பிரதமர் அலுவலகம்

போலந்து பிரதமருடன் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பின்போது பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 22 AUG 2024 4:40PM by PIB Chennai

போலந்தி பிரதமர் டொனால்ட் டஸ்க் அவர்களே,

இரு நாடுகளின் பிரதிநிதிகளே,

ஊடக நண்பர்களே,

வணக்கம்.

வார்சா நகரில் எனக்கு அளிக்கப்பட்ட அன்பான வரவேற்பு, சிறப்பான விருந்தோம்பல், நட்பான வார்த்தைகளுக்காக பிரதமர் டஸ்க்கிற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் நீண்ட காலமாக இந்தியாவின் நல்ல நண்பராக இருக்கிறீர்கள். இந்தியா - போலந்து இடையேயான நட்புறவை வலுப்படுத்துவதில் நீங்கள் பெரும் பங்களிப்பை அளித்துள்ளீர்கள்.

நண்பர்களே,

இந்தியா - போலந்து இடையேயான உறவுகள் இன்று சிறப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

இன்று, 45 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு இந்தியப் பிரதமர் போலந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

எனது மூன்றாவது பதவிக்காலத்தின் தொடக்கத்தில் இந்த அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்துள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில், போலந்து அரசுக்கும் இங்குள்ள மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

2022-ஆம் ஆண்டில் உக்ரைன் போரின் போது சிக்கிய இந்திய மாணவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதில் நீங்கள் காட்டிய ஆதரவை இந்தியர்களாகிய நாங்கள் ஒருபோதும் மறக்க முடியாது.

நண்பர்களே,

இந்த ஆண்டு நாம் நமது தூதரக உறவுகளின் 70 ஆண்டுகளைக் கொண்டாடுகிறோம்.

இந்தத் தருணத்தில், எங்களது உறவை தூதரக ஒத்துழைப்பை மேலும் சிறப்பாக மாற்றியமைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

இந்தியா - போலந்து இடையேயான உறவுகள் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி போன்ற பகிர்ந்து கொள்ளப்பட்ட மதிப்புகளை அடிப்படையாகக் கொண்டவை.

நமது உறவுகளுக்கு ஒரு புதிய பாதையை வழங்குவதற்கான பல முன்முயற்சிகளை இன்று நாம் அடையாளம் கண்டுள்ளோம்.

இரண்டு ஜனநாயக நாடுகள் என்ற வகையில், நமது நாடாளுமன்றங்களுக்கு இடையிலான பரிமாற்றங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்த தனியார் துறையை இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

உணவு பதப்படுத்துதலில் உலக முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளில் போலந்தும் ஒன்றாகும்.

இந்தியாவில் கட்டப்பட்டு வரும் மெகா உணவுப் பூங்காக்களில் போலந்து நிறுவனங்களும் இணைய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

இந்தியாவில் விரைவான நகரமயமாக்கல், நீர் சுத்திகரிப்பு, திடக்கழிவு மேலாண்மை, நகர்ப்புற உள்கட்டமைப்பு போன்ற துறைகள், நமது ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளை திறந்து விட்டுள்ளது.

தூய்மையான நிலக்கரி தொழில்நுட்பம், பசுமை ஹைட்ரஜன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு ஆகியவையும் நமது பொதுவான முன்னுரிமைகளாக உள்ளன.

இந்தியாவில் உற்பத்தி செய்வோம், உலகத்திற்காக தயாரிப்போம் இயக்கத்தில் சேருமாறு போலந்து நிறுவனங்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

நிதித் தொழில்நுட்பம், மருந்து, விண்வெளி போன்ற துறைகளில் இந்தியா பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.

இந்தத் துறைகளில் எங்கள் அனுபவத்தை போலந்துடன் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்.

பாதுகாப்புத் துறையில் நெருங்கிய ஒத்துழைப்பு என்பது நமது ஆழமான பரஸ்பர நம்பிக்கையின் அடையாளமாகும்.

இத்துறையில் பரஸ்பர ஒத்துழைப்பு வலுப்பெறும்.

புதுமையும், திறமையும் நம் இரு நாடுகளின் இளைஞர் சக்தியின் அடையாளம்.

