உள்துறை அமைச்சகம்

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று ராய்ப்பூரில் தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் மண்டல பிரிவு அலுவலகத்தை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்


வளமான, பாதுகாப்பான இந்தியாவை உருவாக்க போதைப்பொருள் இல்லாத நிலையை உருவாக்குவது அவசியம்: மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா முக்கியமானது

Posted On: 25 AUG 2024 3:33PM by PIB Chennai

சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் (என்சிபி) மண்டல பிரிவு அலுவலகத்தை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று (25.08.2024) காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். சத்தீஸ்கரில் போதைப்பொருள் தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கும் திரு அமித் ஷா தலைமை தாங்கினார். சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு விஷ்ணுதேவ் சாய், மத்திய உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய், சத்தீஸ்கர் துணை முதலமைச்சர் திரு விஜய் சர்மா, மத்திய உள்துறை செயலாளர், புலனாய்வு பிரிவு இயக்குநர், போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் தலைமை இயக்குநர், சத்தீஸ்கர் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மத்திய உள்துறை அமைச்சர் தமது உரையில், போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்கான பிரதமர் திரு நரேந்திர மோடியின் தீர்மானம், நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் தீர்மானமாக மாறி வருகிறது என்று கூறினார். வளமான, பாதுகாப்பான இந்தியாவை உருவாக்குவதற்கு போதைப்பொருள் இல்லாத நிலையை உருவாக்குவது முக்கியமானது என்று அவர் கூறினார். போதைப்பொருள் இந்தியாவின் பிரச்சினை மட்டுமல்ல, உலகளாவிய அச்சுறுத்தல் என்று திரு அமித் ஷா கூறினார்.

இந்தியாவில் போதைப்பொருளுக்கு எதிரான போரை நாம் தீவிரமாகவும், விரிவான உத்தியுடனும் எதிர்த்துப் போராடினால், இந்தப் போரில் நம்மால் வெற்றி பெற முடியும் என்று அவர் தெரிவித்தார்போதைப்பொருள் வர்த்தகத்திலிருந்து சம்பாதிக்கும் பணம் பயங்கரவாதம், இடதுசாரி தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது என்றும் நாட்டின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்துகிறது என்றும் அவர் கூறினார். போதைப்பொருள் நாட்டின் இளம் தலைமுறையை அழிப்பது மட்டுமல்லாமல், நாட்டின் தேசிய பாதுகாப்பையும் பலவீனப்படுத்துகிறது என்று அவர் தெரிவித்தார்.

போதைப்பொருளுக்கு எதிரான சமரசமற்ற கொள்கையில் அனைவரும் ஒன்றிணைந்து முன்னேற வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் ராய்ப்பூர் மண்டல அலுவலகம் இம்மாநிலத்தில் மட்டுமல்ல, முழு பிராந்தியத்திலும் போதைப்பொருளைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று அவர் மேலும் கூறினார். நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி) இருக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம் என்று திரு அமித் ஷா கூறினார். மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் ஒவ்வொரு மாநிலத்திலும் என்சிபி அலுவலகங்களை நிறுவுவதன் மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு போதைப்பொருள் வர்த்தகத்தை முழுவதுமாக முடிவுக்குக் கொண்டுவரும் என்று அவர் மேலும் கூறினார்.

போதைப்பொருள் கடத்தல் வழக்குகளின் புலனாய்வில் அறிவியல் முறைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

போதைப்பொருள் பயன்படுத்துபவர் பாதிக்கப்பட்டவர் என்றும், அதை வர்த்தகம் செய்பவர் குற்றவாளி என்றும் அமைச்சர் கூறினார். போதைப்பொருளைக் கண்டறிதல், அதன் கட்டமைப்பை அழித்தல், குற்றவாளியைக் கைது செய்தல், போதைக்கு அடிமையானவருக்கு மறுவாழ்வு அளித்தல் ஆகிய நான்கு கொள்கைகளைப் பின்பற்றுவதன் மூலம் மட்டுமே இந்த போராட்டத்தில் நாம் வெற்றி பெற முடியும் என்று அவர் கூறினார். போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தில் முழு அரசு அணுகுமுறையை பின்பற்றுவதன் மூலமே நாம் முழுமையான வெற்றியைப் பெற முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் என்சிபி-யின் செயல்பாடு மிகவும் சிறப்பாக உள்ளது என்று திரு அமித் ஷா குறிப்பிட்டார். 2004 முதல் 2014 வரை மொத்தம் போதைப் பொருள்கள் கடத்தல் தொடர்பாக 1250 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், 2014 முதல் 2024 வரையிலான 10 ஆண்டுகளில் 4150 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 230% அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 2004 மற்றும் 2014- க்கு இடையில், மொத்தம் 1,360 கைதுகள் நடந்த்தாகவும், இது இப்போது 6,300 ஆக உயர்ந்துள்ளது என்றும் அவர் கூறினார். இதேபோல், 2004 முதல் 2014 வரை 1 லட்சத்து 52 ஆயிரம் கிலோ போதைப் பொருட்களும், 2014 முதல் 2024 வரை 5 லட்சத்து 43 ஆயிரம் கிலோ போதைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். 2004 முதல் 2014-ம் ஆண்டு வரை பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு ரூ. 5,900 கோடி எனவும், 2014 முதல் 2024 வரை பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களின் மதிப்பு ரூ.22,000 கோடி எனவும் அவர் தெரிவித்தார். போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டதால் பறிமுதலும் கைதும் அதிகரித்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், கடந்த 10 ஆண்டுகளில் போதைப்பொருளுக்கு எதிரான நணவடிக்கைகள் ஒழுங்கமைக்கப்பட்ட அணுகுமுறையுடன் நடைபெற்று வருவதாக அவர் கூறினார். போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் இலக்கை அடைய, இளைஞர்கள், பொதுமக்களிடையே விழிப்புணர்வை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று திரு அமித் ஷா கூறினார்.

*****

PLM / KV

 



(Release ID: 2048739) Visitor Counter : 18