வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
சிங்கப்பூரில் நடைபெறும் 2-வது இந்திய சிங்கப்பூர் அமைச்சர்கள் அளவிலான வட்டமேஜை கூட்டத்தில் வர்த்தகத் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் பங்கேற்கிறார் - மத்திய அமைச்சர்கள் திருமதி நிர்மலா சீதாராமன், திரு ஜெய்சங்கர், திரு அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோரும் பங்கேற்கின்றனர்
Posted On:
25 AUG 2024 9:28AM by PIB Chennai
2-வது இந்திய சிங்கப்பூர் அமைச்சர்கள் வட்டமேஜைக் (ISMR -ஐஎஸ்எம்ஆர்) கூட்டம், 2024 ஆகஸ்ட் 26 அன்று சிங்கப்பூரில் நடைபெற உள்ளது. மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர், ரயில்வே, தகவல் ஒலிபரப்பு அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் இந்த 2 வது ஐஎஸ்எம்ஆர் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இந்தப் பயணத்தின்போது, சிங்கப்பூர் தலைவர்களுடனும் அமைச்சர்களுடனும் இந்திய அமைச்சர்கள் கலந்துரையாடுவார்கள்.
முன்னதாக 2024 ஆகஸ்ட் 25 அன்று, டிபிஎஸ் வங்கி, தெமாசெக் ஹோல்டிங்ஸ், ஓமர்ஸ், உள்ளிட்ட சிங்கப்பூரின் முன்னணி உலகளாவிய நிறுவன பிரதிநிதிகளுடன் வர்த்தக அமைச்சர் ஆலோசனையில் ஈடுபடுவார். இந்தியாவின் வளர்ந்து வரும் சந்தை வாய்ப்புகள், அதன் வளர்ச்சிப் பாதை ஆகியவற்றைப் பயன்படுத்தி, இருதரப்பு வர்த்தகம் - முதலீட்டை அதிகரிப்பதற்கான உத்திகளை அமைச்சர் ஆராய்வார்.
ஐஎஸ்எம்ஆர் என்பது இந்தியா-சிங்கப்பூர் இருதரப்பு உறவுகளுக்கு ஒரு புதிய வேகத்தை ஏற்படுத்த நிறுவப்பட்ட ஒரு தனித்துவமான நடைமுறையாகும். அதன் முதல் கூட்டம் செப்டம்பர் 2022-ல் புதுதில்லியில் நடைபெற்றது. 2-வது கூட்டம், தற்போது நடைபெறவுள்ளது. இது இரு தரப்பினரும் தங்களது ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்யவும், அதை மேலும் உயர்த்தவும், விரிவுபடுத்தவும் புதிய வழிகளை அடையாளம் காணவும் உதவும்.
இந்தியாவுக்கு அந்நிய நேரடி முதலீட்டில் சிங்கப்பூர் முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது. 2023-24 ஆம் ஆண்டில், சிங்கப்பூர், இந்தியாவுக்கான அந்நிய நேரடி முதலீட்டின் (FDI) மிகப்பெரிய ஆதாரமாக இருந்தது. இது 11.77 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 2000 முதல் மார்ச் 2024 வரை சிங்கப்பூரிலிருந்து அந்நிய நேரடி முதலீட்டின் ஒட்டுமொத்த முதலீடு சுமார் 159.94 பில்லியன் டாலர் ஆகும். இருதரப்பு வர்த்தகத்தில், சிங்கப்பூர் 2023-24 ஆம் ஆண்டில் இந்தியாவின் 6 வது பெரிய உலகளாவிய வர்த்தக கூட்டு நாடாக இருந்தது. மொத்த வர்த்தகம் 35.61 பில்லியன் டாலர். இது ஆசியான் உடனான இந்தியாவின் மொத்த வர்த்தகத்தில் சுமார் 29% ஆகும்.
*****
PLM / KV
(Release ID: 2048711)
Visitor Counter : 73