திறமையான தொழிலாளர்களின் நலனுக்காகவும், போக்குவரத்தை மேம்படுத்துவதற்காகவும், இரு தரப்பினருக்கும் இடையே ஒரு சமூக ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

நண்பர்களே,

சர்வதேச அரங்கில் இந்தியாவும் போலந்தும் நெருக்கமான ஒருங்கிணைப்பில் முன்னேறி வருகின்றன.

உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள, ஐக்கிய நாடுகள் சபை, இதர சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தம் மேற்கொள்வது காலத்தின் தேவை என்பதை நாங்கள் இருவரும் ஒப்புக் கொண்டோம்.

தீவிரவாதம் நமக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. அதை ஒடுக்க வேண்டியது அவசியம்.

மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட இந்தியா, போலந்து போன்ற நாடுகளுக்கு இடையே இதுபோன்ற விஷயங்களில் ஒத்துழைப்பு அதிகம் தேவைப்படுகிறது.

அதேபோல், பருவநிலை மாற்றம் தொடர்பான செயல்திட்டங்களை நாம் பகிர்ந்து கொள்ள முன்னுரிமை அளிக்க வேண்டும்.

பசுமையான எதிர்காலத்திற்காக பணியாற்ற எங்கள் பலத்தை ஒன்றிணைப்போம்.

2025 ஜனவரியில் போலந்து ஐரோப்பிய யூனியனின் தலைமைப் பொறுப்பை ஏற்கும்.

உங்கள் ஆதரவு இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையேயான உறவுகளை வலுப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.

நண்பர்களே,

உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியாவில் நடந்து வரும் மோதல்கள் நம் அனைவருக்கும் ஆழ்ந்த கவலை அளிக்கும் விஷயமாகும்.

போர்க்களத்தில் எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியாது என்பது இந்தியாவின் உறுதியான நம்பிக்கை.

எந்தவொரு நெருக்கடியிலும், அப்பாவி மக்களின் உயிர் இழப்பு ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.

அமைதி மற்றும் நிலைத்தன்மையை விரைவில் மீட்டெடுப்பதற்கு பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர செயல்பாடுகளை நாங்கள் ஆதரிக்கிறோம்.

இதற்காக, இந்தியா, அதன் நட்பு நாடுகளுடன் சேர்ந்து, சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்கத் தயாராக உள்ளது.

நண்பர்களே,

போலந்து மிகவும் பழமையான மற்றும் வளமான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.

இந்திய நாகரிகம் மற்றும் மொழிகள் மீதான போலந்தின் ஆழ்ந்த ஆர்வம் நமது உறவுகளுக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது.

நமது மக்களுக்கு இடையேயான ஆழமான உறவுகளின் நேரடியான மற்றும் துடிப்பான உதாரணத்தை நேற்று நான் கண்டேன்.

இந்தியாவின் டோப்ரே மகாராஜா, கோலாப்பூர் மகாராஜா நினைவாக கட்டப்பட்ட நினைவுச்சின்னங்களுக்கு அஞ்சலி செலுத்தும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.

இன்றும் போலந்து மக்கள் அவரது நல்ல மனப்பான்மையை மதிக்கிறார்கள் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

அவரது நினைவைப் போற்றும் வகையில், இந்தியா - போலந்து இடையே நவாநகர் ஜாம் சாஹேப் இளைஞர் பரிமாற்றத் திட்டத்தை  நாங்கள் தொடங்க உள்ளோம்.

இதில் ஒவ்வொரு ஆண்டும் போலந்தைச் சேர்ந்த 20 இளைஞர்கள் இந்தியாவுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள்.

நண்பர்களே,

பிரதமர் டஸ்க் மற்றும் அவரது நட்புக்கு மீண்டும் ஒரு முறை எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது உறவுகளை புதிய நிலைக்கு எடுத்துச் செல்ல நான் உறுதிபூண்டுள்ளேன்.

மிக்க நன்றி.

பொறுப்புத் துறப்பு - இது பிரதமரின் கருத்துக்களின் உத்தேசமான மொழிபெயர்ப்பு. பிரதமர் தமது கருத்துக்களை இந்தியில் பேசி இருந்தார்.

***

PLM/DL



(Release ID: 2047807) Visitor Counter : 21