இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவிடமிருந்து புதிய ஊக்கத்தைப் பெறும் கிர்த்தி திட்டம்

Posted On: 18 JUL 2024 2:31PM by PIB Chennai

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் நெருங்கி வரும் நிலையில், மத்திய இளைஞர் நலன், விளையாட்டு, தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவின் தலைமையின் கீழ் அரசின் லட்சியமான கேலோ இந்தியா வளர்ந்து வரும் திறமைகளை அடையாளம் காணும் கிர்த்தி திட்டம் புதிய ஊக்கத்தைப் பெற உள்ளது. இந்த முன்முயற்சியின் இரண்டாம் கட்டத்தை அவர் புதுதில்லியில் நாளை தொடங்கி வைக்கிறார். முன்னதாக, கிர்த்தியின் முதல் கட்டம் இந்த ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி சண்டிகரில் தொடங்கப்பட்டது.

2024-25 நிதியாண்டில் அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த மாவட்டங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட திட்டத்திற்கு டாக்டர் மாண்டவியா முக்கியத்துவம் அளித்து வருகிறார்.  இந்தத் திட்டத்தின் மூலம்,  நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் விளையாட்டை வெகுஜன பங்களிப்பின் மூலம் கொண்டு செல்வதே இதன் நோக்கமாகும். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப இது அமைந்துள்ளது.

கிர்த்தி திட்டத்தின் முதல் கட்டத்தில், 70 மையங்களில் 3,62,683 பதிவுகள் பெறப்பட்டன.  இதிலிருந்து 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 51,000 மதிப்பீடுகள் செய்யப்பட்டுள்ளன. கேலோ இந்தியா போட்டிகளில் எப்போதும் சிறப்பாக செயல்பட்ட மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய இரண்டு மாநிலங்கள், முறையே 9168 மற்றும் 4820 மதிப்பீடுகளைப் பெற்றுள்ளன. அசாம் 4703 மதிப்பீடுகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

வில்வித்தை, தடகளம், பாட்மிண்டன், குத்துச்சண்டை, கால்பந்து, ஹாக்கி, கபடி, கோ-கோ, கைப்பந்து, பளுதூக்குதல், மல்யுத்தம் ஆகிய 11 விளையாட்டுகளில் ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளனர். தடகளம் (13804), கால்பந்து (13483) ஆகியவற்றில் அதிகபட்ச மதிப்பீடுகள் நடந்துள்ளன.

அறிவிக்கப்பட்ட திறன் மதிப்பீட்டு மையங்கள் மூலம் திறமையாளர்களை அடையாளம் காண ஆண்டு முழுவதும் நாடு முழுவதும் 20 லட்சம் மதிப்பீடுகளை நடத்துவதை கிர்த்தி நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அளவிலான சாரணர் மற்றும் மதிப்பீட்டுத் திட்டம் இந்தியாவில் முதன்முறையாகும், மேலும் 2036 ஆம் ஆண்டில் உலகின் முதல் 10 விளையாட்டு நாடுகளுக்குள் ஒன்றாகவும், 2047 க்குள் முதல் ஐந்து இடங்களுக்கும் நாடு இடம்பெறுவதை நோக்கமாக கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

விளையாட்டு வீரர்களை மையமாகக் கொண்ட இத்திட்டம் தகவல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட வெளிப்படையான தேர்வு முறையால் சிறந்து விளங்கும். ஒரு ஆர்வமுள்ள விளையாட்டு வீரரின் விளையாட்டு நுட்பத்தைக் கணிக்க செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்ட தரவு பகுப்பாய்வுகள் பயன்படுத்தப்படுகின்றன.

கிர்த்தி திட்டம் பற்றி:

நவீன தகவல் தொடர்பு தொழில்நுட்ப கருவிகள் மற்றும் உலகளாவிய சிறந்த நடைமுறைகளின் அடிப்படையில் ஒருங்கிணைந்த திறமைகளை அடையாளம் காணும் கட்டமைப்பை உருவாக்க கிர்த்தி (கேலோ இந்தியா வளர்ந்து வரும் திறமையை அடையாளம் காணுதல்) திட்டமிடப்பட்டுள்ளது. ஒரே மேடையில் அடிமட்ட திறமைகளை அடையாளம் காணும் முழு செயல்முறையையும் நெறிப்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

கிர்த்தி திட்டத்தின் அடிப்படை, விளையாட்டு வீரர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையைக் கொண்டதாகும். இதில் ஒவ்வொரு அடியிலும் திறமையை அடையாளம் காணும் செயல்முறை மிகவும் பரந்த அடிப்படையிலானது என்பதுடன்  அணுகக்கூடியதாகவும் உள்ளது.

*****

(Release ID: 2034000)

PKV/KV/KR

 

 


(Release ID: 2034005) Visitor Counter : 88