தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

18-வது மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் ஆசிய பெண் திரைப்பட இயக்குநர்களுக்கு சிறப்பு கௌரவம்

Posted On: 17 JUN 2024 7:00PM by PIB Chennai

18-வது மும்பை சர்வதேச திரைப்பட விழா "ஆசிய பெண் திரைப்பட இயக்குநர்கள்" என்ற தலைப்பில் ஒரு சிறப்பு தொகுப்பை பெருமையுடன் வழங்குகிறது, இது திரைப்படத் துறையில் பெண்களின் சக்தி, விரிதிறன் மற்றும் படைப்பாற்றலைக் கொண்டாடுகிறது. வானொலி மற்றும் தொலைக்காட்சியில் பெண்களின் சர்வதேச சங்கத்தால் வழங்கப்பட்ட இந்தத் தனித்துவமான தொகுப்பு, அதிகாரமளித்தல், வெற்றியைத் தேடுதல், சமத்துவத்திற்கான தேடல் ஆகியவற்றின் கருப்பொருள்களை எடுத்துக்காட்டுகிறது.

"ஆசிய பெண் திரைப்பட இயக்குநர்கள்" தொகுப்பில் ஆசியா முழுவதிலுமிருந்து ஆறு பெண் இயக்குநர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் ஐந்து சிறந்த திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு படமும் கருத்து சுதந்திரம், சமூக சவால்கள் மற்றும் பெண்களின் வெல்ல முடியாத உணர்வு குறித்த தனித்துவமான கண்ணோட்டத்தை வழங்குகிறது.

இந்த சிறப்பு தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ள படங்கள் பின்வருமாறு:

1) டூயட்

எக்கின் இல்க்பேக், இடில் அக்கஸ் ஆகியோரால் இயக்கப்பட்ட, "டூயட்" மிஸ்ரா,டெப்னே என்ற நீச்சல் வீரர்களான இரண்டு நெருங்கிய நண்பர்களின் கதையைச் சொல்கிறது, அவர்கள் 2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறத் தவறியதையடுத்து, 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முயற்சிக்கின்றனர். அவர்களின் பயணம் ஒரு திறமையற்ற கூட்டமைப்பு, கொவிட் -19 தொற்றுநோய், பெண்கள், எல்ஜிபிடி பிரிவினரை ஒடுக்கும் சமூகத்தில் வாழ்வது உள்ளிட்ட சவால்கள் நிறைந்தது. இந்தப் படம் பார்வையாளர்களை உறுதியுடன் தடைகளை கடக்க ஊக்குவிக்கிறது.

இயக்குநர்கள் பற்றி:

· எகின் இல்பாக்: லண்டன் கலை பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான எகின் உதவி இயக்குநராக பணியாற்ற இஸ்தான்புல்லுக்கு சென்றார். அவரது "டூயட்" (2022), 59வது ஆண்டலியா கோல்டன் ஆரஞ்சு திரைப்பட விழாவில் சிறப்பு ஜூரி பரிசை வென்றது.

· இடில் அக்கஸ்: இஸ்தான்புல்லை தளமாகக் கொண்ட ஒரு சுதந்திரமான இயக்குநர் மற்றும் திரைப்பட தொகுப்பாளர். இவர் இஸ்தான்புல் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். இவர் முதன்மையாக தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் ஆவணப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

2) டெக்கீலா சன்செட்

ஜின்சுய் சாங் இயக்கியுள்ள இந்த படம் ஜியா என்ற 70 வயது மூதாட்டியைப் பின்தொடர்கிறது, அவர் டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்ட தனது கணவரை கவனித்துக்கொள்ளும் சுமையைச் சமாளிக்க ஆக்கபூர்வமான தீர்வுகளை கற்பனை செய்கிறார். ஜியாவின் பயணம் வயதான பெண்களின் போராட்டங்கள் மற்றும் கனவுகளின் ஒரு கசப்பான ஆய்வாகும்.

