுக்கு மாறினார். அவரது அர்ப்பணிப்பு மற்றும் இயற்கையான திறமை விரைவாக அவரை வேறுபடுத்தியது. மேலும் அவர் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கினார். அவனி பாரா துப்பாக்கி சுடுதலில் உலக சாதனை படைத்து, விளையாட்டில் ஒரு வலிமையான சக்தியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
தனது விளையாட்டு சாதனைகளைத் தாண்டி, அவனி தனது கல்வி முயற்சிகளில் உறுதியாக உள்ளார். கடுமையான பயிற்சிக்கு இடையிலும், அவர் ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டு சட்டப் பட்டப்படிப்பில் சேர்ந்துள்ளார். கல்வியை தனது விளையாட்டு வாழ்க்கையுடன் சமநிலைப்படுத்தும் அவரது திறன் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் சிறந்து விளங்குவதற்கான அவரது உறுதியை எடுத்துக்காட்டுகிறது.
அவனியின் விளையாட்டு வாழ்க்கையின் உச்சம் 2021 இல் டோக்கியோ பாராலிம்பிக் விளையாட்டுகளில் வந்தது, அங்கு அவர் ஒரே நிகழ்வில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் பாராலிம்பியன் என்ற வரலாற்றை உருவாக்கினார். பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் எஸ்.எச்.1 பிரிவில் தங்கப் பதக்கமும், ஆர்8 - மகளிர் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் எஸ்.எச்.1 பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றார். பாராலிம்பிக் 2024 இல் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம், அவனி லெகாரா 3 பாராலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் தடகள வீராங்கனை என்ற வரலாற்றை மீண்டும் உருவாக்கினார். அவரது வெற்றிகள் நாடு முழுவதும் எதிரொலித்தன, மேலும் அவர் இந்திய விளையாட்டுகளில் ஒரு முன்னோடியாக கொண்டாடப்பட்டார்.
பாராலிம்பிக் தங்கப் பதக்கம் வெல்வதற்கான அவனி லெகாராவின் பயணம் இந்திய அரசின் அசைக்க முடியாத ஆதரவால் கணிசமாக வலுப்படுத்தப்பட்டுள்ளது. இலக்கு ஒலிம்பிக் மேடை திட்டத்தின் மூலம், அவனி விரிவான நிதி உதவியைப் பெற்றுள்ளார், இது உயர்மட்ட பயிற்சி வசதிகளை அணுகவும், சிறப்பு விளையாட்டு உபகரணங்களை வாங்கவும், நிபுணர் பயிற்சியிலிருந்து பயனடையவும் அனுமதித்துள்ளது. கூடுதலாக, கேலோ இந்தியா போன்ற திட்டங்கள் அவரது போட்டித்தன்மையை பராமரிக்க தேவையான வளங்களை வழங்கியுள்ளன. பாரா விளையாட்டுகளில் திறமைகளை வளர்ப்பதற்கான அரசின் அர்ப்பணிப்பு அவனியின் வெற்றியின் ஒரு மைல்கல்லாக உள்ளது, இது உலக அரங்கில் சிறந்து விளங்கவும், குறைபாடுகள் உள்ள எண்ணற்ற மற்றவர்களை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
அவனி லெகாராவின் கதை மன உறுதி மற்றும் விடாமுயற்சி இருந்தால், எதுவும் சாத்தியம் என்பதை அவர் நிரூபித்துள்ளார். அவர் தொடர்ந்து தடைகளை உடைத்து புதிய சாதனைகளைப் படைத்து வரும் நிலையில், லட்சக்கணக்கானவர்களுக்கு நம்பிக்கை மற்றும் உத்வேகத்தின் அடையாளமாக அவனி திகழ்கிறார்.
********
PKV/DL
(Release ID: 2050463)
Visitor Counter : 77