குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளை முடக்குவது அரசியலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் – குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர்

Posted On: 11 JUL 2024 7:35PM by PIB Chennai

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் அனைத்துக் கட்சிகளும் ஆக்கப்பூர்வமான விவாதம், உரையாடல்களில் ஈடுபட வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தின் செயல்பாட்டை முடக்குவது நமது அரசியலில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

மும்பையில் மகாராஷ்டிர சட்டமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களிடையே உரையாற்றிய திரு ஜக்தீப் தன்கர், நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் உள்ள மூத்த உறுப்பினர்கள், இளம் உறுப்பினர்களை வழிநடத்த வேண்டும் என்று கூறினார்.

நமது சட்டமன்ற, நாடாளுமன்ற மரபுகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய குடியரசுத் துணைத் தலைவர், அண்மையில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நடந்த சில சம்பவங்கள் வேதனையளிக்கிறது என்றார்.

 ஜனநாயகத்தின் கோயில்கள் தற்போது இடையூறுகளைச் சந்திப்பதாக அவர் தெரிவித்தார்.  கட்சிகள் தங்கள் உறுப்பினர்களிடையே ஆழ்ந்த ஒழுக்க உணர்வை வளர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். சிறப்பாகச் செயல்பட்ட உறுப்பினர்களுக்கு பாராட்டுப் பரிசுகளை அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கண்ணியமும் ஒழுக்கமும் ஜனநாயகத்தின் இதயமாகவும் ஆன்மாவாகவும் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார். ஜனநாயக விழுமியங்கள் தொடர்ந்து வளர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர், அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கி உயர்ந்த நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.  2047-ம் ஆண்டுக்குள் நமது நாடு வளர்ச்சி அடைந்த நாடாக மாறும் என்றும் இந்தப் பயணத்தில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னுதாரணமாக இருந்து வழிநடத்த வேண்டும் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் கேட்டுக் கொண்டார்.

***

(Release ID: 2032536)

VL/PLM/RR


(Release ID: 2032623) Visitor Counter : 66