கூட்டுறவு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

102-வது சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு, மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா குஜராத்தின் காந்திநகரில் கூட்டுறவின் மூலம் வளம் என்ற நிகழ்ச்சியில் உரையாற்றினார்


அடுத்த ஐந்து ஆண்டுகளில் கூட்டுறவுத் துறைக்கு வலுவான அடித்தளம் அமைக்கப்படும் - திரு அமித்ஷா

Posted On: 06 JUL 2024 5:01PM by PIB Chennai

குஜராத் மாநிலம் காந்திநகரில், 102-வது சர்வதேச கூட்டுறவு தினத்தையொட்டி இன்று (06-07-2024) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'சஹகர் சே சம்ரித்தி' (கூட்டுறவின் மூலம் வளம்) என்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார். குஜராத் முதலமைச்சர் திரு. பூபேந்திர படேல், கூட்டுறவு அமைச்சகச் செயலர் உள்ளிட்ட பல பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கூட்டுறவுத் துறையுடன் தொடர்புடைய அனைத்து மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் பல வழிகளில் இன்று மிகவும் முக்கியமான நாள் என்று மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் கூறினார். இந்த நாளில்தான் பிரதமர் திரு. நரேந்திர மோடி கூட்டுறவுத் துறைக்குத் தனி அமைச்சகத்தை உருவாக்கியதாக அவர் கூறினார். தனி அமைச்சகம் வேண்டும் என்ற கோரிக்கைக்கு முந்தைய அரசுகள் ஒருபோதும் செவிசாய்த்ததில்லை என்றும் திரு நரேந்திர மோடி பிரதமரான பிறகுதான், கூட்டுறவுத் துறைக்குத் தனி அமைச்சகத்தை நிறுவினார் என்றும் திரு அமித் ஷா கூறினார்.

கூட்டுறவு என்பது இந்தியாவில் ஒரு புதிய சிந்தனை அல்ல என்றும், நமது முன்னோர்கள் 125 ஆண்டுகள் பழமையான இந்தக் கொள்கையைப் பின்பற்றி வந்துள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார். விவசாயக் கடன் விநியோகம், சர்க்கரை உற்பத்தி போன்றவற்றில் கூட்டுறவுத் துறை முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ளதாக அவர் கூறினார். கிராமப்புற மற்றும் வேளாண் பொருளாதாரத்தில் கூட்டுறவுத் துறை மிக முக்கியமான பங்களிப்பை அளித்து வருவதாகவும் அவர் கூறினார். அடுத்த 5 ஆண்டுகளில் கூட்டுறவுக்கான வலுவான அடித்தளம்  அமைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

கூட்டுறவுத் துறைக்காக மத்திய கூட்டுறவு அமைச்சகம் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று திரு அமித் ஷா கூறினார். நாட்டில் மாவட்ட கூட்டுறவு வங்கி மற்றும் மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியம் இல்லாத எந்த மாவட்டமும் இருக்கக்கூடாது என்று அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்று அவர் தெரிவித்தார். இதைச் செய்வதன் மூலம் மட்டுமே கூட்டுறவுத் துறையை விரிவுபடுத்தி, ஒவ்வொரு கிராமப்புற மற்றும் ஏழை நபரையும் வளமாக மாற்ற முடியும் என்று அவர் குறிப்பிட்டார்இன்றும் கூட நாட்டில் 2 லட்சம் பஞ்சாயத்துகளில் ஒரு கூட்டுறவு நிறுவனம் கூட இல்லை என்று அவர் கூறினார். அடுத்த 5 ஆண்டுகளில் இந்த இரண்டு லட்சம் பஞ்சாயத்துகளில் தொடக்க வேளாண் கடன் சங்கங்களை உருவாக்க இலக்கு நிர்ணயித்து பணியாற்றுவதாக அவர் எடுத்துரைத்தார்.

2029-ம் ஆண்டில் சர்வதேச கூட்டுறவு தினம் கொண்டாடப்படும் நாளில், பிஏசிஎஸ் எனப்படும் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கம் இல்லாத ஒரு பஞ்சாயத்து கூட நாட்டில் இருக்காது என்று திரு அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் கனவை நனவாக்கவும், ஏழைகளுக்கு சேவை செய்ய கூட்டுறவு அமைப்புகளை முன்னெடுத்துச் செல்லவும் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அமைச்சர் திரு அமித் ஷா கேட்டுக் கொண்டார்.

***

PLM/KV

 



(Release ID: 2031264) Visitor Counter : 66