உள்துறை அமைச்சகம்
தடயவியல் ஆய்வகங்கள் மற்றும் தொடர்புடைய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்
Posted On:
30 JUL 2024 4:30PM by PIB Chennai
நாட்டில் சண்டிகர், தில்லி, போபால், புனே, கொல்கத்தா, குவஹாத்தி மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் 07 மத்திய தடய அறிவியல் ஆய்வகங்கள் உள்ளன.
நாட்டில் தடய அறிவியலுக்கான சூழலியல் உட்பட புலனாய்வு மற்றும் வழக்குத் தொடர்வதற்கான திறன்களை வலுப்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. தடயவியல் ஆய்வகங்கள் மற்றும் தடயவியல் உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு எடுத்து வரும் ஏராளமான நடவடிக்கைகளுள் குறிப்பிடத்தக்கவை பின்வருமாறு:
(i) போபால், குவஹாத்தி, புனே மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் உள்ள மத்திய தடய அறிவியல் ஆய்வகங்களை நவீனப்படுத்துதல்.
(ii) போதை மருந்துகள் மற்றும் மனநிலை மாற்றும் பொருட்கள், டிஜிட்டல் தடயவியல், மரபணு தடய பகுப்பாய்வு, தடய உளவியல் ஆகிய புதிய பிரிவுகளில் தடயவியல் உள்ளிட்ட மத்திய தடய அறிவியல் ஆய்வகங்களில் உள்ள இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை மேம்படுத்துதல்.
(iii) சண்டிகரில் உள்ள மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தில் அதிநவீன மரபணு பகுப்பாய்வு மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதியை அமைத்தல்.
(iv) ஹைதராபாத்தில் உள்ள மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தில் தேசிய சைபர் தடயவியல் ஆய்வகத்தை அமைத்து முக்கியமான வழக்குகளை ஆய்வு செய்தல்
(v) நாட்டில் உள்ள 117 தடய அறிவியல் ஆய்வகங்களை (மத்திய மற்றும் மாநில ஆய்வகங்கள்) இணைக்கும் மின்னணு தடயவியல் தகவல் தொழில்நுட்ப தளத்தை செயல்படுத்துதல்.
(vii) நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் தரமான மற்றும்பயிற்சி பெற்ற தடயவியல் மனிதவளத்தை உருவாக்குவதற்காக 2020-ஆம் ஆண்டு நாடாளுமன்ற சட்டத்தின் கீழ் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது.இதன் தலைமையகம் குஜராத்தின் காந்திநகரில் அமைந்துள்ளது.
(viii) நாட்டில் தடய அறிவியல் ஆய்வகங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளைக் குறைப்பதோடு, நாட்டில் தடயவியல் சோதனை உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், நாட்டில் தடயவியல் நிபுணர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், 2024-25 முதல் 2028-29 நிதியாண்டு வரை மொத்தம் ரூ.2254.43 கோடி நிதி ஒதுக்கீட்டில் "தேசிய தடயவியல் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்" என்ற திட்டத்திற்கு 19.06.2024 அன்று அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
(ix) மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு நிர்பயா நிதித் திட்டத்தின் கீழ் மரபணு பகுப்பாய்வு, இணைய தடயவியல் மற்றும் தடயவியல் ஆய்வகங்கள் தொடர்புடைய வசதிகளை வலுப்படுத்த உதவி வழங்கப்படுகிறது. 30 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு மொத்தம் ரூ.250.59 கோடி செலவில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
(10) தடயவியல் திறன்களை நவீனப்படுத்துவதற்கான ரூ.2080.5 கோடி நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், நடமாடும் தடயவியல் ஊர்திகள் உள்ளிட்ட இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை நவீனப்படுத்துவதற்கான உயர்தர தடய அறிவியல் வசதிகளை உருவாக்கவும், நாட்டில் தடய அறிவியலுக்கான கல்வி வசதிகளை விரிவுபடுத்துவதன் மூலம் இந்த ஆய்வகங்களில் பயிற்சி பெற்ற மனிதவளம் கிடைக்கவும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு உதவி கிடைக்கிறது.
(xi) "பெண்களின் பாதுகாப்பு" என்ற திட்டத்தின் கீழ், ஹைதராபாத்தில் உள்ள தேசிய சைபர் தடய அறிவியல் ஆய்வகத்தைப் போன்று, புனே, சண்டிகர், கொல்கத்தா, போபால், தில்லி மற்றும் குவஹாத்தி ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஆறு மத்திய நிறுவனங்களில் பிரத்யேக இணைய தடய அறிவியல் ஆய்வகத்தை நிறுவுவதற்கு ரூ.126.84 கோடி நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு. பண்டி சஞ்சய் குமார் இதனைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2039061
***
(Release ID: 2039061)
BR/KR
(Release ID: 2039549)
Visitor Counter : 45