பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

78-வது சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்தியாவின் வருங்காலத்திற்கான லட்சியத்துடன் கூடிய இலக்கை நிர்ணயித்துள்ளார்

Posted On: 15 AUG 2024 10:16AM by PIB Chennai

78-வது சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்தியாவை பல்வேறு துறைகளிலும் உலகின் முன்னணி நாடாக மாற்றுவதற்கு, நாட்டின் வளர்ச்சியை வடிவமைத்து, புதுமை கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் நோக்கில், வருங்காலத்திற்கான தொடர் இலக்குகளை நிர்ணயித்துள்ளார்.

 பிரதமர் உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

  1. வாழ்க்கையை எளிதாக்கும் இயக்கம்: ‘வாழ்க்கையை எளிதாக்குதல்’ என்ற தமது தொலைநோக்கு கொள்கையை ஒரு இயக்கமாக செயல்படுத்த இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். முறையான மதிப்பீடுகள், கட்டமைப்பு வசதிகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதன் வாயிலாக நகர்ப்புறங்களில் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவது பற்றியும் அவர் குறிப்பிட்டார்.
  2. நாளந்தா உணர்வுக்கு புத்துயிரூட்டுதல் : பண்டைக்கால நாளந்தா பல்கலைக்கழக உணர்வுக்கு புத்துயிரூட்ட வேண்டும் என்று தெரிவித்த பிரதமர், உயர்கல்வி கற்றல் மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம், இந்தியாவை உலகளாவிய கல்வி மையமாக மாற்ற வேண்டும் என்றார். 2024-ல் நாளந்தா பல்கலைக்கழகத்தை தொடங்கியிருப்பதில் இது அடங்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.
  3. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிப்-செமிகண்டக்டர் உற்பத்தி : செமிகண்டக்டர் உற்பத்தியில் இந்தியாவை உலகின் முன்னணி நாடாக மாற்றுவதற்கான உறுதிப்பாட்டை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, இறக்குமதியை சார்ந்திருக்கும் நிலையை குறைத்து, தொழில்நுட்ப தன்னிறைவை அதிகரிக்க வேண்டும் என்றார்.
  4. திறன் இந்தியா : 2024 பட்ஜெட் பற்றி குறிப்பிட்ட பிரதமர், இந்திய இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து, உலகின் திறன்மிகு தலைநகராக மாற்றும் நோக்கில் அரசு அறிவித்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முன்முயற்சிகளை எடுத்துரைத்தார்.
  5. தொழில் உற்பத்தி மையம் : இந்தியாவை உலகின் உற்பத்தி மையமாக மாற்றியமைப்பதற்கான தொலைநோக்குப் பார்வையை வெளியிட்ட பிரதமர் மோடி, அதன் பரந்து விரிந்த வளங்கள் மற்றும் திறன் பயிற்சி பெற்ற தொழிலாளர்களை ஊக்குவிப்பதற்கான திட்டங்களையும் அறிவித்தார்.
  6. “இந்தியாவில் வடிவமைப்பு, உலகிற்கான வடிவமைப்பு”: உள்நாட்டு வடிவமைப்பு திறன் குறித்து பாராட்டிய பிரதமர், உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்யுமாறும் வலியுறுத்தினார்.
  7. உலகளாவிய விளையாட்டுச் சந்தையில் முன்னணி : இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விளையாட்டுப் பொருட்களை சந்தைப்படுத்த, இந்தியா தனது செழுமையான பழங்கால மரபுகள் மற்றும் இலக்கியங்களை ஊக்குவிக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார். உலகளாவிய விளையாட்டுச் சந்தையில் இந்திய வல்லுநர்கள் முன்னிலை வகிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், விளையாடுவதில் மட்டுமின்றி, விளையாட்டுகளை உருவாக்குவதிலும் முன்னோடியாக திகழ்வதுடன், இந்திய விளையாட்டுகள் உலகளவில் சென்றடைய செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.  
  8. பசுமை வேலைவாய்ப்புகள் மற்றும் பசுமை ஹைட்ரஜன் இயக்கம் : பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான இந்தியாவின் முயற்சியில் பசுமை வேலைவாய்ப்புகளின் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி வலியுறுத்தினார். பசுமை வளர்ச்சி மற்றும் பசுமை வேலை வாய்ப்பில் நாடு தற்போது கவனம் செலுத்துவதாக கூறிய அவர், இது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கக் கூடிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் தெரிவித்தார்.
  9. பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் நீடித்த வேலைவாய்ப்புகளை உருவாக்குவதென்ற இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.  
  10. ஆரோக்கியமான இந்தியா இயக்கம் : 2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய, இந்தியா, ‘ஆரோக்கியமான இந்தியா’ என்ற பாதையை பின்பற்ற வேண்டும் என்று கூறிய பிரதமர், இதற்காக தேசிய ஊட்டச்சத்து இயக்கம் தொடங்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
  11. மாநில அளவிலான முதலீட்டுப் போட்டி : முதலீடுகளை ஈர்க்கவும், நல்லாட்சிக்கான உத்தரவாதம் வழங்கவும், சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் நம்பிக்கையை உறுதிப்படுத்தவும், மாநில அரசுகள் தெளிவான கொள்கைகளை உருவாக்குமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார்.
  12. உலக குறியீடுகளுக்கேற்ப இந்தியாவின் தரம் : தர நெறிமுறைகளை கடைபிடிப்பதற்கான உறுதிப்பாடு அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற இந்தியாவின் எதிர்பார்ப்பை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, இந்தியாவின் தர விதிகள் சர்வதேச குறியீடாக மாறுவதற்கு முயற்சிக்க வேண்டும் என்றார்.
  13. பருவநிலை மாற்ற இலக்குகள் :  2030-க்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி என்ற இலக்கை அடைவதற்கான இந்தியாவின் குறிக்கோளையும் பிரதமர் மீண்டும் உறுதிப்பட தெரிவித்தார்.
  14. மருத்துவக் கல்வி விரிவாக்கம் : அடுத்த ஐந்து ஆண்டுகளில் 75 ஆயிரம் புதிய மருத்துவ இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட இருப்பதாக அறிவித்த பிரதமர் மோடி, நாட்டின் மருத்துவக் கல்வி திறனை விரிவுபடுத்தி, அதிகரித்து வரும் சுகாதார சேவை வல்லுநர்களின் தேவையை பூர்த்தி செய்வதே இதன் நோக்கம் என்றார்.
  15. அரசியலில் புது ரத்தம் பாய்ச்சுதல் : அரசியலில் ஒரு லட்சம் இளைஞர்களை, குறிப்பாக அரசியல் பின்புலம் இல்லாத குடும்பங்களை சேர்ந்தவர்களை ஈடுபடுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். வாரிசு, சாதிய தீமைகளை எதிர்த்துப் போராட, இந்திய அரசியலில் புது ரத்தம் பாய்ச்சுவதே இதன் நோக்கம் என்றும் தெரிவித்தார்.

 

***

MM/RJ/KV


(Release ID: 2045540) Visitor Counter : 145