சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

டெங்குக் காய்ச்சல் தடுப்பு, கட்டுப்பாடு குறித்த உயர்நிலை ஆய்வுக் கூட்டம்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஜே பி நட்டா தலைமையில் நடைபெற்றது

Posted On: 10 JUL 2024 4:16PM by PIB Chennai

பருவமழை தொடங்கியுள்ள நிலையில், டெங்குக்காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் டெங்கு நிலவரம் குறித்தும், நோய் தடுப்பு, கட்டுப்பாடு, மேலாண்மைக்கான தயார்நிலை குறித்தும் ஆய்வு செய்வதற்காக புதுதில்லியில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா தலைமையில் உயர்நிலை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நாடு தழுவிய அளவில் டெங்கு நிலைமை குறித்தும், மத்திய சுகாதார அமைச்சகத்தின் தயார்நிலை குறித்தும் அமைச்சருக்கு விளக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சரியான நேரத்தில் நோய் கண்டறிதல் ஆகியவற்றின் காரணமாக டெங்கு நோயாளிகளின் இறப்பு விகிதம் இந்த ஆண்டில் 0.1 சதவீதமாக குறைந்துள்ளதாக இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளதை சுட்டிக்காட்டினார். டெங்குவை கட்டுப்படுத்த தயார் நிலையில் இருக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். டெங்குவுக்கு எதிரான தடுப்பு, கட்டுப்பாடு, நோய் மேலாண்மை நடவடிக்கைகளை முடுக்கி விடவும் வலுப்படுத்தவும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

நோய்ப்பரவல் அதிகமாகப் பதிவாகும் மாநிலங்களில் தீவிரக் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு திரு ஜே பி நட்டா வலியுறுத்தினார். டெங்கு தடுப்பு தொடர்பாக மாநிலங்களுடன் இணைந்து பணியாற்றுமாறு மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.

டெங்கு நோய் தடுப்பு, நோய் அறிகுறிகள், சிகிச்சை நடைமுறைகள் குறித்த மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க, டெங்கு தடுப்பு, விழிப்புணர்வுக்காக 24 மணி நேரமும் செயல்படும்  உதவி தொலைபேசி  எண்ணை உருவாக்கி செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

***

PKV/PLM/AG/KR


(Release ID: 2032161) Visitor Counter : 99