தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

2022-ம் ஆண்டுக்கான 70-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு; பொன்னியின் செல்வன் பகுதி-1, சிறந்த தமிழ்ப்படமாக தேர்வு, திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நித்யாமேனனுக்கு சிறந்த நடிகை விருது

Posted On: 16 AUG 2024 4:15PM by PIB Chennai

70-வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான தேர்வுக் குழு, 2022-ம் ஆண்டுக்கான விருது பெற்றவர்கள் பட்டியலை இன்று அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பையொட்டி, சிறந்த திரைப்படங்களுக்கான தேர்வுக் குழுத் தலைவர் திரு ராகுல் ரவைல், கதையம்சம் அல்லாத படங்களுக்கான தேர்வுக் குழுத் தலைவர் திரு நீல மாதப் பாண்டா, திரைப்படங்கள் குறித்து சிறப்பாக எழுதியவர்களுக்கான தேர்வுக் குழுத்தலைவர் திரு கங்காதர் முதலியார் மற்றும் சம்பந்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த தேர்வுக்குழு உறுப்பினர்களுடன் சென்று, மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவிடம், 2022-ம் ஆண்டுக்கான 70-வது தேசிய திரைப்பட விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியலை வழங்கினர். மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன், துறையின் செயலாளர் திரு சஞ்சய் ஜாஜூ, இணைச்செயலாளர் (திரைப்படங்கள்) திருமதி பிருந்தா தேசாய் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்தத் திரைப்படத் தேர்வுக்குழுவில், இந்திய திரையுலகைச் சேர்ந்த பிரபல தயாரிப்பாளர்கள் மற்றும் திரை உலகினர்  இடம் பெற்றிருந்தனர். விருது பெற்றவர்களின் பட்டியலை, மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணைச் செயலாளர் (திரைப்படங்கள்) திருமதி பிருந்தா தேசாய் முன்னிலையில், சிறந்த திரைப்படங்களுக்கான தேர்வுக் குழுத் தலைவர் திரு ராகுல் ரவைல், கதையம்சம் அல்லாத படங்களுக்கான தேர்வுக் குழுத் தலைவர் திரு நீல மாதப் பாண்டா, திரைப்படங்கள் குறித்து சிறப்பாக எழுதியவர்களுக்கான தேர்வுக் குழுத்தலைவர் திரு கங்காதர் முதலியார் ஆகியோர் அறிவித்தனர்.  இதன்படி, ஆனந்த் ஏகர்ஷி இயக்கிய ஆட்டம் திரைப்படம் தேர்வு சிறந்த திரைப்படமாக செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த பொழுதுபோக்கிற்கான சிறந்த திரைப்படமாக காந்தாரா தேர்வு செய்யப்பட்டுள்ளது.

காந்தாரா படத்தில் நடித்த ரிஷப் ஷெட்டி சிறந்த நடிகராகவும், திருச்சிற்றம்பலம் தமிழ் திரைப்படத்தில் நடித்த நித்யா மேனன் சிறந்த நடிகைக்கான விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இது தவிர திருச்சிற்றம்பலம் படத்தில் இடம் பெற்ற மேகம் கருக்காதா என்ற பாடலுக்கு நடனம் அமைத்த ஜானி மாஸ்டர் மற்றும் சதீஷ் கிருஷ்ணன் ஆகியோர் சிறந்த நடன ஆசிரியருக்கான விருதைப் பெறவுள்ளனர்.

இயக்குநர் மணிரத்னம் தயாரித்த பொன்னியின் செல்வன் பகுதி-1 சிறந்த தமிழ்த் திரைப்படமாகவும், அந்தப் படத்திற்கு பின்னணி இசையமைத்த ஏ ஆர் ரஹ்மான் சிறந்த இசையமைப்பாளராகவும், அதே படத்தில் ஒலிப்பதிவு செய்த ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி, சிறந்த ஒலி அமைப்பாளராகவும், பொன்னியின் செல்வன் படத்திற்கு திரைக்கதை எழுதிய ரவிவர்மன், சிறந்த திரைக்கதை ஆசிரியராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இது தவிர பல்வேறு பிரிவுகளில் விருது பெற்றவர்களின் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரம்மாஸ்திரா பகுதி-1: சிவா, அனிமேஷன், சிறந்த காட்சியமைப்பு மற்றும் காமிக் பிரிவில் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2045960 

***

MM/AG/RR



(Release ID: 2045993) Visitor Counter : 37