பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடக்கத்தையொட்டி பிரதமர் வெளியிட்ட அறிக்கையின் தமிழாக்கம்

Posted On: 24 JUN 2024 11:44AM by PIB Chennai

நண்பர்களே,

இன்று நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு பெருமை சேர்க்கும் நாள், பெருமிதம் ஏற்படுத்தும் நாள். சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக, நமது புதிய நாடாளுமன்றத்தில் இந்தப் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இப்போது வரை, இந்தச் செயல்முறை பழைய அவையில் நடந்து வந்தது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த நாளில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நான் அன்புடன் வரவேற்கிறேன், அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

பாரதத்தின் சாமானிய  மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதே நாடாளுமன்றத்தின் இந்த அவையின் நோக்கமாகும். புதிய உற்சாகம் மற்றும் உத்வேகத்துடன், புதிய வேகம் மற்றும் புதிய உயரங்களை அடைய, இது மிக முக்கியமான வாய்ப்பாகும். 2047-ம் ஆண்டுக்குள் 'மகத்தான' மற்றும் “வளர்ச்சியடைந்த” பாரதத்தை உருவாக்குவதற்கான குறிக்கோள், கனவுகள் மற்றும் தீர்மானங்களுடன், 18-வது மக்களவையின் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. உலகின் மிகப்பெரிய தேர்தல் பிரம்மாண்டமாகவும், புகழ்பெற்ற வகையிலும் நடத்தி முடிக்கப்பட்டது என்பது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை அளிக்கிறது. இது 140 கோடி மக்களுக்கு பெருமை அளிக்கிறது. இந்தத் தேர்தலில் 65 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் பங்கேற்றனர். இந்தத் தேர்தலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனென்றால் சுதந்திரத்திற்குப் பின்னர் இரண்டாவது முறையாக, நாட்டு மக்கள் ஒரு அரசுக்கு தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக சேவை செய்வதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளனர். 60 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு, மிகவும் பெருமைக்குரிய நிகழ்வாகும்.

நண்பர்களே,

நாட்டின் மக்கள் மூன்றாவது பதவிக்காலத்திற்கு ஒரு அரசை தேர்ந்தெடுக்கும்போது, அது, அதன் நோக்கங்களையும், கொள்கைகளையும் அவர்கள் ஏற்றுக்கொள்வதைக் குறிக்கிறது. மக்களுக்கான அதன் அர்ப்பணிப்பில் அவர்கள் தங்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளனர். அதற்காக எனது சக குடிமக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 10 ஆண்டுகளில், ஒரு பாரம்பரியத்தை நிறுவ நாங்கள் தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம். ஏனென்றால் ஒரு அரசை நடத்துவதற்கு பெரும்பான்மை அவசியம் என்றாலும், ஒரு நாட்டை ஆள ஒருமித்த கருத்து முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். எனவே, அனைவரின் ஒப்புதலுடன், அனைவரையும் அரவணைத்து, 140 கோடி மக்களின் நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்றி அன்னை பாரதிக்கு சேவை செய்வதே எங்களது தொடர்ச்சியான முயற்சியாக இருக்கும்.

அனைவரையும் அரவணைத்து, அரசியலமைப்பின் கட்டமைப்பிற்குள் முடிவுகளை விரைவுபடுத்துவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். 18-வது மக்களவையில், கணிசமான எண்ணிக்கையிலான இளம் எம்.பி.க்களைக் காண்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இந்திய பாரம்பரியம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை அறிந்தவர்களுக்கு 18 என்ற எண் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பகவத் கீதை 18 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. கர்மா, கடமை மற்றும் இரக்கம் பற்றிய செய்திகளை வழங்குகிறது. நமது மரபில் 18 புராணங்களும், உப புராணங்களும் உள்ளன. 18 இன் மூலவேர் 9 ஆகும். இது முழுமையைக் குறிக்கும் எண். 18 வயதில் வாக்களிக்கும் உரிமையைப் பெறுகிறோம். 18-வது மக்களவை பாரதத்தின் 'அமிர்த காலத்துடன்' ஒத்துப்போகிறது. இது அதன் உருவாக்கத்தை ஒரு நல்ல அடையாளமாக ஆக்குகிறது.

