வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மின்சார வாகனங்கள் போன்ற துறைகளுக்கு தேவையான முக்கிய கனிமங்களுக்கான இந்தியாவின் தேவையை ஆப்பிரிக்காவால் பூர்த்தி செய்ய முடியும்: மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்

Posted On: 21 AUG 2024 5:31PM by PIB Chennai

மின்சார வாகனங்கள் போன்ற சில துறைகளுக்குத் தேவைப்படும் முக்கிய கனிமங்களின் தேவையை ஆப்பிரிக்காவால் பூர்த்தி செய்ய முடியும் என்று மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறினார். புதுதில்லியில் இன்று நடைபெற்ற 19-வது சிஐஐ இந்தியா-ஆப்பிரிக்கா வர்த்தக மாநாட்டில் வர்த்தக அமைச்சர்களின் சிறப்பு கூட்டத்தில் உரையாற்றிய திரு கோயல் இதனைத் தெரிவித்தார்.

ஆப்பிரிக்காவால் கனிமங்கள் நிறைந்த பகுதியாக இருப்பதால் சுரங்கத் துறையில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை திரு கோயல் எடுத்துரைத்தார். நீடித்த சுரங்க நடைமுறைகள் மற்றும் இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா கூட்டு ஒத்துழைப்பு மூலம் கனிமங்களுக்கு மதிப்பு கூட்டுதல் ஆகியவை குறித்தும் அவர் பேசினார்.

அடுத்த ஏழு ஆண்டுகளில் இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா இடையேயான வர்த்தகத்தை இரட்டிப்பாக்க திரு கோயல் ஒரு லட்சிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர்  கூறினார். ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையே வர்த்தகத்திற்கு பெரும் வாய்ப்புகள் உள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார். வேளாண்மை, மருந்துகள், ஜவுளி, மோட்டார் வாகனங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவற்றில் இந்தியாவின் வலிமை ஆப்பிரிக்காவின் வளர்ச்சித் தேவைகளுடன் ஒத்துப்போகிறது என்று அமைச்சர் கூறினார். சுரங்கம், சுற்றுலா, வேளாண் பொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்கள் ஆகியவற்றில் ஆப்பிரிக்காவின் வலிமை இந்தியாவின் வளர்ச்சித் தேவைகளை பூர்த்தி செய்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். சமமான வர்த்தகத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

இந்தியாவுக்கும், ஆப்பிரிக்காவுக்கும் இடையே, குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில், தொழில்நுட்பம் சார்ந்த ஒத்துழைப்பின் சாத்தியக்கூறுகளை திரு கோயல் எடுத்துரைத்தார்.

உணவுப் பாதுகாப்பு பிரச்சினை குறித்து பேசிய அமைச்சர், ஆப்பிரிக்காவின் விவசாயத் துறைக்கு இந்தியா குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்க முடியும் என்று குறிப்பிட்டார். இந்தியாவில் எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள் மற்றும் இதர பயிர்களுக்கான தேவை அதிகரித்து வருவதை குறிப்பிட்ட அவர், இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக ஆப்பிரிக்காவில் உள்ள தோட்டத் துறைகளில் ஒத்துழைப்பை  ஏற்படுத்தலாம்  என முன்மொழிந்தார்.

இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக சிஐஐ இந்தியா ஆப்பிரிக்கா வர்த்தக மாநாட்டின் முயற்சியைப் பாராட்டிய அவர், லட்சிய இலக்குகளை நிர்ணயித்து அவற்றை அடைய விடாமுயற்சியுடன் பணியாற்றுமாறு பங்கேற்பாளர்களை வலியுறுத்தினார்.

ஆப்பிரிக்க யூனியனை ஜி-20 அமைப்பில் முழு உறுப்பினராக கொண்டு வர பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான கூட்டு முயற்சிகளை அமைச்சர் எடுத்துரைத்தார். பல்வேறு சர்வதேச மன்றங்களில் ஆப்பிரிக்க பிரச்சினைகளை எழுப்ப இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகள், இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா இடையேயான வலுவான ஒத்துழைப்பின் தொடக்கத்தைக் குறிக்கிறது என்று திரு பியூஷ் கோயல் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2047346

***

PLM/RS/DL


(Release ID: 2047379) Visitor Counter : 76