பாதுகாப்பு அமைச்சகம்

முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் பத்மநாபன் மறைவுக்கு இந்திய ராணுவம் இரங்கல் தெரிவித்துள்ளது

Posted On: 19 AUG 2024 4:16PM by PIB Chennai

20-வது ராணுவ தளபதியாக பணியாற்றிய ஜெனரல் சுந்தரராஜன் பத்மநாபன் (ஓய்வு) மறைவுக்கு இந்திய ராணுவம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி மற்றும் இந்திய ராணுவத்தின் அனைத்து பிரிவுகளும்  அவரது குடும்பத்திற்கு தங்களது இரங்கலை தெரிவித்துள்ளன.

ஜெனரல் பத்மநாபன் நேற்று இரவு சென்னையில் தனது 83 வயதில் காலமானார், முன்மாதிரியான தலைமை பண்புடன், அர்ப்பணிப்புடன் நாட்டிற்காகப் பணியாற்றினார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 1940-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி பிறந்த ஜெனரல் பத்மநாபன் டேராடூனில் உள்ள தேசிய இந்திய இராணுவக் கல்லூரி (ஆர்.ஐ.எம்.சி) மற்றும் கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய ராணுவ அகாடமி (என்.டி.ஏ) ஆகியவற்றின் புகழ்பெற்ற முன்னாள் மாணவர் ஆவார். அவர் 1959 டிசம்பர் 13 அன்று பீரங்கிப் படைப்பிரிவில் நியமிக்கப்பட்டார்.

அவர் கசாலா படைப்பிரிவு, இரண்டு காலாட்படை பிரிகேடுகள் மற்றும் ஒரு பீரங்கி பிரிகேட் ஆகியவற்றிற்கு கமாண்டிங் அதிகாரியாக இருந்தார். லெப்டினன்ட் ஜெனரலாக, காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஒரு ராணுவ குழுவை வழிநடத்தினார், அங்கு அவர் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்தார்.

1996 செப்டம்பர் 1 அன்று, ஜெனரல் பத்மநாபன் வடக்கு கமாண்டிங் பொது அதிகாரியாகவும், பின்னர் தெற்கு கமாண்டிங் தலைமை அதிகாரியாகவும் பொறுப்பேற்றார். அவர் 2000, அக்டோபர் 1 அன்று ராணுவத் தளபதியாக பதவியேற்றார்.

'ஆபரேஷன் பரக்ரம்' என்ற முக்கியமான காலகட்டத்தில் ஜெனரல் பத்மநாபன் இந்திய ராணுவத்தை வழிநடத்தினார். 43 ஆண்டுகால முன்மாதிரியான சேவைக்குப் பிறகு 2002 டிசம்பர் 31  அன்று அவர் ஓய்வு பெற்றார். அவரது மறைவு நாட்டிற்கும், இந்திய ராணுவத்திற்கும் பேரிழப்பாகும்.

ஜெனரல் பத்மநாபனின் ஈடுஇணையற்ற அர்ப்பணிப்பு மற்றும் தேசிய பாதுகாப்புக்கான பங்களிப்புகளுக்காக நாடு அவரை நினைவில் கொள்ளும். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2046642

***

IR/AG/KR

 



(Release ID: 2046674) Visitor Counter : 46