பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்

78-வது சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கு அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் பாராட்டு

Posted On: 15 AUG 2024 1:19PM by PIB Chennai

ஊரக இந்தியாவில் நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள்/ ஊரக உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும்/ பெண் பிரதிநிதிகளும் தலைமையேற்க வேண்டும் என்று மத்திய பஞ்சாயத்துராஜ், மீன்வளம். கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங்  வலியுறுத்தியுள்ளார்.

புதுதில்லியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள்/ ஊரக உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்/ பெண் பிரதிநிதிகள் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி டாக்டர் அம்பேத்கர்  சர்வதேச மையத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர், ஊரகப்பகுதிகளின் நிர்வாக விரிவாக்கத்திற்கும், பொது சேவை செய்வதற்கும் இ-கிராம் ஸ்வராஜ்- பாஷினி ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு கொண்ட நவீன தொழில்நுட்பங்களை பெண் தலைவர்கள்  முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உங்களின் பணி அடிப்படையில், உங்களின் அடையாளத்தை ஏற்படுத்துங்கள் என்று அவர் வலியுறுத்தினார். இந்திய மேலாண்மை கல்விக்கழகம் போன்ற முன்னணி அமைப்புகளின் பஞ்சாயத்து பிரதிநிதிகள் பயிற்சி பெறுவதை மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் சாத்தியமாக்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

78-வது சுதந்திர தின விழாவிற்கு பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள்/ ஊரக உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும்/ பெண் பிரதிநிதிகளும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருப்பது நாட்டின் முன்னேற்றத்தில் அவர்களின் முக்கிய பங்களிப்புக்கும் சிறப்பு மிக்க பணியை அங்கீகாரத்திற்கும் சான்றாக விளங்குகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய பஞ்சாயத்து ராஜ் இணையமைச்சர் திரு எஸ்பி சிங் பாகேல், சொந்த வாழ்க்கையிலும், சமூக மற்றும் தொழில் முறையிலான வாழ்க்கையிலும் பெரிய இலக்குகளை நிர்ணயித்துக்கொண்டு கூட்டான முன்னேற்றத்திற்கு பாடுபடுமாறு கேட்டுக்கொண்டார். பிரதமரின் வாழ்க்கையையும், தலைமைத்துவத்தையும் முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு முழு மனதோடு பங்களிப்பு செய்யுமாறு அவர்களை  திரு பாகேல் வலியுறுத்தினார்.

நாடு முழுவதிலிமிருந்து 400-க்கும் அதிகமான பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள்/ ஊரக உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும்/ பெண் பிரதிநிதிகளும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில்  உள்ள கம்பல்வாடி ஊராட்சி மன்ற தலைவரான திருமதி அனிதா சுரேஷ் குசாலே சிறப்பான முறையில் கௌரவிக்கப்பட்டார். இவர் 2014 பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற ஸ்வப்னில் குசாலேயின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2045567

***

SMB/RS/KV



(Release ID: 2045607) Visitor Counter : 21