நண்பர்களே,

இன்று நாம் ஜூன் 24-ம் தேதி சந்திக்கிறோம். நாளை ஜூன் 25. நமது அரசியலமைப்பின் மாண்பை நிலைநிறுத்த தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்கும், பாரதத்தின் ஜனநாயக மரபுகளில் நம்பிக்கை கொண்டவர்களுக்கும் ஜூன் மாதம் 25-ம் தேதி மறக்க முடியாத நாள். இந்திய ஜனநாயகத்தில் ஒரு இருண்ட அத்தியாயம் எழுதப்பட்டதுடன் 50-ம் ஆண்டு நாளை தொடங்குகின்றது. அரசியலமைப்புச் சட்டம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு, கிழித்தெறியப்பட்டு, ஜனநாயகம் முற்றிலுமாக நசுக்கப்பட்டு, நாடே சிறைச்சாலையாக மாற்றப்பட்டதை இந்தியாவின் புதிய தலைமுறை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. அவசரநிலை அமலுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆன இந்த நிலையில், நமது அரசியலமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் பெருமையுடன் பாதுகாக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது. இதுபோன்ற கேலிக்கூத்து இனி ஒருபோதும் நடக்க அனுமதிக்கப்படாது என்று நாட்டு மக்கள் உறுதியேற்க வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி துடிப்பான ஜனநாயகத்தை உறுதி செய்யவும், சாமானிய மக்களின் கனவுகளை நிறைவேற்றவும் நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்.

நண்பர்களே,

நாட்டு மக்கள் மூன்றாவது முறையாக எங்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளனர். இது ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியாகும். இதன் மூலம், நமது பொறுப்பு மூன்று மடங்கு அதிகரிக்கிறது. இரண்டு முறை அரசை நடத்திய அனுபவத்துடன், மூன்றாவது பதவிக்காலத்தில் மூன்று மடங்கு கடினமாக உழைப்போம் என்று நான் இன்று நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன். இந்த புதிய இயக்கத்துடன் முன்னோக்கி நகர்ந்து, மூன்று மடங்கு முடிவுகளை நாங்கள் எட்டுவோம்.
மதிப்பிற்குரிய உறுப்பினர்களே,

நம் அனைவரிடமும் நாடு பெரும் எதிர்பார்ப்புகளை வைத்திருக்கிறது. இந்த வாய்ப்பை மக்கள் நலனுக்காகவும், சேவைக்காகவும் பயன்படுத்தி, மக்கள் நலனுக்காக சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். எதிர்க்கட்சிகளின் ஆக்கபூர்வமான பங்களிப்பையும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இதுவரை ஏமாற்றம் இருந்தபோதிலும், 18-வது மக்களவையில், எதிர்க்கட்சிகள் தங்கள் பங்கைத் திறம்பட ஆற்றி, நமது ஜனநாயகத்தின் மாண்பை நிலைநிறுத்தும் என்று நம்புகிறேன். இந்த எதிர்பார்ப்புகளை எதிர்க்கட்சிகள் நிறைவேற்றும் என்று நான் நம்புகிறேன்.

நண்பர்களே,

சாமானிய மக்கள் அவையில் விவாதத்தையும், விடாமுயற்சியையும் எதிர்பார்க்கிறார்கள். மக்கள் கோபம், நாடகம் மற்றும் தொந்தரவு ஆகியவற்றை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் பொருளைத் தேடுகிறார்கள். கோஷங்களை அல்ல. நாட்டிற்கு ஒரு நல்ல மற்றும் பொறுப்பான எதிர்க்கட்சி தேவை. 18-வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் சாமானிய மனிதனின் இந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய பாடுபடுவார்கள் என்று நான் நம்புகிறேன்.

நண்பர்களே,

'வளர்ச்சியடைந்த பாரதம்' என்ற நமது தீர்மானத்தை அடைவது நமது கூட்டுப் பொறுப்பாகும். மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தி, இந்தப் பொறுப்பை நாம் ஒன்றாக நிறைவேற்றுவோம். 25 கோடி மக்கள், வறுமையிலிருந்து விடுதலை பெற்றிருப்பது, பாரதத்தில் வெகு விரைவில் வறுமையை ஒழிப்பதில் நாம் வெற்றி பெற முடியும் என்ற புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இது மனிதகுலத்திற்கு ஒரு பெரிய சேவையாக இருக்கும். நமது நாட்டின் 140 கோடி மக்களும் கடினமாக உழைக்க எந்த முயற்சியையும் விட்டுவைக்கவில்லை. அவர்களுக்கு அதிகபட்ச வாய்ப்புகளை வழங்க வேண்டும். இதுதான் எங்களது ஒரே லட்சியம். நமது இந்த அவை தீர்மானங்களின் சபையாக மாறும். நமது 18-வது மக்களவையில் சாமானிய மனிதனின் கனவுகளை நனவாக்கும் தீர்மானங்கள் நிரம்ப வேண்டும்.

நண்பர்களே,

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் ஒரு முறை எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன், இந்த நாட்டு மக்களால் நமக்கு ஒப்படைக்கப்பட்ட புதிய பொறுப்பை அர்ப்பணிப்பு மற்றும் சிறப்புடன் நிறைவேற்ற நாம் அனைவரும் ஒன்றிணைவோம். மிக்க நன்றி நண்பர்களே.

பொறுப்பு துறப்பு:

இது பிரதமர் அறிக்கையின் தோராயமான மொழிப்பெயர்ப்பாகும்.

மூலஉரை இந்தி மொழியில் வெளியிடப்பட்டது.

 

***

MM/PKV/RS/KV


(Release ID: 2028284) Visitor Counter : 143