மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் தலைவர் மாளிகையில், நாடு முழுவதும் உள்ள பல்வேறு பள்ளி குழந்தைகளுடன், குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு ரக்ஷா பந்தன் கொண்டாடினார்

Posted On: 19 AUG 2024 7:24PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் மாளிகையில், இன்று நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் மாணவர்களுடன் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, ரக்ஷா பந்தன் கொண்டாட்டத்தைக் கொண்டாடினார்.

மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு ஜெயந்த் சவுத்ரி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை செயலாளர் திரு சஞ்சய் குமார் மற்றும் கல்வி அமைச்சகத்தின் பிற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மாணவர்களை ஆசீர்வதித்து வழிகாட்டியதற்காகவும், இந்த ரக்ஷா பந்தனை அவர்களுக்கு சிறப்பான ஒன்றாக மாற்றியதற்காகவும் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவுக்கு திரு தர்மேந்திர பிரதான் தனது நன்றியைத் தெரிவித்தார். பின்னர், மாணவர்களுடன் உரையாடிய அவர், அவர்களின் இலக்குகள் மற்றும் விருப்பங்கள் குறித்து கேட்டறிந்தார்.

ஒடிசாவின் சம்பல்பூரைச் சேர்ந்த மாணவர்களில் ஒருவரான பிரியான்ஷா பிரதான், ரக்ஷா பந்தன் கொண்டாடுவது குறித்த தனது உற்சாகத்தை குடியரசுத் தலைவருடன் பகிர்ந்து கொண்டார். ரக்ஷா பந்தன் பண்டிகையின் உணர்வு சகோதர, சகோதரிகளுக்கு இடையில் மட்டுமல்ல ராணுவ வீரர்கள், பெற்றோர்கள் மற்றும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற குடியரசுத் தலைவரின் கருத்துகள் தனக்கு பெருமளவில் உத்வேகம் அளித்ததாக அவர் கூறினார். அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர், குடியரசுத் தலைவரின் எளிமையும், அரவணைப்பும் தம்மை எவ்வாறு கவர்ந்தது என்று கூறினார்.

16 மாநிலங்களின் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 180-க்கும் மேற்பட்ட மாணவர்கள் குடியரசுத் தலைவரை இன்று சந்தித்தனர். இந்தியாவின் வளமான கட்டிடக்கலை மற்றும் தோட்டக்கலை பாரம்பரியத்திற்கு சான்றாக நிற்கும் குடியரசுத் தலைவர் மாளிகையில் அமைந்துள்ள அமிர்த தோட்டத்தை மாணவர்கள் பார்வையிட்டனர். குடியரசுத் தலைவருடன் கலந்துரையாடுவதற்கான இந்த வாய்ப்பு மாணவர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருந்ததுடன், நாட்டின் கலாச்சார பாரம்பரியங்கள் மீதான பெரும் பெருமை மற்றும் மரியாதை உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்தியது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2046743

***

IR/AG/DL


(Release ID: 2046772) Visitor Counter : 45