இயக்குநர் பற்றி:

· ஜின்சுய் சாங்: சீனாவின் ஷென்சென் நகரை சேர்ந்தவர் ஆவார். பாரம்பரிய மதிப்புகள் மற்றும் நவீன அபிலாஷைகளுக்கு இடையிலான சமநிலையை வழிநடத்தியுள்ளார். இவரது திரைப்படங்கள் சீன மற்றும் சீன-அமெரிக்க பெண்களின் அனுபவங்களை மையமாகக் கொண்டுள்ளன.

3) அமெரிக்கக் கனவு

ரெனீ ஷியின் இந்த அனிமேஷன் ஒரு பள்ளி துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிய ஒரு இளம் பெண்ணின் கதையைச் சொல்கிறது. இந்தப் படம் இதுபோன்ற துயரங்களால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தப்பிப்பிழைத்தவர்கள் அனுபவிக்கும் நீடித்த அதிர்ச்சியை ஆராய்கிறது.

இயக்குநர் பற்றி:

· ரெனீ ஷி: வர்ஜீனியாவின் ஃபேர்ஃபாக்ஸில் பிறந்த ரெனீ ஒரு உயர்நிலைப் பள்ளி மாணவி. வரைதல், அனிமேஷன் செய்தல், எழுதுதல் மற்றும் குரோச்சிங் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர். "அமெரிக்கக் கனவு" என்பது பள்ளி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் செலுத்தும் இதயப்பூர்வமான அஞ்சலியாகும்.

4) இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

கமிலா சாகின்ட்கன் இயக்கியுள்ள இந்தப் படம் கஜகஸ்தானின் புதிய அடையாளத்திற்கான தேடலின் உருவக ஆய்வாகும். சமூக மற்றும் அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், காதலை இழந்த பிறகு வாழ்க்கையில் அர்த்தத்தைக் கண்டுபிடிக்க போராடும் நடுத்தர வயது மனிதரான மாரட்டைப் பின்தொடர்கிறது.

இயக்குநர் பற்றி:

· கமிலா சாகின்ட்கன்: அல்மாட்டியைச் சேர்ந்த கதைசொல்லியான கமிலா, செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் சட்டப் பட்டம் பெற்ற பின்னர் கஜகஸ்தானுக்குத் திரும்பினார். இவர் இயக்குநர், எழுத்தாளர் மற்றும் ஸ்கிரிப்ட் மேற்பார்வையாளராக பணியாற்றியுள்ளார்.

5) முக்கோணம்

ஜினோ ஹாடி இயக்கிய "முக்கோணம்", தனிப்பட்ட முறையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான இரண்டு பெண்களுக்கு இடையிலான சிக்கலான இயக்கவியலை ஆராய்கிறது. அவர்களின் பாதைகள் குறுக்கிடுகின்றன. அவர்களின் சூழ்நிலைகளை சிக்கலாக்குகின்றன. அவர்களின் அனுபவங்களின் நுணுக்கங்களை முன்னிலைப்படுத்துகின்றன.

இயக்குநர் பற்றி:

· ஜினோ ஹாடி: சுலைமானியாவில் பிறந்த ஜினோ, சுலைமானியா பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் பின்னர் சினிமாவில் பட்டம் பெற்றார்.

"ஆசிய பெண் திரைப்பட இயக்குநர்கள்" தொகுப்பு சினிமாவில் பெண்களின் குரல்களின் சக்தி மற்றும் சமத்துவத்திற்கான அவர்களின் தேடலுக்கு ஒரு சான்றாகும். இந்தப் படங்கள் மகிழ்விப்பது மட்டுமல்லாமல், வெவ்வேறு கலாச்சார பின்னணியைச் சேர்ந்த பெண்களின் கண்களால் உலகைப் பார்க்க பார்வையாளர்களை ஊக்குவிக்கின்றன.

***

SRI/PKV/RR/KV



(Release ID: 2026173) Visitor Counter : 20