திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
நாடு முழுவதும் புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு எடுத்துள்ள முன்முயற்சிகள்
प्रविष्टि तिथि:
29 JUL 2024 1:57PM by PIB Chennai
நாடு முழுவதும் புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக அரசின் அமைச்சகங்கள், துறைகள் ஆகியவை இந்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.
வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கும், முதலீடுகளை ஈர்ப்பதற்கும் வலுவான சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு 2016 ஜனவரி 16 அன்று ஸ்டார்ட் அப் இந்தியா என்னும் புத்தொழில் நிறுவன முன்முயற்சியைத் தொடங்கியது.
2024 ஆம் ஆண்டு ஜூன் 30-ந் தேதி நிலவரப்படி 1,40,803 நிறுவனங்களை புத்தொழில் நிறுவனங்களாக, தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை அங்கீகரித்துள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 9,238 நிறுவனங்களும், புதுச்சேரியில் 152 நிறுவனங்களும் புத்தொழில் நிறுவனங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
ஸ்டார்ட்அப் இந்தியா முன்முயற்சியின் கீழ் அரசின் தொடர்ச்சியான முயற்சிகள் காரணமாக 30 ஜூன் 2024 நிலவரப்படி அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கையை 1,40,803 ஆக அதிகரிக்க வழிவகுத்தது.
அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட்அப்கள் 15.5 லட்சத்துக்கும் மேற்பட்ட நேரடி வேலைகளை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்தும் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன.
ஸ்டார்ட்அப் கிராமிய தொழில்முனைவோர் திட்டம் என்பது தீன்தயாள் அந்தியோதயா திட்டம் – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் ஒரு துணை அங்கமாகும். கிராமப்புறங்களில் உள்ள தொழில்முனைவோருக்கு உள்ளூர் நிறுவனங்களை அமைக்க ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஸ்டார்ட்-அப் கிராமிய தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் ஆதரிக்கப்படும் நிறுவனங்களின் எண்ணிக்கை 4,834 ஆகும்.
கிராமப்புற தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் 3,02,825 நிறுவனங்களின் ஆதரவு மூலம் சுமார் 6,26,848 வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2038380
***
PKV/RR/KR
(रिलीज़ आईडी: 2038464)
आगंतुक पटल : 131