பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வயநாட்டில் இந்திய கடற்படை மீட்பு, நிவாரணப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்கிறது

Posted On: 03 AUG 2024 1:47PM by PIB Chennai

மோசமான வானிலை, கடினமான நிலப்பரப்பு அமைப்புகளுக்கு மத்தியில், வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்திய கடற்படை மீட்பு, நிவாரண நடவடிக்கைகளை முழு வீச்சில் தீவிரமாகத் தொடர்கிறது. நிவாரண முயற்சிகளை அதிகரிக்கவும், பேரழிவால் பாதிக்கப்பட்ட உள்ளூர் மக்களுக்கு ஆதரவளிக்கவும் கூடுதல் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது 78 கடற்படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த குழுக்கள் சூரல்மலா, முண்டக்கை பகுதிகளின் பல இடங்களில் பணியில் ஈடுபடுகின்றனர்.  மேலும் பேரிடர் நிவாரணப் படையினர், உள்ளூர் நிர்வாகத்துடன் கைகோர்த்து செயல்படுகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், உணவு மற்றும் இதர பொருட்களை தொடர்ந்து வழங்குவதற்காக ஒரு குழு செயல்படுகிறது.

மற்ற குழுக்கள் பிழைத்தவர்களைத் தேடுதல், இடிபாடுகளை அகற்றுதல், உடல்களை மீட்டெடுக்கும் பணி போன்றவற்றில் ஈடுபடுகின்றது. காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி வழங்குவதற்காக சூரல்மலாவில் மருத்துவ மையல் அமைக்கப்பட்டுள்ளது.

03 அதிகாரிகள், 30 மாலுமிகளைக் கொண்ட ஒரு குழு, 2024 ஆகஸ்ட் 01 அன்று நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலா, முண்டக்கை பகுதிகளை இணைக்கும் ஆற்றின் மீது முக்கியமான பெய்லி பாலத்தை நிர்மாணிப்பதில் இந்திய ராணுவத்திற்கு உதவியது. கனரக இயந்திரங்கள், ஆம்புலன்ஸ்களின் இயக்கத்திற்கு உதவும் போக்குவரத்தின்  முதுகெலும்பாக இந்தப் பாலம் செயல்படுகிறது.

02 ஆகஸ்ட் 24 அன்று, கோழிக்கோட்டில் இருந்து இயக்கப்படும் ஐஎன்எஸ் கருடாவின் இந்திய கடற்படையின் மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் (ஏஎல்எச்) பாதிக்கப்பட்ட பகுதிகளில் வான்வழி மீட்புப் பணியை மேற்கொண்டது.

சிக்கித் தவிக்கும் மக்களை விரைவாக வெளியேற்றுதல், அடிப்படை வசதிகள், மருத்துவ உதவிகளை வழங்குவதை உறுதி செய்வதற்காக இந்திய கடற்படை உள்ளூர் நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.

 

***

PLM/DL


(Release ID: 2041126) Visitor Counter : 86