உள்துறை அமைச்சகம்

குஜராத்தின் அகமதாபாதில் ரூ. 36 கோடி செலவில் கட்டப்பட்ட 30 ஸ்மார்ட் பள்ளிகளை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்

Posted On: 21 JUN 2024 8:35PM by PIB Chennai

குஜராத் மாநிலம் அகமதாபாதில் 30 ஸ்மார்ட் பள்ளிகளை  மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். காந்தி நகரில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 புதிய கல்விக் கொள்கை 2020-ன் கீழ் அகமதாபாத் நகராட்சி பள்ளி வாரியத்தால் ரூ. 36 கோடி செலவில் 30 ஸ்மார்ட் பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழாவில் பேசிய திரு அமித் ஷா இந்த 30 நவீன பள்ளிகள் தொடங்கப்படுவதன் மூலம், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் புதிய கல்விக் கொள்கையின் மூலம் நேரடியாகப் பயனடைவார்கள் என்றார். அறிவு மற்றும் கல்வியின் ஒளி அவர்களின் வாழ்க்கையில் பரவும் என்றும் அமைச்சர் கூறினார்.

 இந்த ஸ்மார்ட் பள்ளிகளின் பாடத்திட்டத்தில் திறன் மேம்பாடு, தொழிற்பயிற்சி, டிஜிட்டல் அதிகாரமளித்தல் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். காந்திநகர் மக்களவைத் தொகுதி உறுப்பினரான தாம், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, காந்திநகரை மிகவும் வளர்ந்த நாடாளுமன்றத் தொகுதியாக மாற்ற உறுதிபூண்டிருப்பதாகக்  கூறினார்.

யோகா மூலம் ஒட்டுமொத்த உலகத்தின் நலனுக்கான வழியை ஏற்படுத்திய பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு சர்வதேச யோகா தினத்தில் நமது நன்றியைத் தெரிவிக்க வேண்டும் என்று திரு அமித் ஷா கூறினார். குஜராத் அரசும் யோகாவை ஊக்குவிக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார். 

****  

ANU/SMB/PLM/KV



(Release ID: 2027885) Visitor Counter : 17